காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 85 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
86ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 10.05.2013 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்பட்டது.
இம்மாதம் 10ஆம் தேதி - ரஜப் பிறை 30 திங்கட்கிழமை - நிறைவு நாளன்று, அபூர்வ துஆ பிரார்த்தனையுடன் இவ்வாண்டின் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நிறைவு நாள் நிகழ்ச்சிகள் குறித்த விபரம் வருமாறு:-
அதிகாலை நிகழ்ச்சிகள்:
அன்று அதிகாலை 05.15 மணிக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர் ஹாஃபிழ் ஏ.ஆர்.அப்துல் காதிர் வாஃபிக் இறைமறை குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதி, இறுதிநாள் நிகழ்ச்சிகளைத் துவக்கிவைத்தார்.
காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப், குருவித்துறைப் பள்ளிவாசல் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் - புகாரிஷ் ஷரீஃப் நிறைவு நாள் பாடத்தின் முதற்பகுதியை துவக்கமாக ஓதினார்.
காலை நிகழ்ச்சிகள்:
அன்று காலையில் ஓதப்படும் நபிமொழிகளுக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ விளக்கவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ - கூட்டு துஆவின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, துஆவின் சிறப்புகள் குறித்து, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பட்டம்பெறும் மாணவர் மவ்லவீ எம்.நிஷாத் மலையாள மொழியில் உரையாற்றினார். பின்னர், ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
அபூர்வ துஆ பிரார்த்தனை:
மார்க்க சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இறுதியாக, புனித மக்கா ஷரீஃப் முஃப்தீ இமாம் மவ்லானா செய்யித் அஹ்மதிப்னு ஜெய்னீ தஹ்லான் அவர்களால் தொகுக்கப்பட்ட கத்முல் புகாரிஷ் ஷரீஃப் எனும் அபூர்வ துஆ பிரார்த்தனையை, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் தமிழாக்கத்துடன் ஓதி, இவ்வாண்டு நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்தினார்.
உலக சமாதானம், ஒற்றுமை, நோய் நிவாரணம், தொழில் அபிவிருத்தி, மக்கட்பேறு, மழை, மின்சார தட்டுப்பாட்டைப் போக்கல், சஊதியில் பணிபுரியும் இந்தியர்களின் வேலைகளுக்குப் பாதுகாப்பு, உள்ளிட்ட பல்வேறு தேவைகளை முன்வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.
பங்கேற்றோர்:
இந்த துஆ பிரார்த்தனையில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், அதன் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவரும் - வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், அதிமுக நிர்வாகிகளான எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், என்.எம்.அஹ்மத், என்.டி.இஸ்ஹாக் லெப்பை, திமுக நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், அதன் துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ,ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் மற்றும் நகரப் பிரமுகர்களும், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும், இதர வெளியூர்களிலிருந்தும் பேருந்து, தொடர்வண்டி மற்றும் தனி வாகனங்களிலும் என ஆயிரக்கணக்கானோர் வந்து இப்பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் குழுவினரும் இந்த துஆ பிரார்த்தனையில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
நிறைவு நாள் நிகழ்ச்சிகளுக்கு வரும் பொதுமக்களை வரவேற்பதற்காக, காயல்பட்டினம் பிரதான வீதி - ஸீ-கஸ்டம்ஸ் சாலை சந்திப்பிலிருந்து, புகாரி ஷரீஃப் வரை வணிக நிறுவனங்களின் அனுசரணையில் வரவேற்புத் தோரணங்கள் நிறுவப்பட்டிருந்தன. வாடிக்கையாளர்களைக் கருத்திற்கொண்டு, ஏராளமான விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தன.
சிறப்பு ஏற்பாடுகள்:
மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். கே.எம்.டி. மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவ உதவிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. மருத்துவ முதலுதவிக்காக ஆண்கள் - பெண்கள் பகுதிகளில் மருத்துவப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கைக்காக தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது.
புகாரிஷ் ஷரீஃப் வளாகத்திற்குள் இடநெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, முத்துவாப்பா தைக்கா தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, குருவித்துறைப் பள்ளி வளாகம், அப்பள்ளியின் மையவாடி பகுதிகளில் இருந்தவாறு ஆண்கள் துஆ இறைஞ்சினர்.
