பிறந்த குழந்தைகள் முதல் 16 வயது வரையிலானோருக்கு இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பரிசோதனை செய்திட - ‘இதயம் காப்போம்’ என்ற பெயரில் மருத்துவ இலவச முகாமை, சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை, ரோட்டரி இன்டர்நேஷனல், ஷாஜஹான்ஸ் ஜுலவ்லர்ஸ் இணைந்து, தூத்துக்குடி காரப்பேட்டை ஆண்கள் மேனிலைப்பள்ளி அருகிலுள்ள ரோட்டரி கட்டிடத்தில் இம்மாதம் 03ஆம் தேதி நடத்தின.
இம்முகாமில் பங்கேற்றவர்களுள், மேல் சிகிச்சை தேவையென மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு, தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சிகிச்சை பெறுவதற்குத் தேவையான வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்ட அட்டை, குடும்ப அட்டை போன்ற சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் நடவடிக்கை மேற்கொண்டு, அச்சான்றிதழ்களை இரண்டே நாட்களுக்குள் வழங்கிட உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தேவையான சான்றிதழ்கள் இல்லாதோருக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கிட உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 25 பயனாளிகளுக்கான சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஆஷிஷ் குமார் வழங்கினார்.
இரண்டே நாட்களில் சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்ற பயனாளி குழந்தைகளின் பெற்றோர், மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையை மனதாரப் பாராட்டினர். |