காயல்பட்டினத்தில் புதிதாக நடைபெற்று வரும் சாலைப்பணிகள் முறைப்படி நடைபெறவில்லை என்றும், இதுகுறித்து தாசில்தார், லஞ்ச ஒழிப்புத் துறை, உயர்மட்ட அதிகாரிகள் குழுவைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் 04.02.2013 திங்கட்கிழமையன்று நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தின்போது முறையிடப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் அதன் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத், துணைத் தலைவர் எஸ்.அப்துல் வாஹித், செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.புகாரீ, செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரடங்கிய குழு, நேற்று காலை 11.30 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இதுகுறித்து முறையிட்டது.
காயல்பட்டினம் நெய்னார் தெரு, ஆஸாத் தெரு, அப்பாபள்ளித் தெரு ஆகிய பகுதிகளில், புதிய சாலை அமைப்புப் பணிக்காக பழைய சாலை - நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு தோண்டியகற்றப்படவில்லை என்றும், மிகக் குறைந்த அளவிலேயே பழைய சாலை தோண்டப்பட்டுள்ளதால், புதிய சாலை அமைப்பதற்குத் தேவையான கலவைகளும் குறைந்த அளவிலேயே போடப்பட்டு, சாலையின் தரம் வெகுவாக பாதிக்கப்படும் என்றும் அக்குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் அச்சம் தெரிவித்தனர்.
புதிய சாலைகளின் தரம் குறித்து சந்தேகம் தெரிவித்து - நடவடிக்கை கோரி, நகரின் பொதுநல அமைப்புகள் நகராட்சியிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், நம்பிக்கையிழந்துவிட்ட காரணத்தாலேயே மாவட்ட ஆட்சியரகம் வந்து முறையிடுவதாகவும் குழுவினர் தெரிவித்தனர்.
தோண்டப்பட்ட சாலைகளின் பழைய மணற்பொருட்கள் நகராட்சியிடம் ஒப்படைக்கப்படாமல், தனியார் நிலத்தில் கொட்டப்பட்டுள்ளதாக முறையிட்ட அக்குழுவினர், கடந்த மழைக்காலத்தின்போது காயல்பட்டினம் மாட்டுக்குளம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமல் தடுப்பதற்காக பல லட்சம் ரூபாய் தொகை - மக்கள் பணமான நகராட்சியின் பொதுநிதியிலிருந்து செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற பழைய மணற்பொருட்களை நகராட்சி அத்தாழ்வான இடங்களில் நிரப்பி, பொதுப்பணத்தை விரயமாக்காமல் தவிர்க்கலாம் என்றும் கூறினர்.
இம்முறையீடு குறித்து, அக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமாரிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக விசாரித்தார். நகராட்சியிடம் செய்யப்பட்ட முறையீடு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று ஆட்சியர் கேட்டபோது, இனிமேல்தான் ஆய்வு செய்ய உள்ளதாக ஆணையர் கூறினார்.
அவரைக் கண்டித்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட ஆய்வுக்குழு புதிய சாலைகளை ஆய்வு செய்ய வரும் என்றும், சாலை அமைப்புப் பணிகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புதிய சாலை அமைப்புப் பணிக்காக தோண்டப்பட்டு, தனியார் நிலத்தில் கொட்டப்பட்டுள்ள மணற்பொருட்களை, ஒப்பந்தக்காரர் அவர் செலவிலேயே நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடுமாறும், அவர்கள் அதைச் செய்யாவிடில் அவர்களது பணி உத்தரவையும், ஒப்பந்த உரிமத்தையும் ரத்து செய்யுமாறும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமாருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் உத்தரவிட்டார். |