இன்று (பிப்ரவரி 6) காலை - தூத்துக்குடியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் - மாவட்ட ஆட்சியர், திட்டக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் காயல்பட்டினம் நகர்மன்றம் சார்பாக தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கலந்துகொண்டார். அதில் - தூத்துக்குடி மாவட்டம்: தொலைநோக்குப் பார்வை என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். அதில் தெரிவித்திருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம் சமீபத்தில் தனது 25 வயதினை பூர்த்தி செய்தது. வெள்ளி விழா கொண்டாட்டங்கள் மாவட்ட அளவில் மக்கள் மனதில் ஒரு ஆரோக்கியமான பெருமையும், நெருக்கத்தையும் உருவாக்கியது என்றால் அது மிகையாகாது. நம்ம ஊரு இது என்ற தாரக மந்திரம் நம் அனைவரின் வாய்களிலும் பல நாட்களாகத் தவழ்ந்து வந்தது. இந்த உத்வேகம் தொடர்ந்து நீடிக்க, அதன் மூலம் நமது மாவட்டம் பயன்கள் பல அடைய, மாவட்ட அளவிலான வருடாந்திர ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று மிகவும் அவசியம்.
2003 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு பிரவசி பாரதீய திவஸ் (Pravasi Bharathiya Divas) என்ற பெயரில் - வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பூர்விகர்கள் ஆகியோர் பங்கேற்கும் மிகப்பெரிய நிகழ்வை நடத்தி வருகிறது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் பல நாடுகளிலிருந்து கலந்துகொள்கின்றனர். இந்த சந்திப்பு வாய்ப்பு மூலம் பல பயன்கள் - குறிப்பாக தொழில் வளர்ச்சி, சமுதாய மேம்பாடு திட்டங்களில் தனியாரின் பங்களிப்பு - ஏற்படுகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 9 இல் நடக்கும் இந்த நிகழ்வு காலகட்டத்தில் - தூத்துக்குடி மாவட்ட அளவில், தூத்துக்குடியை பூர்விகமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்திய பூர்விகர்கள் ஆகியோர் சந்திப்பு நிகழ்ச்சியை நாம் ஏற்படுத்தலாம். அந்த நிகழ்ச்சி - நம் மாவட்ட திட்டங்களில், தனியார்கள் பெருமளவில் கலந்துகொள்ள ஒரு மேடையாக அமையும்.
நம் மாவட்டத்தின் பிரதான பிரச்சனைகளில் ஒன்று குடிநீர் ஆகும். பெருமளவில் பருவ மழையை நம்பி உள்ள நாம், இல்லங்களில் அமல்படுத்தப்படும் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் (Rain Water Harvesting) போல், மழை நீர் வடிகால்களை (Storm Water Drainage) அடிப்படையாகக் கொண்டு - பல புதிய நீர்தேக்கங்களை உருவாக்குவது மிகவும் அவசியம். வீணாக கடலில் தண்ணீர் சேருவதற்கு பதிலாக, நாம் உருவாக்கும் இந்த நீர்தேக்கங்களில் மழை நீர் போய் சேர்ந்து நமக்கு பயன்கள் பல தரும்.
மாநில மின்சார உற்பத்தியில் நம் மாவட்டம் பெரும் பங்களிக்கிறது. மாநில மின்சார உற்பத்தியில் (சுமார் 10,000 MW) தூத்துக்குடி அனல் மின் நிலையம் மட்டுமே - 10 சதவீதமான சுமார் 1000 MW மின்சாரத்தை வழங்குகிறது. அடுத்த சில ஆண்டுகளில் 3000 MW முதல் 4000 MW வகையிலான மின்சார உற்பத்தி மேம்பாடும் நம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. மின்சாரம் உற்பத்தி அதிகம், தண்ணீர் தட்டுப்பாடும் அதிகம் என்ற நிலையில் உள்ள நம் கடலோர மாவட்டம் - பெரிய அளவில் கடல்நீரை, குடிநீராக மாற்றும் desalination திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கலாம். Desalination போன்ற திட்டங்களுக்கு மின்சாரமே மிகவும் முக்கிய மூலதனம். குறிப்பாக தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீரை - Desalination திட்டங்கள் மூலம் பெறச் செய்து, தற்போதைய ஆறுகள் அடிப்படையிலான நீராதாரங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
அனல் மின்சாரம் உற்பத்தி நம் மாவட்டத்தில் பிரதானமாக உள்ளது. மின்சார உற்பத்தி நம் மாவட்டத்தில் பெருகப் பெருக, அதன்மூலம் இதர தொழிற்சாலைகளும் பெருமளவில் வருங்காலங்களில் உருவாக அதிக வாய்ப்புள்ளது. இதனால், சுற்றுச்சூழல் மாசும் அதிகரிக்கும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஒவ்வொரு பகுதிக்கும் தாங்கும் சக்தி (carrying capacity) என்ற அளவு ஒன்றுள்ளது. ஆகவே, நம் மாவட்டத்தில் அனல் அடிப்படையிலான புதிய மின்திட்டங்கள் துவங்கப்படும்போது, இதனையும் நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டங்கள் - குறிப்பாக மரம் வளர்ப்புத் திட்டங்களுக்கு - பெருமளவில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
தொலைநோக்குப் பார்வையில் நாம் அனைவரும் செயல்பட்டால், நம் மாவட்டத்தை மாநிலத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் முன் மாதிரி மாவட்டமாக நாம் உருவாக்கலாம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|