"பாடத் திட்டங்கள், பாடப் புத்தகங்களை ஆய்வு செய்து, அடுத்த ஆண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவோம்' என சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை தள்ளிவைக்கும் வகையில், சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டத் திருத்தத்தை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு அப்பீல் செய்தது. தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் சங்கம் மற்றும் தனியார் பள்ளிகளும் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தன. தங்கள் தரப்பு கருத்துக்களையும் கேட்கக் கோரி, பெற்றோர்கள் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை நீதிபதிகள் பன்சால், தீபக்வர்மா, சவுகான் அடங்கிய "பெஞ்ச்' விசாரித்து வருகிறது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் நேற்று வாதாடியதாவது: ஐகோர்ட் உத்தரவை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்யும் விதத்திலும், தரமான கல்வியை அளிப்பதற்காக பாடத் திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்களை ஆய்வு செய்யும் விதத்திலும், இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. சமூக நலன், தரமான கல்வி வழங்கும் விதமாக பொதுவான கல்வி முறையை கொண்டு வர வேண்டும் என்பது தான் சட்டத்தின் நோக்கம்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுகள் பல, நிறைவேற்றப்படவில்லை. தமிழக சட்டப்படி அமைக்கப்பட்ட மாநில பொது பள்ளி கல்வி வாரியம், மத்திய சட்டத்தில் கூறியுள்ள கல்வி ஆணையத்தின்படி இல்லை. பொதுப் பாடத்திட்டம், பாடப் புத்தகங்களை நிர்ணயிக்க தகுதிவாய்ந்த அமைப்பு இல்லை.
தற்போதைய முறையில், படைப்பாற்றல் திறனுக்கு வாய்ப்பில்லை. பாடத் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக, சட்டத் திருத்தம் அவசியமாகிறது. மத்திய சட்டப்படி, பாடத் திட்டம் இல்லை. பல்வேறு குறைபாடுகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சுட்டிக் காட்டியுள்ளது.
சமச்சீர் கல்விக்கு ஆதரவாக அரசு உள்ளது. பாடத் திட்டம், பாடப் புத்தகங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதன்பின், அடுத்த ஆண்டில் அமல்படுத்துவோம். தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் கொள்கைக்கு உட்பட்டு பாடத் திட்டம் இல்லை. தரமான கல்வியை வழங்குவதற்காக, ஏராளமான திருத்தங்கள், மாற்றங்கள் செய்ய வேண்டியதிருப்பதால், இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை பயன்படுத்த முடியாது. இவ்வாறு மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடினார். இன்றும் வழக்கறிஞர்களின் வாதம் தொடர்கிறது.
நன்றி:
தினமலர் (03.08.2011) |