காயல்பட்டினம் குத்துக்கல் தெரு ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் நடத்திய மீலாது விழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, திரளான பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார். விழா நிகழ்வுகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் குத்துக்கல் தெரு, முஹ்யித்தீன் பள்ளி அருகில் செயல்பட்டு வரும் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பில், உத்தம நபிகளின் உதய தின விழா, அமைப்பின் 27ஆம் ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழாக்கள் ஜூலை 22, 23 தேதிகளில் (வெள்ளி, சனி) நடைபெற்றது.
துவக்க நாளன்று காலை 07.00 மணிக்கு ஏழை சிறுவர்களுக்கு இலவசமாக கத்னா செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, அன்று காலை 09.00 மணிக்கு, ஹாஃபிழ் பி.ஒய்.எஸ்.ஹாரிஸ் ஹல்லாஜ் கிராஅத்தைத் தொடர்ந்து, மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது.
அன்று மாலையில், நகரளவிலான திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு) போட்டி நடைபெற்றது. இரவு 07.15 மணிக்கு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹாஜி ஆர்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல்பட்டினம் மஸ்ஜித் மீக்காஈல் இமாம் ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
பின்னர். இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ தலைமையுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, ‘அண்ணல் நபிகளாரை நேசிப்பதின் அவசியமும், ஸலவாத்தின் சிறப்புகளும்‘ என்ற தலைப்பில், வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ எம்.அப்துல் ஹமீத் ஃபாழில் பாக்கவீ சிறப்புரையாற்றினார். துஆவுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இரண்டாம் நாளான 23.07.2011 சனிக்கிழமையன்று நிகழ்ச்சிகள் மாலை 05.00 மணிக்குத் துவங்கியது. ‘அண்ணல் நபிகளாரின் அறிவார்ந்த அணுகுமுறைகள்‘ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான நகரளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
அன்றிரவு 07.15 மணிக்கு சமுதாய நல, சமூக நல்லிணக்க சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி துவங்கியது. ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஐ.முஹம்மத் அலீ ஃபாஸீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
பின்னர், இந்த அமர்வின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ தலைமையுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அமீர் அப்பாஸ், சமூக விழிப்புணர்வு ஆவணப்பட இயக்குனர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் துவக்கவுரையாற்றினர். காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
பின்னர். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட, நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ‘இஸ்லாம் ஒரு வாழும் அற்புதம்‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு:-
இஸ்லாம் உருவமற்ற இறைவனை வணங்கச் சொல்கிறது... பெரியார், அம்பேத்கர் ஆகியோர் கடவுள் கொள்கையை மறுத்ததெல்லாம், உருவம் கொடுக்கப்பட்ட கடவுட்கொள்கையைத்தான்! இஸ்லாம் சொல்லும் கடவுட்கொள்கைக்கும், பெரியார், அம்பேத்கர் சொன்ன கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் வித்தியாசம் எதுவும் இருப்பதாக என்னால் கருத இயலவில்லை...
இந்து மதத்தில் இருப்பது போன்று இஸ்லாமில் மனிதனின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு உயர்வு - தாழ்வு இல்லை… ஜாதி வேற்றுமைகள் இல்லை. பெண்களை அன்று தொட்டு இன்று வரை மதங்கள் ஒரு போகப் பொருளாகவே கருதி வரும் நிலையில் இஸ்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவர்களுக்கு அனைத்துரிமைகளையும் நிறைவாக வழங்கியிருக்கிறது...
வட்டி, மது, சூது, விபச்சாரம் உள்ளிட்டவற்றிற்கெதிராக மனிதர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக போராடி வரும் இக்காலத்தை விஞ்சும் வகையில் அன்றே இவை குறித்து இஸ்லாம் காட்டும் கடுமையைப் பார்க்கையில் இதை ஓர் வாழும் அற்புதம் என்றுதான் சொல்ல முடியும். இஸ்லாம் ஒரு மதமல்ல, மார்க்கம்!
