தேசிய ஆலோசனை குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவினை தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கண்டித்துள்ளார். நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் சமர்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் இம்மசோதா குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் இம்மசோதா ஆபத்தானது என்றும் இதனை அனைத்து கட்சிகளும், சமூக தலைவர்களும், சிந்தனையாளர்களும், ஊடகங்களும், பொது மக்களும் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா தெரிவித்துள்ள ஆட்சேபனைகளின் சாராம்சம் வருமாறு:-
=> இச்சட்டத்தின் மூன்றாம் பிரிவு (Section 3) ஒரு சமூகத்திற்கு எதிரான சூழல் (Hostile environment against a group) என்பதனை விளக்கும் போது - அதனை ஒருவரின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமான செயல் என கூறுகிறது. இது தெளிவான விளக்கம் அல்ல. ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில் மாறுபடக்கூடியது (Subjective). ஆகவே துஷ்பிரயோகத்திற்கு வாய்ப்பு உண்டு
=> பகுதிகள் 7 முதல் 12 வரை குற்றங்களை விவரிக்கின்றன. அதில் பகுதி 8 - விஷமத்தனமான பிரச்சாரத்தினை (hate propaganda) விளக்கும் விதம் (resonably construed to demonstrate) ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில் மாறுபடக்கூடியது (Subjective). ஆகவே துஷ்பிரயோகத்திற்கு வாய்ப்பு உண்டு
=> பகுதி 13 மற்றும் 18 - அதிகாரி/மக்கள் சேவகர் கடமை தவறுதல் குறித்து விளக்கும் போது - வகுப்பு கலவரம் உண்டாவதற்கு முன்னரே அது குறித்த ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து, அதனை தடுக்க முயற்சி எடுக்காமல் இருப்பது - கடமைப்புரிய தவறிய செயல் (Deriliction of duty) என வர்ணிக்கிறது. இவ்விதி - கீழ்மட்ட அதிகாரி மேல் மேல்மட்ட அதிகாரி தவறாக பழி சுமத்த வழிவகுக்கும்
=> பகுதி 14 - கீழ்மட்ட அதிகாரியின் தவறுக்கு மேல்மட்ட அதிகாரியினையும் பொறுப்பாக்குகிறது. மேல்மட்ட அதிகாரிக்கு கீழ்மட்ட அதிகாரியை கண்காணிக்கும் பொறுப்பு உள்ளது உண்மையே. இருப்பினும் பொறுப்புகள் குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லாத காரணங்களால் இது தவறான விதியாகும்
=> பகுதி 20 - மாநிலங்களின் உரிமையில் தலையிடுகிறது. திட்டமிட்ட வகுப்பு கலவரம் ஏற்படும் மாநிலம் - உள்நாட்டு குழப்பத்தில் உள்ளது (Internal Disturbance) - என வர்ணிக்கப்படுவதால், அரசியல் சாசனத்தின் 355 பிரிவு (ஆட்சி கலைப்பு) - அம்மாநில அரசின் தலையின் மேல் தொங்கிக்கொண்டிருக்கும் வால் போன்றாகிவிடும். இது மாநில சுயாட்சிக்கு எதிரானதாகும்
=> மேலும் மத்திய ஆணையகம் (National Authority for Communal Harmony, Justice and Reparation) - மாநில அதிகாரிகளுக்கு நேரடி உத்தரவு பிறப்பிக்க இச்சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இதுவும் மாநில சுயாட்சிக்கு எதிரானதாகும்
=> இது குறித்த வழக்குகளில் மாநில அரசு தன்னிச்சையாக அரசு வழக்கறிஞர்களை நியமிக்க இம்மசோதா அனுமதிக்கவில்லை. மாறாக நியமனம் குறித்த கருத்து முதலில் மக்களிடம் பெற வேண்டும் எனவும் இச்சட்டம் கூறுகிறது
=> மேலும் இச்சட்டம் - கீழ்மட்ட அதிகாரிகள் தங்களின் மேல் அதிகாரிகளின் உத்தரவுகளை புறக்கணிக்க (Mutiny) வழிவகுக்கிறது
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் முழு அறிக்கையை காண இங்கு அழுத்தவும்
|