வீரபாண்டியன்பட்டினம் அருகே லாரியுடன் மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
தாழையூத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் அப்துல் ரஹ்மான். அவருக்கு வயது 30. காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த ஜன்னத் என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ள இவர், வாடகை வேன் ஓட்டுநராக காயல்பட்டினத்திலேயே பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கூத்தாநல்லூரைப் பூர்விகமாகக் கொண்ட ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகன் காலிதீன். இவருக்கு வயது 28. இவரது மனைவி செய்யித் அலீ ஃபாத்திமா. ஒரு ஆண் குழந்தையும் உண்டு. இவரும் காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் வசித்து வருகிறார்.
நேற்று (ஜூன் 14) வெள்ளிக்கிழமை இரவு சுமார் 08.30 மணியளவில், காயல்பட்டினத்திலிருந்து பஜாஜ் டிஸ்கவர் இருசக்கர வாகனத்தை, காலிதீன் ஓட்டிச் செல்ல, அப்துல் ரஹ்மான் அதே வாகனத்தில் பின்புறம் அமர்ந்தபடி சென்றுள்ளார்.
வீரபாண்டியன்பட்டினத்தை நெருங்கியபோது, அருகில் அப்பாச் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சண்முகபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் பாலமுருகன் (வயது 26) என்பவருடன் போட்டி போட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளதாகவும், வீரபாண்டியன்பட்டினம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம். கருவி அமைந்துள்ள பகுதி வழியே சென்றபோது, எதிரே வந்த தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான லாரி மீது, காலிதீன் - அப்துல் ரஹ்மான் இணைந்து சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில், இருவரும் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும், அவர்களோடு நெருங்கிய நிலையில் சென்ற பாலமுருகனும் தனது வாகனத்திலிருந்து தூக்கியெறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனத்தில் மூவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர், காலிதீனுக்கு இடது நெற்றிப் பொட்டிலும், இடது முழங்காலிலும் பலத்த காயமேற்பட்டு, அதிகளவில் இரத்தம் வழிந்தோடியதால், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அப்துல் ரஹ்மானுக்கு இடது கால், இடது கையில் பல இடங்களில் காயமேற்பட்டுள்ளதாகவும், அவரது தலையின் பின்பகுதியில் ஊமைக்காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலமுருகனுக்கு, நெற்றி, இடது கை, இடது கால், பிடரி ஆகிய உறுப்புகளில் காயமேற்பட்டுள்ளது. அவரது முன்பற்கள் முற்றிலும் உடைந்துவிட்டன.
இந்நிகழ்வு குறித்து, திருச்செந்தூர் காவல்நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன், துணை ஆய்வாளர்கள் அய்யாசாமி, சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காலிதீன் உடல், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்குப் பின்னர், காயல்பட்டினம் ஆறாம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அப்துல் ரஹ்மானுக்கு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மேட்டுத்திடல் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது. பாலமுருகன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பின்னர் கருத்து தெரிவித்த காவல்துறையினர், இரு சக்கர வாகனங்களை, முறையான அனுமதி பெறாதவர்கள் அதிகளவில் ஓட்டுவதாகவும், ஒருவர் ஓட்டிச் சென்றாலே ஆபத்து என்ற நிலையில் இருவரும், மூவரும் அமர்ந்துகொண்டு, கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வாகனத்தை ஒட்டிச் செல்வதாலேயே இவ்விதமான விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாகவும் கூறினர்.
இந்நிகழ்வு காரணமாக, நேற்றிரவில் காயல்பட்டினம் கடைவீதிப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
கள உதவி:
M.A.அப்துல் ஜப்பார் |