இருப்பிடம்
காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், தீவுத்தெரு - சொளுக்கார் தெரு - முத்துவாப்பா தைக்கா தெரு ஆகிய தெருக்களை அரவணைத்தவாறு பரந்து விரிந்து அமைந்துள்ளது மஸ்ஜிதுல் உஸ்ஃபூர் - குருவித்துறைப் பள்ளிவாசல்.
இப்பள்ளியின் பெயர் மற்றும் வரலாறு குறித்து, பள்ளியின் துணைத்தலைவர் நஹ்வீ செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், இப்பள்ளியில் 30 வருடங்களாக இமாமாக இருந்து தொழுகையை வழிநடத்திய - முன்னாள் இமாம் டி.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் பேஷ்இமாம் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:-
பெயர்க்காரணம்:
நெல்லை மாவட்டத்தின் குருவித்துறை என்ற பகுதியைச் சார்ந்த தனவந்தரின் பொருட்செலவில் கட்டப்பட்ட பள்ளி இது என்பதால், அவர் சார்ந்த ஊரின் பெயரே இப்பள்ளியின் பெயராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரலாறு:
பூவாற்றில் அடங்கியிருக்கும் அல்லாமா நூஹ் வலிய்யுல்லாஹ் அவர்களின் புதல்வரும், காயல்பட்டணம் கீழ்ப்பகுதியில் அமைந்திருக்கும் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் வடபுறமாக அடக்கம் பெற்ற மஹான் செய்யித் அஹ்மத் அல்லாமா பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் தந்தையின் தந்தையுமான - இப்பள்ளிவாசலின் கீழ்ப்பகுதியில் அடங்கியிருக்கும் அல்-ஆரிஃப் பில்லாஹ் செய்யித் அஹ்மத் வலிய்யுல்லாஹ் அவர்களின் பெருமுயற்சியால் சற்றொப்ப (215) இருநூற்றுப் பதினைந்து வருடங்களுக்கு முன், ஹிஜ்ரீ (1214) ஆயிரத்து இருநூற்றுப் பதினான்காம் வருடத்தில் கட்டப்பட்டது இப்பள்ளிவாசல்.
இன்று போல விஞ்ஞான முன்னேற்றம் இல்லாத அந்தக் காலத்தில், நெல்லை மாவட்டம் குருவித்துறை என்ற ஊரைச் சார்ந்த தனவந்தரான நவாப் ஒருவர், தன் பாசமிக்க மனைவி பிரசவ வலியால் மிகவும் அவதியுற்று, வாழ்வா - சாவா? என்று போராடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே செல்கிற (மாட்டு) வண்டிகள் எழுப்பும் ஒலி அவரது மனைவிக்கு இன்னும் அமைதியின்மையைத் தந்துவிடக்கூடாது என்பதற்காக, தனது ஊழியர்கள் மூலம் அவற்றை வேறு வழியில் திருப்பிக்கொண்டிருந்தாராம்.
அப்போது, அவ்வழியே வந்த மஹான் அல்-ஆரிஃப் பில்லாஹ் செய்யித் அஹ்மத் வலிய்யுல்லாஹ் அவர்கள் பூவாற்றில் அடங்கப்பெற்றுள்ள தம் தந்தை வேதப்புராண வேந்தர் அல்லாமா நூஹ் வலிய்யுல்லாஹ் அவர்களின் மண்ணறையை ஜியாரத் செய்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது, அவர்களின் மாட்டு வண்டியும் வழி திருப்பப்படுகிறது.
மாற்றுவழியில் திருப்பப்படுவதற்கான காரணத்தை மஹான் அவர்கள் விசாரிக்கையில், நவாபின் மனைவி பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த விபரம் அவருக்குத் தெரிவிக்கப்படுகிறது. “கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்!” என்று கேட்டுப்பெற்று, அதனை ஓதிக்கொடுத்து, “இதை அவளிடம் கொடுங்கள்! அழகிய ஆண் குழந்தையை சுகமாகப் பெற்றெடுப்பாள்...” என்று கூறிவிட்டு, அனுமதி பெற்று தமது வண்டியை அதே வழியிலேயே ஓட்டச் செய்து ஊர் வந்து சேர்ந்துவிட்டார்களாம்.
