மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்பட்டு 2012 ஆகஸ்டு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் முற்றிலுமாக நீக்கப்படும் என்று பேரவையில் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
ஊரக, நகர்ப்புறப் பகுதிகளில் மூன்று மணி நேரமாக இருந்த மின்வெட்டு 1-2-2011 முதல் இரண்டு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மின் சக்தியின் உற்பத்திக்கேற்ப இந்த மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்பட்டு 2012 ஆகஸ்டு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் முற்றிலுமாக நீக்கப்படும்.
2011-12-ஆம் ஆண்டில் புதிய திட்டங்களால் கிடைக்கும் மின் உற்பத்தி திறன் 3,280 மெகாவாட் ஆக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மின் விநியோகத்தில் கணிசமான முன்னேற்றம் இருக்கும்.
மாநில அரசு, வடசென்னை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை உற்பத்தி, உடன்குடி, எண்ணூர் இணைப்பு, குந்தா விசை சேமிப்பு ஆகிய மின் உற்பத்தி திட்டங்களை விரைவுப்படுத்தும்.
இத்திட்டங்களின் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் கூடுதலாக 5,100 மெகாவாட் மின்சக்தி கிடைக்கும். 2011- 12-ஆம் ஆண்டில் ரூ.4,800 கோடி செலவில் 800 மெகா வாட் உடன்குடி விரிவு திட்டம், ரூ.9,600 கோடி செலவில் 1,600 மெகாவாட் உப்பூர் அனல் மின்திட்டம், ரூ.3,600 கோடி செலவில் 40 ஆண்டு பழமை வாய்ந்த எண்ணூர் அனல் மின் இயந்திரத்திற்கு பதிலாக 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம், ரூ.4,800 கோடி செலவில் 800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலை உற்பத்தி திட்டம் ஆகியவை தொடங்கப்படும்.
இதனால் அரசாலும், பல்வேறு கூட்டு முயற்சிகளாலும் மொத்தம் ரூ.22,800 கோடி முதலீட்டில் 3,800 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாக கிடைக்கும். தமிழ்நாடு மின் உற்பத்திப் பகிர்மானக் கழகம் ரூ.40 ஆயிரம் கோடி கடன் சுமையாலும், ரூ.38,000 கோடி அளவிற்கான திரண்ட நட்டத்தாலும் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
இந்த அரசு பதவி ஏற்ற போது நிதி ஆதாரங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தால், பெரும்பாலான பட்டிகளுக்கு பணம் வழங்கப்படாத நிலையே இருந்தது. இவ்வரசானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதி நிலையை சீராக்குவதற்கு குறுகிய கால நடவடிக்கையாக நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கும், நீண்டகால அடிப்படையில் முழுமையாக நிதி நிர்வாகத்தை சீரமைப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
காற்று மூலமான எரிசக்தி உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு வசதியாகவும், எரிசக்தியை மின் நிலைய இணைப்பு வரை அனுப்புவதற்கு தோவான கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
கடலோர காற்று எரிசக்தி உட்பட காற்று மூலமான மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க இந்த அரசு உரிய வழிகளைக் கண்டறியும். ஆண்டுக்கு 20 ஆயிரம் தெருவிளக்குகள் வீதம் 1000 கிராமங்களில் ரூ.248 கோடி செலவில் சூரிய சக்தியில் எரியும் ஒரு லட்சம் தெரு விளக்குகளை அமைக்கும் ஒரு மகத்தான திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்.
இதில் மாநில அரசின் பங்கு ரூ.191.60 கோடியாகவும், மத்திய அரசின் மானியம் ரூ.56.40 கோடியாகவும் இருக்கும். 2011-12-ஆம் ஆண்டில் 200 கிராமங்களில் 20 ஆயிரம் தெரு விளக்குகள் சூரிய எரிசக்தியை பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படும். இதற்கென ஆகும் செலவான ரூ.49.60 கோடியில் மத்திய அரசு ரூ.11.20 கோடியும், மாநில அரசு ரூ.38.40 கோடியும் பகிர்ந்து கொள்ளும்.
இதே போன்று 2011- 12-ஆம் ஆண்டில் சூரிய சக்தியுடன் கூடிய 60 ஆயிரம் பசுமை வீடுகள் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கட்டப்படும். மத்திய அரசின் ரூ.48.60 கோடி மானியம் உள்பட சுமார் ரூ.180 கோடி செலவில் பசுமை வீடுகளுக்கு சூரிய எரிசக்தி வழங்கும் பணியினை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும்.
அரசு ஏற்கனவே உறுதியளித்தவாறு பசுமை எரிசக்தியை ஊக்குவிக்க அரசு, தனியார் பங்களிப்பு முறையில் திறந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளைப் பின்பற்றி 50 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பூங்கா ஒன்றை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் அமைக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
www.chennaionline.com
|