காயல்பட்டின பள்ளிக்கூட மாணவ, மாணவியரிடம் அறிவியல் துறையில் ஆர்வத்தை வளர்க்கும் முகமாக
காயல் நற்பணி மன்றம், தம்மாம் - அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடத்தும் பரிசு திட்டத்தினை
சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. சிறந்தப்பள்ளிக்கூடமாக தேர்வாகும் பள்ளிக்கூடத்திற்கு வழங்கப்படும் இப்பரிசுக்கொண்டு, காயல்பட்டின
பள்ளிக்கூட மாணவ, மாணவியர்களுக்கு இடையிலேயான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டியினை சிறந்தப்பள்ளியாக தேர்வாகும்
அப்பள்ளிக்கூடம் நடத்த வேண்டும்.
துவக்க ஆண்டான இவ்வாண்டில் இப்பரிசினை காயல்பட்டினம் சுபைதா மேல்நிலைப்பள்ளி வென்றது. தம்மாம்
காயல் நற்பணி மன்றத்துடன் இணைந்து கடந்த ஜூலை 28 (வியாழன்) - சுபைதா மேல்நிலைப்பள்ளி, நகர பள்ளிக்கூடங்களுக்கு இடையிலேயான
மாபெரும் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அம்மாபெரும் கண்காட்சியின் ஓர் அங்கமாக - சென்னை பிரெசிடென்சி கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியரும், மக்கள் தொலைக்காட்சியில்
- மக்கள் எளிதாக புரிந்துக்கொள்ளும் முறையில் ஏன்? எதற்கு? எப்படி? போன்ற அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்துபவருமான பேராசிரியர் சுப்பைய பாண்டியனின் அறிவியலுடன் விளையாட்டு (FUN WITH SCIENCE) நிகழ்ச்சி - ஜூலை 28
(வியாழன்) அன்று காலை 11:00 மணி அளவில், ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியினை தம்மாம் வாழ் காயல் மாணவர் ஷேய்க் ரயான் - குர்ஆன் வசனங்களுடன் துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சிக்கு சுபைதா மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெஸிம்மா தலைமை தாங்கி, வரவேற்ப்புரை ஆற்றினார். தம்மாம் காயல் நற்பணி
மன்றத்தின் செயற்க்குழு உறுப்பினர் இம்தியாஸ் புஹாரி முன்னிலை வகித்தார்.
பேராசிரியர் சுப்பைய பாண்டியனின் சிறு விளக்க உரையினை தொடர்ந்து கண்காட்சியின் அறிவியலுடன் விளையாட்டு (FUN WITH
SCIENCE) பகுதி துவங்கியது.
பேராசிரியர் - அவருடன் இணைந்து நிகழ்ச்சிக்கு துணைபுரிந்த அவரின் பி.ஹெச்.டி. மாணவர் கோவிந்தனுடன் - பல அறிவியல் சோதனைகளை
அனைவரும் எளிதாக புரிந்துக்கொள்ளும் விதத்தில் செய்து காண்பித்தார்.
பார்வையாளர் பகுதியில் இருந்த மாணவர்களையும் சோதனைகளில் பங்குப்பெற செய்து பேராசிரியர் சுப்பைய பாண்டியன் உற்சாகப்படுத்தினார்.
இடையில் மாணவர்களிடம் சில கேள்விகளும் பேராசிரியரால் கேட்கப்பட்டது.
நகைச்சுவை கலந்த செயல்முறை விளக்கம் - ப்ரொஜெக்டர் மூலம் மாணவியர் பகுதியில் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர பள்ளிக்கூடங்களான சுபைதா மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,
முஹைதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, எல்.கே. மேல்நிலைப்பள்ளி, சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மற்றும் எல்.கே. மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏழு பள்ளிக்கூடங்களின் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் கலந்துக்கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இவ்வரிய நிகழ்ச்சி மதியம் 1:15 மணி அளவில் நிறைவுற்றது. அதனை தொடர்ந்து அறிவியல் கண்காட்சி
துவங்கியது (தனிச்செய்தியாக விபரங்கள் வெளியிடப்படும்). |