மஹான் அவர்கள் சொன்னது போலவே தன் மனைவி எவ்வித சிரமமுமின்றி சுகப்பிரவசத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கவும், நவாபிடம் மஹான் அவர்களின் சந்திப்பு குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டதாம்... வியப்பும், ஆர்வமும் மேலோங்கிய நவாப் அவர்கள், வழிநெடுக விசாரித்தவாறே சென்று, கடைசியில் மஹான் அவர்கள் வசிக்கும் காயல்பட்டினம் கடற்கரையையொட்டிய கிழக்குப் பகுதியை வந்தடைந்தாராம்...
“மிகவும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த என் மனைவியின் பிரசவம் தங்களது பிரார்த்தனையால் சுகமாக நடந்துள்ளது... இதற்காக நான் பெரிய அளவில் கைமாறு செய்ய ஆசைப்படுகிறேன்... உங்களுக்குத் தேவையானதைக் கேளுங்கள்...” என்று கேட்டாராம்...
“எனக்கென தனியாக எந்தத் தேவையுமில்லை... இப்பகுதியில் இறைவனைத் தொழ பள்ளிவாசல் ஒன்றுதான் தற்போது அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது...” என்று மஹான் அவர்கள் கூற, அவர் தன் முழு பொருட்செலவில் பள்ளியொன்றைக் கட்டிக்கொடுத்ததாகவும், அதுவே இந்த குருவித்துறைப் பள்ளிவாசல் என்றும் முன்னோர்கள் மூலம் செவிவழிச்செய்தியாக நாங்கள் அறிந்துகொண்டோம்.
மேலும் அந்த நவாப், பள்ளியின் முதல் தொழுகையை தாம் முன்னின்று வழிநடத்த (இமாமத் செய்ய) அனுமதி கேட்டு தொழுகையை நடத்துகையில், திருக்குர்ஆனை ஓதும்போது தவறு ஏற்பட்டுள்ளது... அன்று முதல் இன்று வரை தராவீஹ் தொழுகையில் இப்பள்ளிவாசலில் புதிதாகத் தொழுவிக்கும் யாராக இருந்தாலும் அவருக்கு சிறு தவறேனும் ஏற்பட்டுவிடுவது வழமையாக நடக்கிறது... இதுதான் பள்ளிவாசல் இங்கு உதயமான சரித்திரம்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பள்ளிவாசல் வளாகத்தில் சுமார் 40 மாணவர்களைக் கொண்டு, ஆலிம் மத்ரஸா நடத்தப்பட்டுள்ளது. காலஞ்சென்ற அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் அதன் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்கள். இவர்கள் ஒரே காலத்தில் பள்ளியின் இமாமாக, ஆசிரியராக (முதர்ரிஸ்), மேலாளராக, கணக்கராக செயலாற்றியுள்ளார்கள்.
காலஞ்சென்ற ஹாஃபிழ் எஸ்.எஸ்.எம்.ஷெய்கு அலீ, அஹ்மத் ஆலிம், கோஸ் முஹம்மத் தவ்லத் என்பவரின் மகன் ஷேக் சுலைமான், ஏ.கே.எஸ்.மவ்லானா (ஆசிரியரின் மகன்) மற்றும், ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம், இ.எஸ்.புகாரீ ஆலிம், எஸ்.எல்.அஹ்மத் ஆலிம், எஸ்.இ.மரைக்கார் ஆலிம் உள்ளிட்டோர் இந்த நாற்பது பேரில் அடங்குவர்.
