காயல்பட்டினம் அரிமா சங்கம் மற்றும் நகர பொதுமக்கள் சார்பில், காயல்பட்டினம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி வட்டாரத்தைச் சார்ந்த ஏழைக்குடும்பங்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் அமைந்துள்ளது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளிவாசல். சுமார் 65 முஸ்லிம் குடும்பங்களை சுற்றுவட்டாரமாகக் கொண்டுள்ள இப்பள்ளிவாசலை, காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் அமைந்துள்ள ஜுவல் ஜங்ஷன் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் கே.அப்துர்ரஹ்மான், அந்நிறுவனத்தைச் சார்ந்த கோமான் மீரான், டேக் அன் வாக் சப்பல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஹாஜி முத்துச்சுடர் என்.டி.இஸ்ஹாக் லெப்பை ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் தற்சமயம் பராமரித்து வருகின்றனர்.
இப்பகுதியைச் சார்ந்த ஏழை-எளிய முஸ்லிம் குடும்பங்களுக்கு பெருநாள் புத்தாடைகள் வழங்க வேண்டுமென பள்ளி நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டு, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த வகைக்காக, காயல்பட்டினத்தைச் சார்ந்த பொதுமக்கள் பலரும், காயல்பட்டினம் அரிமா சங்கத்தின் சார்பிலும் உடையுதவிகள் வழங்கினர். இதற்கான நிகழ்ச்சி நேற்று (05.09.2010) மாலை 5.30 மணிக்கு, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், காயல்பட்டினம் குத்பா பெரிய - சிறய பள்ளிவாசல்களின் தலைவர் ஹாஜி ஷேக் மதார், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை செயலாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர். காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஐ.ரஃபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் தாருத்திப்யான் நெட்வொர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஹாஃபிழ் அப்துல் காதர் வாஃபிக் தமிழாக்கத்துடன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். காயல்பட்டினம் அரிமா சங்க பொருளாளர் வி.டி.என்.அன்சாரீ வரவேற்றுப் பேசினார். காயல்பட்டினம் அரிமா சங்கத்தின் சமூக நலப்பணிகள் குறித்து அதன் துணைச் செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னாலெப்பை சுருக்கவுரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட காழீ மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர், கற்புடையார் பள்ளி வட்டம் தூய செல்வமாதா ஆலயத்தின் பங்குத்தந்தை இருதயராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அரிமா சங்கத்தின் 324 B4 மாவட்ட ஆளுநர் பி.ஓ.பி.ராமசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினரை அரிமா சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தில்லை சிதம்பரம் அறிமுகப்படுத்திப் பேசினார்.
பின்னர், மேடையிலிருந்த அனைவருக்கும் பொன்னாடை போர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சார்ந்த ஏழை-எளியோருக்கு பெருநாள் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி செயலாளர் முத்துச்சுடர் ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர், ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் செயலாளர் சாளை ஷேக் ஸலீம், சாகுபுரம் அரிமா சங்க பொருளாளர் முத்துப்பாண்டி, அதன் செயலாளர் ராஜேந்திரன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் ஏழை-எளியோருக்கு புத்தாடைகளை வழங்கினர்.
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி துணைச் செயலாளர் கோமான் மீரான் நன்றி கூற, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ துஆவுடன் விழா நிறைவுற்றது.
விழாவில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த தனவந்தர்கள், பிரமுகர்கள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக் கலந்துகொண்டனர்.
படங்கள்:
ஜே.ஏ.லரீஃப்,
தைக்கா தெரு, காயல்பட்டினம். |