சமச்சீர் கல்வி வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், சுப்ரீம் கோர்ட் தள்ளிவைத்துள்ளது. பாடப் புத்தகங்களை வினியோகிக்க, வரும் 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை தள்ளிவைக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு, மெட்ரிக் பள்ளிகள் அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தன. அப்பீல் மனுக்களை நீதிபதிகள் பன்சால், தீபக் வர்மா, சவுகான் அடங்கிய "பெஞ்ச்' விசாரித்து வருகிறது.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடியதாவது: சமச்சீர் கல்வி திட்டம் வருவதற்கு முன், தமிழகத்தில் மாநில பாடத் திட்டம், ஓரியண்டல், மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் என நான்கு பாடத் திட்டங்கள் இருந்தன. சமச்சீர் கல்வி சட்டத்தின்படி, பொதுப் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு அமல்படுத்தப்பட்டது. மற்ற மாணவர்களுக்கு தற்போது இணைப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அரசானது, திருவள்ளுவர், திருக்குறளுக்கு எதிரானது அல்ல. பிஞ்சு மனதில் தனது சொந்த கொள்கையை வளர்க்கும் விதமாக, பாடங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சுய விளம்பரத்தை, புகழ் பாடுவதை தான் இந்த அரசு எதிர்க்கிறது. கருணாநிதியின் மூலம், திருக்குறளை முன்னிலைப்படுத்தினால் அது ஆட்சேபனைக்குரியது.
மாணவர்களிடம் தனது அரசியல் செல்வாக்கை வளர்க்கும் விதமாக, பாடப் புத்தகங்களை முன்னாள் முதல்வர் பயன்படுத்தியுள்ளார். பொறுப்பான அரசு என்கிற முறையில், இதை அனுமதிக்க முடியாது. குறைபாடுகளை களைந்த பின், சமச்சீர் கல்வியை அடுத்த ஆண்டு அமல்படுத்துவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. உலக அளவிலான மாணவர்களுடன் போட்டியிடும் வகையில், தமிழக மாணவர்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் முதல்வரின் நோக்கம். குறைகளை சரிசெய்து தரத்தை உயர்த்துவதற்காகத்தான், சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதை தள்ளிவைத்துள்ளார்.
சட்டம் கொண்டு வருவதற்கு மாநில சட்டசபைக்கு தகுதி இருக்கிறபோது, அந்த சட்டம் செல்லாது என நோக்கத்தின் பின்னணிக்குள் ஐகோர்ட் செல்ல முடியாது. கூடுதல் புக்லெட் அச்சடித்து மூன்று மாதங்களில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தினால், கல்வி முறையில் குழப்பம் ஏற்படும். இவ்வாறு மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் வாதாடினார். ஆறு நாட்கள் நடந்த விசாரணைக்குப் பின், இந்த அப்பீல் மனுக்கள் மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் தள்ளிவைத்தது. பாடப் புத்தகங்களை வழங்குவதற்கான கால அவகாசத்தை வரும் 10ஆம் தேதி வரை, சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது.
நன்றி:
தினமலர் (05.08.2011) |