இப்பள்ளிவாசல் வளாகத்தின் கீழ்ப்பகுதியில், பள்ளியை உருவாக்கிய வாக்கிஃபீன்கள், மஹல்லாவிற்குட்பட்ட மார்க்க சட்ட வல்லுனர்கள், மஹான்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஜமாஅத் எல்லை:
காயல்பட்டினம் கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, மரைக்கார் பள்ளித் தெரு, அப்பாபள்ளித் தெரு ஆகியவற்றின் வடபாதி பகுதிகளும், தீவுத்தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு முழுமையும் இப்பள்ளியின் மஹல்லா ஜமாஅத் எல்லையாகும். இப்பள்ளி கட்டப்படுவதற்கு முன்பு இப்பகுதிகள் அனைத்தும் காயல்பட்டினம் மரைக்கார் பள்ளிவாசல் மஹல்லாவிற்குட்பட்டதாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிர்வாகம்:
பள்ளியின் தலைவராக மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஜுமானீ,
துணைத்தலைவராக நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம்,
இணைச்செயலாளர்களாக ஹாஜி எஸ்.எம்.கபீர், ஹாஜி எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாயீல்,
துணைச் செயலாளராக ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாயீல் ஆகியோரை உள்ளடக்கி 25 செயற்குழு உறுப்பினர்களையும் கொண்டுள்ளது இப்பள்ளி நிர்வாகம்.
சார்பு நிறுவனங்கள்:
இப்பள்ளியின் கிழக்கில் அமைந்துள்ள மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை, மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் தர்ஹா, மஹான் ரூடவக்கியப்பா வலிய்யுல்லாஹ் தர்ஹா ஆகிய நிறுவனங்கள் இப்பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ளவையாகும்.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் என்ற பெயரில், பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கான விடுமுறை கால மார்க்கக் கல்விக் கூடம் மற்றும் சுமார் 60 மாணவர்களைக் கொண்ட ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா (திருக்குர்ஆன் மனனப்பிரிவு) ஆகியன செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளியின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள இளைஞர் ஐக்கிய முன்னணி சங்கம் (ஒய்.யு.எஃப்.) இப்பள்ளி நிர்வாகத்தைச் சார்ந்ததாகும். எனினும் இதற்கென தனி நிர்வாகம் உண்டு. இச்சங்கத்தின் மூலம், மஹல்லாவிற்குட்பட்ட பிரச்சினைகள் பல சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. மஹல்லா மற்றும் நகர்நலம் நாடி பல்வேறு கோரிக்கைகள் மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக அவை நிறைவேற்றப்பட்டும் உள்ளன.
தமிழக அரசை ஆட்சி செய்த முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரை வரவழைத்து, பல்வேறு கோரிக்கைகளை அவர்களிடம் நேரடியாக முன்வைத்த சரித்திரங்கள் இச்சங்கத்திற்கு உண்டு.
இமாம் - பிலால்:
மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ இப்பள்ளியின் இமாமாகவும்,
சதக் இப்றாஹீம் இப்பள்ளியின் பிலாலாகவும் உள்ளனர்.
நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுவிக்கும் இமாமாக, ஹாஃபிழ் ஜே.எம்.ஷேக் அப்துல் காதிர் உள்ளார்.
தொழுகை நேரம்:
ரமழான் காலங்களில் இப்பள்ளியில் இஷா தொழுகை இரவு 09.00 மணிக்கும், தராவீஹ் தொழுகை 09.15 மணிக்கும் நடத்தப்படுகிறது.
வழமைச் செயல்பாடுகள்:
இப்பள்ளியில் எல்லாக்காலங்களிலும் ஐவேளைத் தொழுகை இமாம் ஜமாஅத்துடன் நடத்தப்பட்டு வருகிறது.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை ஸுப்ஹு தொழுகைக்குப் பின் புர்தா மஜ்லிஸ் நடத்தப்பட்டு வருகிறது.
