நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து, பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஹாங்காங்கில், 10.09.2010 அன்று ஈதுல் ஃபித்ர் - ஈகைத் திருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளை முன்னிட்டு, எமது ‘காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங்‘ அமைப்பின் சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, அன்றிரவு மஃரிப் தொழுகைக்குப் பின் EAST KCR பூங்காவில் நடைபெற்றது.
இறைமறையை இதயத்தில் ஏந்திய இளம் ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் நுஹைம் கிராஅத்துடன் நிகழ்வுகள் துவங்கின.
பேரவை துணைத்தலைவர் ஜனாப் எம்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். தொடர்ந்து ஜனாப் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் சிற்றுரையாற்றினார்.
பேரவையின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் சேவைகள் குறித்து பேரவைத் தலைவர் ஜனாப் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் விளக்கிப் பேசினார். இளஞ்சிறாருக்கான ஓதுதல், பாடுதல் உள்ளிட்ட குறுநிகழ்ச்சிகளை ஜனாப் எம்.செய்யித் அஹ்மத் தொகுத்தளித்த்தோடு, நன்றியுரையாற்றினார்.
ஜனாப் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் துஆவுடன் இவ்வினிய ஒன்றுகூடல் நிகழ்ச்சி இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரியவர்கள், தாய்மார், சகோதர-சகோதரியர், இளைஞர்கள், மாணவ-மாணவியர், அன்புக் குழந்தைகள் திரளாகக் கலந்துகொண்டு, தமக்கிடையில் அன்பையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொண்டனர்.
அனைவருக்கும் பேரவை சார்பில் மதுரமான ரோஸ்மில்க் குளிர்பானமும், லட்டு & ஜிலேபி அடங்கிய சுவைமிக்க இனிப்புப்பொதியும் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சித் துளிகள்...
காயலர்கள் கலந்துகொள்ளும் இப்படியொரு பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இன்ஷாஅல்லாஹ், வரும் ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் மற்றும் வருடங்களிலும் இதுபோன்று பேரவை ஏற்பாடு செய்யும்.
இந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகக் கூறினர். கலந்துகொள்ள இயலாதவர்கள், வரும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஆவலாக உள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் சார்பாக,
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன்,
(பொருளாளர்)
படங்கள்:
M.செய்யித் அஹ்மத்,
(துணைத்தலைவர்)
ஹாஃபிழ் R.தைக்கா மஹ்மூத்,
ஹாங்காங். |