நடப்பாண்டு ரமழான் மாதத்திலும் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் வழமை போல நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணை கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் தலைவர் ஜுவல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளதாவது:-
அன்பின் பேரன்புமிக்க அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
இறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இரண்டாமாண்டாக இஃப்தார் - நோன்பு துறப்பிற்காக நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு நோன்புக் கஞ்சி ஏற்பாட்டிற்காக நாளொன்றுக்கு ரூ.5,000 (ஐந்தாயிரம் ரூபாய் மட்டும்) செலவு மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 24 நாட்களுக்கு அனுசரணை பெறப்பட்டுள்ளது. எஞ்சிய 05 நாட்களுக்கு அனுசரணை மிகவும் விரைவாக எதிர்பார்க்கப்படுகிறது.
நமது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியைப் பொருத்த வரை சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள் மீன்பிடி தொழில் செய்து பிழைப்பு நடத்தி வரும் அன்றாடங்காய்ச்சிகள். அவர்களிடமிருந்து அனுசரணை பெறுவதென்பது நடைமுறை சாத்தியமற்றது.
இப்பகுதி மக்களை - குறிப்பாக பெண்களை தொழுகை, நோன்பு உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளின்பால் ஆர்வமூட்டி, அவற்றை நடைமுறைப்படுத்தும் பழக்கத்தை பள்ளி நிர்வாகம் சளைக்காமல் செய்து வருகிறது. அதன் பலனாக, இன்று இப்பகுதியைச் சார்ந்த - நோன்பின் வாடையையே அறிந்திராத பல பெண்களும் இறையருளால் வழமையாக நோன்பு நோற்று வருகின்றனர்.
பள்ளியிலிருந்து தயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சி, இப்பகுதி சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த சுமார் 75 குடும்பங்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருவதோடு, இப்பகுதியிலுள்ள சிறுவர்-சிறுமியரை நோன்பு நோற்கச் செய்து, பள்ளி வளாகத்திலேயே அவர்கள் நோன்பு துறக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாளின்போது இப்பகுதி சிறாருக்கு புத்தாடைகள், ஒவ்வொரு புதிய கல்வியாண்டின்போதும் பள்ளிப் பாடக்குறிப்பேடுகள் உள்ளிட்ட வகுப்பறை பயன்பாட்டுப் பொருட்கள் என அனைத்தும், நமது நகரப் பிரமுகர்கள் உள்ளிட்ட காயலர்களின் தாராள நிதியுதவியைக் கொண்டே வழங்கப்பட்டு வருகிறது.
அன்பார்ந்த காயலர்களே! புண்ணியங்கள் பூத்துக் குலுங்கும் இப்புனித ரமழான் மாதத்தில், இப்பகுதி மக்கள் ஆர்வமுடன் நோன்பு நோற்று, இன்பமுடன் நோன்பு துறக்க ஆக வேண்டிய அனைத்து நற்காரியங்களையும் நின்று செய்திட நாங்கள் என்றும்போல் ஆயத்தமாகவே உள்ளோம். எங்களால் இயன்ற அளவுக்கு எங்கள் கைச்செலவுகளைக் கொண்டும் பள்ளி பராமரிப்பு உள்ளிட்ட தேவையான அனைத்துப் பணிகளையும் எங்கள் சக்திக்கும் மீறி நிறைவாக செய்து வருகிறோம்.
எனவே, தேவைப்படும் 05 தினங்களுக்கு மட்டும் ரூபாய் ஐந்தாயிரம் வீதம் அனுசரணை செய்ய ஆர்வமுடன் முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறோம். நம் நகருக்குள் அமைந்துள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கெல்லாம் தாமாகவே முன்வந்து மஹல்லாவாசிகள் அனுசரணையளிப்பர். ஆனால், இதுபோன்ற புறநகர் பள்ளிகளுக்குத்தான் அனுசரணையாளர்களைத் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது.
ஆகவே அன்பானவர்களே, நன்மைகளை அள்ளித்தரும் இப்புனிதமான காரியத்திற்கு நீங்களும் அனுசரணையளிப்பதோடு, உங்களைச் சார்ந்தோரையும் ஆர்வப்படுத்தி அனுசரணைகளைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தேவைப்படும் 05 தினங்களுக்கான அனுசரணைகள் முழுமையாகப் பெறப்பட்டதும், இதே வலைதளம் மூலம் அறிவிப்புச் செய்து, நன்கொடை சேகரிப்பை நிறுத்திக்கொள்வோம் என்பதை பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனுசரணையளிக்க விரும்புவோர்,
கே.அப்துர்ரஹ்மான் - தலைவர்
(கைபேசி எண்: 0091 97901 35272)
ஹாஜி ‘முத்துச்சுடர்‘ என்.டி.இஸ்ஹாக் லெப்பை - செயலர்
(கைபேசி எண்: 0091 99653 34687)
கோமான் மீரான் - பொருளர்
(கைபேசி எண்: 0091 97903 09149)
ஆகிய பள்ளி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு உங்கள் அனுசரணையை உறுதி செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவரின் நற்காரியங்களையும் ஏற்று, ஈருலக நற்பேறுகளை நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஜுவல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.
தகவல்:
‘முத்துச்சுடர்‘ ஹாஜி N.T.இஸ்ஹாக் லெப்பை,
செயலாளர்,
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி,
கற்புடையார் பள்ளி வட்டம், காயல்பட்டினம்.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. |