ரபீஉல் அவ்வல் மாதத்தின் முதல் 12 தினங்களில் நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்,
ரபீஉல் ஆகிர் மாதத்தின் முதல் 11 தினங்களில் மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீதும் புகழ்மாலை பாடும் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டு வருகிறது.
ஷஃபான் மாத பாதியில், நிஸ்ஃப் ஷஃபான் (பராஅத் இரவு) சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
பள்ளி வளாகத்தில், காலை - மாலை வேளைகளில், சிறுவருக்கான திருக்குர்ஆன் ஓதல் பயிற்சி வகுப்பு (மக்தப்) நடத்தப்பட்டு வருகிறது.
ஹஜ் பெருநாளையொட்டி, மஹல்லாவாசிகளின் சார்பாக கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுக்கப்படுகிறது.
இரண்டு பெருநாட்களின் முன்னிரவுகளிலும் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடத்தப்படுகிறது.
ஆண்டுக்கொருமுறை ஹஜ் பெருநாளையொட்டி, இப்பள்ளி வளாகத்தில் அடக்கமாகியிருக்கும் மஹான் ஹாமித் லெப்பை ஆலிம் அவர்கள் பெயரில் கந்தூரி நடத்தப்படுகிறது.
ரமழான் சிறப்பு செயல்பாடுகள்:
ரமழான் காலங்களில் நோன்பு துறப்பதற்காக ஊற்றுக்கஞ்சி வினியோகம் தினமும் மாலை 04.30 மணிக்கு நடைபெறுகிறது. சுமார் 150 குடும்பங்கள் இந்த ஊற்றுக்கஞ்சியைப் பெற்றுச் செல்கின்றனர்.
தினமும் மாலை இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இரவில் தராவீஹ், வித்ர் தொழுகை நடத்தி, அதனைத் தொடர்ந்து மஹல்லாவாசிகளின் இணைந்தமர்வு நடத்தப்பட்டு, தேனீர் வழங்கப்படுகிறது. பின்னர் வித்ரிய்யா மஜ்லிஸ் நடத்தப்படுகிறது.
இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகள்:
நடப்பாண்டு தினசரி இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 60 முதல் 100 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு நகரின் வழமையான பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகிறது.
தினமும் கறிகஞ்சி அல்லது காய்கறி கஞ்சியும், எப்போதாவது பிரியாணி கஞ்சி அல்லது வெண்கஞ்சியும் தயாரிக்கப்படுகிறது.
கிடா கறிகஞ்சிக்கு ரூபாய் 11,000 தொகையும்,
கோழி கறிகஞ்சிக்கு ரூபாய் 8,000 தொகையும்,
காய்கறி கஞ்சிக்கு ரூபாய் 7,500 தொகையும்,
வெண்கஞ்சிக்கு ரூபாய் 6,000 தொகையும்
செலவாகிறது. தினசரி ரமழான் செலவுகள் அனைத்தும் இதில் உள்ளடக்கம்.
இஃப்தாரின்போது வழங்கப்படும் வடை வகைக்கென தினமும் தனியாக நன்கொடை வசூலிக்கப்படுகிறது.
கஞ்சி ஏற்பாட்டுக்குழு:
நடப்பாண்டு கஞ்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக ஹாஜி எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ், துணைத்தலைவராக ஹாஜி குளம் எம்.ஐ.மூஸா நெய்னா ஆகியோரும்,
உறுப்பினர்களாக,
எம்.கே.செய்யித் முஹம்மத்,
ஹாஜி இசட்.ஏ.சுல்தான் லெப்பை,
ஹாஜி கூபா என்.டி.ஷேக் சுலைமான் (யான்பு),
ஹாஜி சொளுக்கு ஏ.ஜே.முஹ்யித்தீன் அப்துல் காதிர்,
எம்.இ.எல்.புகாரீ ஆகியோர் சேவையாற்றுகின்றனர். |