ஒவ்வொரு மதத்திலும் ஒரு சிலர் தம்மை இறைவனின் அவதாரமாகக் காட்டிக் கொண்டிருந்த – காட்டிக் கொண்டிருக்கிற நிலையில், இந்த இஸ்லாமிய மார்க்கமாக மக்களுக்கு தான் சொன்ன அனைத்தையுமே இறைவனின் பெயராலேயே சொன்னார்... தனது உருவத்தை யாரும் வரையக் கூடாது என்று தடுத்தார்... செய்யாதவற்றுக்கெல்லாம் படம் போட்டு விளம்பரப்படுத்த விரும்பும் இக்காலத்தில், தான் செய்ததற்காகக் கூட தனது உருவத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கவில்லை அவர்… அவ்வளவு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருக்கிறார்...
நான் இப்போதுதான் இஸ்லாமை முறைப்படி கற்கத் துவங்கியிருக்கிறேன்... இஸ்லாமைப் பரப்புவது பெரியார் சொன்ன கொள்கையை, அம்பேத்கர் சொன்ன கொள்கையைப் பரப்புவதாகவே நான் கருதுகிறேன்...
நான் வெளியடையாளங்களால் என்னை முஸ்லிமாகக் காண்பித்துக் கொள்ளவில்லையே தவிர நான் ஆண்டுதோறும் சிறிது சிறிதாக நோன்பு வைத்துப் பழகி வருகிறேன்... இஸ்லாம் சொல்லும் கொள்கையை உள்ளத்தளவில் ஏற்று, செயல்படுத்தினாலேயே ஒருவன் முஸ்லிமாக முடியும். முஸ்லிமாவதற்காக தனக்கு தனி அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்...
இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் அனைத்து இஸ்லாமிய நாடுகள் மீதும் திட்டமிட்டு படையமைத்து வருகிறது… இந்த அநியாயக்கார ஏகாதிபத்தியத்திற்கெதிராக போராடுவதில் எந்தத் தவறும் இல்லை என்றே நான் சொல்வேன்… அதைத்தான் இஸ்லாம் ஜிஹாத் என்கிறது. ஏகாதிபத்தியம் இல்லாதிருந்திருந்தால், அல்காய்தா தேவையில்லாமலேயே போயிருக்கும்.
அரசியல்வாதியான - ஓர் அரசியல் கட்சியின் தலைவரான என்னை இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்து, அரசியல் பேசுவதைத் தவிர்க்குமாறு தெரிவித்திருக்கிறார்கள் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்… கட்சி சார்ந்த அரசியலை நான் இங்கு பேச விரும்பவில்லை. ஆனால் சமூகம் சார்ந்த அரசியலை பேசித்தான் ஆக வேண்டும்.
இன்று இந்தியாவில் முஸ்லிம்கள் 14 சதவிகிதம் இருக்கின்றீர்கள்... தாழ்த்தப்பட்ட மக்கள் 17 அல்லது 18 சதவிகிதம் இருக்கின்றனர்... நாம் இருவரும் சிதறாமல் இணைந்தால், இந்த நாட்டின் தலைமைத்துவத்தை நாம்தான் நிர்ணயிப்போம்... அந்த நாளை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்... உங்கள் தனி வலிமையோடு நீங்கள் வாருங்கள்! எங்கள் தனி வலிமையுடன் நாங்கள் வருகிறோம்!! இணைந்து பணியாற்றுவோம்... இன்பம் பெறுவோம்... நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டாம்! சேர்ந்திருப்போம்!!
இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது.
பின்னர். துவக்க நாளிலும், இரண்டாம் நாள் மாலையிலும் நடைபெற்ற சன்மார்க்கப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி அவருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
நிறைவாக ஆசிரியர் இசட்.ஏ.ஷெய்கு அப்துல் காதிர் நன்றி கூற, துஆவுடன் விழா நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன.
இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா நிகழ்வுகளில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகள் அனைத்தையும், ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி சட்னி செய்யித் மீரான் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
|