பெண்களுக்கு புகாரிஷ் ஷரீஃப் பெண்கள் பகுதி, அதன் வடக்குப்புற வளாகம், பெரிய முத்துவாப்பா தைக்கா வளாகம், ஈக்கியப்பா தைக்கா வளாகம், அதற்கருகிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகம் ஆகிய பகுதிகளில் இடவசதி செய்யப்பட்டிருந்தது. இவை தவிர, தீவுத்தெருவிலுள்ள பல்வேறு வீடுகளின் கோட்டைகளுக்குள் கூட்டங்கூட்டமாக அமர்ந்தவாறு பெண்கள் துஆ இறைஞ்சினர்.
அனைத்துப் பகுதிகளிலும், பொதுமக்கள் தாகம் தனிப்பதற்காக குடிநீர் வினியோகம் தொடர்ச்சியாக செய்யப்பட்டது. நகரில் தண்ணீர் பாட்டில் வணிகம் செய்து வரும் நிறுவனத்தினர் தன்னார்வத்துடன் தண்ணீர் பாக்கெட்டுகளை இலவசமாக வினியோகித்தனர்.
துஆ நிறைவுற்றதும், துஆ இறைஞ்சிய ஆலிமை, மஜ்லிஸின் வாயிலில் பொதுமக்கள் நறுமணப் பொருள் அன்பளிப்பளித்து வரவேற்றனர். பின்னர் அரபி பைத் முழக்கத்துடன் நகர்வலமாக அவரது இல்லம் வரை அழைத்துச் செல்லப்பட்டார்.
மாலை நிகழ்ச்சிகள்:
இன்று மாலையில், நபிகளார் புகழ்பாடும் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் என்.எச்.பி.நவாஸ் மிஸ்பாஹீ நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.அஹ்மத் ஜமீல் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மவ்லவீ டி.எஸ்.ஏ.ஜெஸீமுல் பக்ரீ ரஷாதீ துஆ ஓத, அத்துடன் மாலை நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இரவு நிகழ்ச்சிகள்:
அன்றிரவு 07.00 மணிக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர்களின் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 08.45 மணிக்கு, மாதிஹுல் கவ்து அல்லாமா சே.கு.நூகுத்தம்பி ஆலிம் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ், காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.
பின்னர், ஹாமிதிய்யா மாணவர் ஹாஃபிழ் என்.ஏ.ஸாலிஹ் நுஸ்கீ கிராஅத் ஓதினார். அவரைத் தொடர்ந்து, புகாரிஷ் ஷரீஃப் மஜ்லிஸ் கட்டிட வளைவுகளிலுள்ள நபிமொழிகளுக்கான விளக்கவுரையையும், மஜ்லிஸ் உருவாகிய வரலாறு மற்றும் சேவைகள் குறித்தும் - காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் பேராசிரியருமான மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ உரை நிகழ்த்தினார்.
நிறைவாக, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் நடப்பாண்டு வைபவக் கமிட்டி தலைவர் ஏ.எல்.முஹம்மத் நிஜார் நன்றி கூற, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் முதன்மை ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ துஆவுடன் இரவு நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
நேர்ச்சை வினியோகம்:
மறுநாள் - 11.06.2013 செவ்வாய்க்கிழமை காலை 06.00 மணி முதல் 08.30 மணி வரை தபர்ருக் - நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.
ஏற்பாட்டாளர்கள்:
இவ்வாண்டின் நிகழ்ச்சிகள் அனைத்திற்கான ஏற்பாடுகளையும், மஜ்லிஸ் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ தலைமையில், துணைத்தலைவர் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர், மேலாளர் ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத், இணைச் செயலாளர்களான ஹாஜி எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.பாதுல் அஸ்ஹப், எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா, துணைச் செயலாளர் ஹாஜி கூபா என்.டி.ஷெய்கு மொகுதூம், நடப்பாண்டு வைபவக் கமிட்டி தலைவர்களான ஹாஜி எம்.ஏ.அஹ்மத் லெப்பை, ஹாஜி சொளுக்கு எம்.இ.செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா, ஹாஜி ஏ.எல்.முஹம்மத் நிஜார் உள்ளிட்டோரடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சிகளனைத்தும், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்பட்டது.
ஒவ்வொரு நாளும் ஆற்றப்பட்ட உரைகளின் ஒலிப்பதிவுகளையும், முந்தைய ஆண்டுகளில் ஆற்றப்பட்ட உரைகளின் ஒலிப்பதிவுகளையும், http://www.bukhari-shareef.com/eng/audio/6/rajab-bayan-2013.html என்ற இணையதள பக்கத்தில் கேட்கவும், பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ரஜப் 29ஆம் நாள் நிகழ்வுகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்த ஆண்டு அபூர்வ துஆ நிகழ்ச்சிகள் குறித்த விபரங்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |