ஷவ்வால் மாத அமாவாசை செப்டம்பர் 8 புதன் அன்று - இங்கிலாந்து நேரப்படி காலை 10:30 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம்
மாலை 4:00 மணி. அன்று பசிபிக் கடல் பகுதியில் மட்டும் வெறுங்கண்ணால் பிறையை காண வாய்ப்பு உண்டு.
காயல்பட்டணத்தில் சூரியன் அன்று மாலை 6:22 மணிக்கு மறைகிறது. சுமார் 3 மணி நேர வயதை அடைந்த பிறை, சூரியன் மறைவதற்கு 9 நிமிடத்திற்கு முன்னரே மறைந்து விடும். சவுதியிலும் இதே நிலையே.
பிறை பிறப்பை கணக்கிட்டு கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளவர்க்கு செப்டம்பர் 9 அன்று நோன்பு பெருநாள் ஆகும். அன்று காலை
காயல்பட்டணத்தில் பெருநாள் தொழுகை நடத்த சிலர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் ஐரோப்பாவிலிருந்து செயல்படும் European Council for Fatwa and Research (ECFR) அமைப்பும் செப்டம்பர் 9 அன்று நோன்பு பெருநாள் என அறிவித்துள்ளது. பார்க்கவும் இங்கே.
செப்டம்பர் 9 வியாழன் அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:21 மணிக்கு மறைகிறது. சுமார் 27 மணி நேர வயதை அடைந்த பிறை, அன்று சூரியன் மறைந்த 41 நிமிடத்திற்கு பிறகு - மாலை 7:02 மணிக்கு - மறைகிறது. ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, தென்கிழக்கு ஆசியா, இலங்கை, தென் மற்றும் மேற்கு இந்தியா, அரேபிய தீபகற்பம், ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்க கண்டங்களின் அநேக பகுதிகளில் வெறுங்கண்ணுக்கு பிறை தென்படும்.
உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் அதனை எடுத்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளவர்க்கு செப்டம்பர் 10 அன்று அநேகமாக நோன்பு பெருநாள் இருக்க வாய்ப்புள்ளது. காயல்பட்டணத்திலும் செப்டம்பர் 9 அன்று பிறை தென்பட வாய்ப்பு உள்ளதால் - பிறை அந்தந்த பகுதிகளில் காணப்பட வேண்டும் என்ற கருத்தில் (காயல்பட்டணத்தில்) உள்ளவர்க்கும் செப்டம்பர் 10 அன்று நோன்பு பெருநாள் இருக்க வாய்ப்புள்ளது.
அமெரிக்காவிலிருந்து செயல்பட்டுவரும் Fiqh Council of North America (FCNA) மற்றும் Islamic Society of North America (ISNA) அமைப்புகள் செப்டம்பர் 10 நோன்பு பெருநாள் என அறிவித்துள்ளன. சென்ற ஆண்டு வரை European Council for Fatwa and Research (ECFR), Fiqh Council of North America (FCNA) மற்றும் Islamic Society of North America (ISNA) அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து, ஒரே தேதியில் பெருநாட்களை அறிவித்து வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இருப்பினும் செப்டம்பர் 8 அன்றே பிறை காணப்பட்டுவிட்டதாக தகவல் வந்து விட்டால் உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் அதனை எடுத்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளவர்க்கு செப்டம்பர் 9 அன்றே நோன்பு பெருநாள் வந்துவிடும்.
மேலும் தற்போது நிலவிவரும் மழை சூழலால் செப்டம்பர் 9 அன்று பிறை காயல்பட்டண சுற்று வட்டாரத்தில் வெறுங்கண்ணுக்கு தென்படாவிட்டால் - பிறை அந்தந்த பகுதிகளில் காணப்பட வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்க்கு செப்டம்பர் 11 அன்று நோன்பு பெருநாள் இருக்கும்.
செப்டம்பர் 10 வெள்ளி அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:21 மணிக்கு மறைகிறது. சுமார் 51 மணி நேர வயதை அடைந்த பிறை, அன்று சூரியன் மறைந்த 91 நிமிடத்திற்கு பிறகு - மாலை 7:52 மணிக்கு - மறைகிறது.
தகவல்:
காயல்பட்டணம் வானவியல் சங்கம்
|