மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் 2004 ஆம் ஆண்டு தேசிய ஆலோசனை குழு (National Advisory Council) என்ற பெயரில் ஒரு
அமைப்பினை உருவாக்கியது.
நாடு எதிர்நோக்கியுள்ள - வறுமை, வகுப்பு கலவரம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் மத்திய அரசாங்கத்திற்கு
ஆலோசனை வழங்கவும், அவசியம் எனில் புது சட்டங்கள் வகுக்க துணை புரியவும் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் நாட்டின் பிரதான
சிந்தனையாளர்கள், சட்ட வல்லுனர்கள் என பலர் அங்கம் வகித்தனர். 2008 ஆம் ஆண்டு செயல் இழந்த இவ்வமைப்பு, மார்ச் 2010 ஆம் ஆண்டு
மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
இவ்வமைப்பின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி பணியாற்றுகிறார். அவர் தவிர எம்.எஸ்.சுவாமிநாதன், அருணா
ராய், பராஹ் நக்வி, ஹர்ஷ் மந்தர் உட்பட 13 பேர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவ்வுறுப்பினர்களை கொண்டு பல துணைக்குழுக்கள் (Working Groups) அமைக்கப்பட்டுள்ளன. அதில் உணவு பற்றாக்குறை, வகுப்புக்கலவரம், கல்வி உரிமை, சிறுபான்மையினர் பிரச்சனை போன்ற துணைக்குழுக்கள் அடங்கும்.
வகுப்புவாதக்கலவரம் குறித்த துணைக்குழு கடந்த ஜூலை 2010 இல் - (வகுப்புக்கலவரத்திற்கு எதிராக) புதிய சட்டம் வகுக்க - மாதிரி மசோதாவை
தயாரிக்க முடிவு செய்தது. இக்குழுவுக்கு ஆலோசனை வழங்க - ஆலோசனை குழுவும், சட்டம் வகுக்கும் குழுவும் அமைக்கப்பட்டன.
தயாரிப்பு நிலையிலேயே மக்கள் கருத்து பெற மாதிரி மசோதா அவ்வப்போது வெளியிடப்பட்டது. கடைசியாக - சென்ற மாதம் - மாதிரி மசோதா (Draft Bill) - Prevention of Communal and Targeted Violence (Access to Justice and Reparations) Bill, 2011 - என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இது நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மசோதாவின் சாராம்சம் வருமாறு:-
=> வகுப்புவாத மற்றும் திட்டமிட்ட வன்முறை என்பது என்ன என்பதை இம்மசோதா வரையகுக்கிறது. சிறுபான்மையினர் என்ற காரணத்திற்காகவே
திட்டமிட்ட தாக்குதல்கள் என முடிவு செய்யப்படும் வன்முறைகளுக்கே இச்சட்டம் பொருந்தும். சிறுபான்மை என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும்
வேறுபடும். மேலும் மத சிறுபான்மை தவிர, மொழி சிறுபான்மையினரும் இதில் அடங்குவர்
=> செயல்புரிய மறுத்த/தவறாக செயல்புரிந்த அரசு அதிகாரிகள் / மக்கள் சேவகர்கள் (Public Servants) தண்டனைக்குரியவர்கள்
=> வன்முறைகளை கையாளவேண்டிய பொறுப்பு, தவறியதால் உண்டாகும் விளைவுகள் - கீழ் மட்ட அதிகாரிகளுக்கு மட்டும் அன்றி, அவர்களை
கட்டுப்படுத்தும் மேல்மட்ட அதிகாரிகள்/மக்கள் சேவகர்களுக்கும் உண்டு
=> தவறு செய்யும் மக்கள் சேவகர்கள் மேல் வழக்குப்போட 30 நாட்களுக்குள் அரசு சம்மதம் தரவில்லை என்றால் 30 நாட்களுக்கு பிறகு தானாகவே
நடவடிக்கைகள் துவக்கப்படும்
=> இச்சட்டத்தினை அமல்படுத்த மத்திய (National Authority for Communal Harmony, Justice and Reparation (NACHJR)) மற்றும் மாநில
(State Authority for Communal Harmony, Justice and Reparations (SACHJR)) அளவில் வலுவான கட்டமைப்பு உருவாக்கப்படும். அதில்
அனைத்துக்கட்சியினரும் அங்கம் வகிப்பர்
=> இந்திய சட்டங்களில் வன்முறை என தற்போது அங்கிகரிக்கப்பட்ட செயல்களை தவிர புதிதாக சில வன் செயல்களும் சேர்க்கப்பட்டுள்ளன
=> பாதிக்கப்பட்டவருக்கு - அவர் எளிதாக வழக்கினை சந்திக்க - கூடுதல் உரிமைகள் வழங்கப்படுகின்றன (உதாரணமாக -அரசிடம் இருந்து ஆவணங்கள் கோர)
=> பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த 30 நாட்களுக்குள், பாதிக்கப்பட்டவர்க்கு நிதியுதவி வழங்கவேண்டும் என்றும், உயிர் இழப்பு சம்பவங்களில் - நஷ்ட ஈடு 15 லட்ச ரூபாய்க்கு குறையாமல் வழங்கப்பட வேண்டும் என்றும் இம்மசோதா கூறுகிறது
இம்மாதிரி மசோதாவை முழுமையாக காண இங்கு அழுத்தவும்
இது குறித்த - இம்மசோதாவினை தயாரித்த குழுவின் விளக்கத்தை காண இங்கு அழுத்தவும் |