காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில், இம்மாதம் 07 முதல் 10ஆம் தேதி வரை, மகளிருக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் மேமோக்ராஃபி பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. டாக்டர் ஷாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளையுடன் கே.எம்.டி. மருத்துவமனை இணைந்து நடத்தும் இம்முகாமிற்கான முன்பதிவு கே.எம்.டி. மருத்துவமனையில் தற்சமயம் நடைபெற்று வருகிறது.
இம்முகாமின் முக்கியத்துவம் உள்ளிட்ட விபரங்களை பொதுமக்கள் அறியச் செய்வதற்காக, காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சியான ஐ.ஐ.எம்.டிவியில் 05.02.2013 செவ்வாய்க்கிழமை இரவு 08.00 மணியளவில் சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாக மேலாளர் கே.அப்துல் லத்தீஃப் அறிமுகவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கொமந்தார் இஸ்மாஈல் நேர்காணலுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்தவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் சிந்தியா தம்பிராஜ் MBBS, DNB (O&G) சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, மார்பக புற்றுநோய் குறித்தும், நடைபெறவுள்ள முகாம் குறித்தும் பேசியதோடு, தொலைபேசி வழியே பொதுமக்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஐ.ஐ.எம். பொறுப்பாளர் எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், ஐ.ஐ.எம். டிவி இயக்குநர் எஸ்.அப்துல் வாஹித், ஒளிப்பதிவாளர் எம்.ஏ.அப்துல் ஜப்பார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். |