காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியை இடித்துக் கட்ட அப்பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, பள்ளி பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியின் வரலாற்றுச் சுருக்கம்
அல்லாஹ்விற்காக ஒரு பள்ளியைக் கட்டிக் கொடுப்பவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில்ஒ ரு வீட்டைக் கட்டிக் கொடுக்கிறான். (நபிமொழி)
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது பெரிய குத்பா பள்ளி நம் நகரின் மத்திய பகுதியில், மரியாதைக்குரிய மஹான் மர்ஹூம் முஹம்மது ஹல்ஜீ மற்றும் நாதாக்களால் (ஹிஜ்ரீ 228) கி.பி. 843இல் கட்டப்பட்டு, ஜும்ஆ தொழுகையும் நடத்தப்பட்டது. பிறகு மரியாதைக்குரிய மஹான் மர்ஹூம் சுல்தான் ஜமாலுத்தீன் அவர்களால் (ஹிஜ்ரீ 737) கி.பி. 1336இல் விஸ்தீரணம் செய்யப்பட்டது. பிறகு நம் முன்னோர்கள் சுமார் கி.பி.1370இல் மீண்டும் இப்பள்ளியை விஸ்தீரணம் செய்தார்கள்.
இப்போது இப்பள்ளி சாலை மட்டத்தை விட 3 அடி ஆழம் தாழ்ந்து இருக்கிறது. இதனால் நிலத்தழயில் நீர்க்கசிவு ஏற்பட்டு, அஸ்திவாரம் சேதம் அடைந்திருக்கிறது. மழைக் காலங்களில் பள்ளிக்குள் தண்ணீர் புகுந்து, தரை மட்டத்தை விட சுமார் 3 அடி உயரம் தண்ணீர் தேங்கி, பள்ளியின் கட்டிடத்தை பலவீனப்படுத்தி வருகிறது. இதனால் சில சமயம் ஐந்து வேளை தொழுகை, ஜும்ஆ தொழுகையைக் கூட தொழ முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. கட்டிடத்தின் சில பகுதிகள் சாய்ந்து இருப்பதால் உயிர்ச்சேதம் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது. இப்பள்ளியின் கம்பீரமான கட்டிடம் இப்போது பார்ப்பதற்கே பரிதாப நிலையில் இருப்பதை எண்ணி வருந்துகிறோம்.
இந்நிலையில் இருந்து இப்பள்ளியைப் பாதுகாக்க பாரம்பரியமிக்க பல கட்டிட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது. இக்கட்டிடத்தைப் பார்வையிட்டு பரிசோதித்த அனைவரும் இக்கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து விட்டதாகவும், பராமரிப்பு செய்து சரிசெய்ய முடியாது என்றும் வாய்மொழியாகவும், எழுத்து மூலமும் தந்துவிட்டனர். ஆகையால் இக்கட்டிடத்தை இடித்து, புதிய கட்டிடம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டதால், பெரிய குத்பா பள்ளியின் வளாகத்தில் 24.05.2011 செவ்வாய்க்கிழமை காலை சுமார் 11.00 மணிக்கு பெரிய குத்பா பள்ளியின் நிர்வாகக் குழுக் கூட்டம் கூடியது.
இக்கூட்டத்தில், பெரிய குத்பா பள்ளியின் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டப்படுவதால் ஏற்படும் சாதக - பாகதங்களை அலசி ஆராய்ந்து, இறுதியாக புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டுமென ஏகமனதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. (அல்ஹம்துலில்லாஹ்.)
மரியாதைக்குரிய மஹான்களால் பெரிய குத்பா பள்ளி கருங்கல்லால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை விட அதிகமாகியும் தளராமல், தலை நிமிர்ந்து நின்றதை நம்மால் பார்க்க முடிந்தது.
இதுபோன்று கருங்கல்லால் கட்டப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், சகோதர சமுதாயத்தின் வழிபாட்டுத் தலங்கள், மன்னர்களின் கோட்டைகள், மறைந்தவர்களின் கல்லறைகள், மணி மண்டபங்கள், மருத்துவமனைகள், தபால் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சட்டமன்ற - பாராளுமன்ற வளாகங்கள், நீதிமன்ற வளாகங்கள் என பல வரலாற்றுச் சின்னங்கள் ஆயிரம் ஆண்டுகளை விட அதிகமாகியும் இன்று வரை எந்தச் சேதமும் இல்லாமல் இருப்பதை உலகத்தின் பல பகுதிகளிலும் பரவலாகப் பார்க்க முடிகிறது.
ஆகையால், வருங்காலங்களில் வரலாற்றுச் சின்னங்களைக் கட்டும்போது தொலைநோக்கோடு சிந்தித்து, எந்த பராமரிப்புச் செலவும் இல்லாத - ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாக உழைக்கும் கருங்கல்லால் கட்டிடங்களைக் கட்டி, நமது சந்ததியினர் நம்மை வாழ்த்திட வழிசெய்ய வேண்டுகிறோம்.
ஆயிரம் காலத்துப்பள்ளி என்று அழைக்கப்படும் நமது பெரிய குத்பா பள்ளியை, பார்ப்பதற்கு பரவசமூட்டும் வகையில் பிரம்மாண்டமாக கருங்கல்லால் கட்ட நாடியுள்ளோம். (இன்ஷாஅல்லாஹ்!)
ஆகையால், அனுபவம் நிறைந்த பெரியோர்களே! அன்புத் தாய்மார்களே! பாசத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! வாரி வழங்கும் வள்ளல்களே! உங்களின் உழைப்பு, ஆலோசனை, பொருள் ஆகியவற்றை தாராளமாகத் தந்து, அல்லாஹ்வின் அருளை அடைந்திட அன்புடன் வேண்டுகிறோம்.
வரலாற்றச் சிறப்பு மிக்க பெரிய குத்பா பள்ளியின் புதிய கட்டிடம் வசதியாகவும், உறுதியாகவும், அழகாகவும் அமைய அல்லாஹ் அருள் புரிவானாக, ஆமீன். வஸ்ஸலாம்.
இவண்,
பெரிய குத்பா பள்ளியின் கட்டிடக் குழுவினர்,
காயல்பட்டினம்.
29.07.2011
Contact:
N.M.H.Mohamed Mohiadeen B.A. (CS),
Jalaliya Nikah Majlis,
312/A, Saduckai Street,
Kayalpattanam Post - 628 204,
Thoothukudi District, Tamilnadu, South India.
Cell: 0091 - 99401 80354, 0091 - 90251 51551
Email: thegrandmasjid@gmail.com
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29.07.2011 வெள்ளிக்கிழமையன்று, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில், ஜும்ஆ தொழுகை நிறைவுற்ற பின், குத்பா பெரிய பள்ளி கட்டிடக் குழுவின் சார்பில் இந்த அறிக்கை வாசிக்கப்பட்டது.
முன்னதாக, 17.07.2011 அன்று காயல்பட்டினம் பிரதான வீதியிலுள்ள, செய்யித் இப்றாஹீம் ஆலிம் கட்டிடத்தில், புதிதாக கட்டப்படவுள்ள குத்பா பெரிய பள்ளியின் மாதிரி தோற்றம் கணினி, அசைபட உருப்பெருக்கி துணையுடன் திரையில் காண்பிக்கப்பட்டு, அதுகுறித்து கட்டிடக்கலை வல்லுனருடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|