தம்மாம் காயல் நற்பணி மன்றத்துடன் இணைந்து கடந்த ஜூலை 28 (வியாழன்) - காயல்பட்டினம் சுபைதா மேல்நிலைப்பள்ளி, நகர பள்ளிக்கூடங்களுக்கு இடையிலேயான மாபெரும் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
துவக்கமாக அன்று காலை 11:00 மணி முதல் மதியம் 01:15 மணி வரை சென்னை பிரெசிடென்சி கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியரும், மக்கள் தொலைக்காட்சியில் - மக்கள் எளிதாக புரிந்துக்கொள்ளும் முறையில் ஏன்? எதற்கு? எப்படி? போன்ற அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்துபவருமான பேராசிரியர் சுப்பையா பாண்டியனின் “அறிவியலுடன் விளையாட்டு” (FUN WITH SCIENCE) நிகழ்ச்சி ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்துக்கொண்டனர். முழு விபரம் காண இங்கு அழுத்தவும்.
அதனைத் தொடர்ந்து - மதியம் 01:15 மணி அளவில் - பள்ளிக்கூட மாணவர்களுக்கு இடையிலேயான கண்காட்சி மற்றும் போட்டியினை பேராசிரியர் சுப்பையா பாண்டியன் துவக்கிவைத்தார். இக்கண்காட்சி ஜலாலியா நிக்காஹ் மஜ்லிசின் துணை அரங்கத்தில் (Mini Hall) நடைபெற்றது.
நகரின் ஏழு பள்ளிக்கூடங்களில் இருந்து சுமார் 35 அணிகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாணவியர்கள் தரப்பில் 32 அணிகளும், மாணவர் தரப்பில்
39 அணிகளும் பங்கேற்றது மாணவர்களின் ஆர்வத்தை வெளிபடுத்தியது. 71 அணிகளில் மொத்தம் 159 மாணவர்கள் இடம் பெற்றனர்.
ஜலாலியா துணை அரங்கம் நிரம்பி வழிந்த சூழலில் - அரங்கைச் சுற்றி அமைந்துள்ள இடங்களில் மாணவர்கள் தங்கள் படைப்புகளை பார்வைக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு விருந்தினரும், போட்டியின் நீதிபதியுமான பேராசிரியர் சுப்பைய பாண்டியன் 71 கண்காட்சி பொருட்களையும் ஆழமாக பார்வையிட்டார். மாணவர்களிடம் அவர்களின் படைப்புகளை பற்றி கேள்விகள் கேட்ட பேராசிரியர், அவர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.
மாணவர்கள் பார்வைக்கு வைத்திருந்த சில படைப்புகளின் தலைப்புகள் வருமாறு:- Atomic Power Station, Bio Gas Plant, Causes of Global
Warming, Magic Letters, Solar System, Volcano, Sandal Formation, Inertia, Periscope, Solar based Automatic Street Light, Water Level Indicator, Sand Clock,
Temperature Control Fan, New Kayal 2020, Invertor, Dry Ice Bubbles, Hydraulic Power, Lungs model, Acid Rain, Causes of
Cancer, One Rupee Mobile Charger, Mobile based Garden Pump Control
கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவியர் படைப்புகளின் அணிவகுப்பு ....
கண்காட்சியில் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்த மாணவ, மாணவியருக்கு அரங்கிலேயே மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்களின் படைப்புகளை நிகழ்ச்சியின் நீதிபதி கண்ட பின் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெற்றி பெற்ற அணியினரின் விபரம் தனிச்செய்தியாக வெளியிடப்படும். |