சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நலிந்தோர் நலத்திட்ட உதவிகளுக்காக ரூபாய் 2 லட்சத்து 29 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இக்ராஃ கல்விச் சங்கத்தின் உறுப்பினராவதற்கு 16 பேர் இசைவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 05ஆம் தேதி இரவு 19.45 மணியளவில், சிங்கப்பூர் சுல்தான் ப்ளாஸாவிலுள்ள மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்ட துவக்கம்:
மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மன்றச் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், மன்றத்தால் வழங்கப்படும் உதவித்தொகைகளைப் பெறும் பயனாளிகளது பிரார்த்தனைகளின் மகத்துவத்தை விளக்கிப் பேசினார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
அடுத்து, நடப்பு கூட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.எச்.முஹம்மத் உமர் ரப்பானீ சிற்றுரையாற்றினார்.
திட்டமிட்டு செயல்படுத்தப்படும் மன்றத்தின் நலத்திட்டப் பணிகளால், பயனாளிகளுக்கு நிறைவான உதவிகள் கிடைக்கப் பெறுவதாகக் கூறிய அவர், இவற்றுக்காக அவர்கள் மனதார கேட்கும் பிரார்த்தனைகளின் பலன்கள் நம் யாவருக்கும் நன்மையாக அமையும் என்பதைக் கருத்திற்கொண்டு, மன்ற உறுப்பினர்கள் தமது நன்கொடைகளை இன்னும் ஆர்வத்துடனும், தாராளமாகவும் வழங்கிட முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களான ஒருநாள் ஊதிய நன்கொடை திட்டம், உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டம், உடுத்திய நல்லாடை வழங்கும் திட்டம் ஆகியவற்றை, பிற காயல் நல மன்றங்களும் பின்பற்றுவதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், இந்த வகையில் இதர மன்றங்களுக்கு சிங்கப்பூர் காயல் நல மன்றம் முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும் கூறினார்.
செயலரின் - கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
பின்னர், கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கை குறித்து மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார்.
புதிய வங்கிக் கணக்கு துவக்கம்:
ஏற்கனவே திட்டமிட்டபடி, மன்றத்திற்கு புதிதாக வங்கியில் Current Account கணக்கு துவங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ரூ. 2,29,000 நிதியொதுக்கீடு:
பல்வேறு உதவிகள் கோரி, கடந்த ஜூன் மாதம் வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கிப் பேசினார். விண்ணப்பதாரர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டுவிட்டதாகவும், மருத்துவம் - கல்வி – மனிதாபிமான உதவிகளுக்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு நலத்திட்ட உதவியாக ரூபாய் 2 லட்சத்து 29 ஆயிரம் தொகை நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்த வாரங்களில் அவை பயனாளிகளிடம் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
செயற்குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்:
நகர்நலப் பணிகளில் தேவையான அனுபவங்களை நிறைவாகப் பெற்றிடும் வகையில், மன்றத்தின் செயற்குழுக் கூட்டங்களுக்கான கூட்டப் பொருளை (Agenda) ஆயத்தம் செய்வதற்கு, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டுமென செயற்குழுவின் அனைத்துறுப்பினர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
உடுத்திய நல்லாடை வழங்கும் திட்டம்:
உடுத்திய நல்லாடை வழங்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட ஆடைகள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இரண்டாம் கட்ட வினியோகத்திற்காக உடைகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், உறுப்பினர்கள் இம்மாதம் 26ஆம் தேதிக்குள் தமது உடுத்திய நல்லாடைகளை வழங்கியுதவுமாறும் அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
பொருளாளரின் வரவு-செலவு கணக்கறிக்கை:
பின்னர், மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் கூட்டத்தில் சமர்ப்பிக்க, கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.
புதிய வங்கிக் கணக்கு குறித்து விளக்கம்:
அதனைத் தொடர்ந்து, மன்றத்திற்காக புதிதாகத் துவக்கப்பட்டுள்ள Current Account வங்கிக் கணக்கு குறித்த - உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான நிதி:
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான உதவித்தொகை விரைவில் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டாம் காலாண்டின் நிதிநிலையும் - மூன்றாம் காலாண்டிற்கான எதிர்பார்ப்பும்:
மன்றத்தின் இரண்டாம் காலாண்டு வரவு-செலவு கணக்குகள், நிர்ணயிக்கப்பட்ட நிதிநிலை முன்னறிக்கையையும் (forecast budget) தாண்டியுள்ளதாகவும், இதற்காக தாராள மனதுடன் நிதிகளை வழங்கியுதவிய மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறிய அவர், மூன்றாம் காலாண்டு பருவத்திலும் இதைப் போலவோ அல்லது இன்னும் சிறப்பாகவோ உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
விண்ணப்பங்கள் பரிசீலனைக் குழு:
உதவிகள் கோரி மன்றத்தால் இனி பெறப்படவுள்ள விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் குழுவினராக,
ஹாஃபிழ் ஃபஸல் இஸ்மாஈல்,
செய்யித் லெப்பை,
ஹாஃபிழ் செய்யித் இஸ்மாஈல்
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஜகாத் நிதி ஆய்வாளர்:
மன்றத்தின் ஜகாத் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களிடமிருந்து ஜகாத் நிதிகளைப் பெற்றிடும் பணியை ஆய்வு செய்து ஊக்கப்படுத்திட - மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ் வசம் பொறுப்பளிக்கப்பட்டது.
மன்ற உறுப்பினர்கள், தமது ஜகாத் நிதியின் ஒரு பகுதியை மன்றத்திற்கு வழங்கி ஒத்துழைக்குமாறு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இக்ராஃவின் உறுப்பினர்களாக 16 பேர் இசைவு:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் உறுப்பினர்களாவதற்கு, இதுவரை 16 உறுப்பினர்கள் இசைவு தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாகவும், இதுகுறித்த தகவல் வெகுவிரைவில் இக்ராஃ நிர்வாகத்திற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும் என்றும், மன்றத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.என்.ஜவஹர் இஸ்மாஈல் தெரிவித்தார்.
அடுத்த செயற்குழுக் கூட்டம்:
ரமழான் மாதத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் மாதம் செயற்குழுக் கூட்டம் நடத்தப்படாது என்றும், அடுத்த செயற்குழுக் கூட்டம், வரும் செப்டம்பர் மாதம் 06ஆம் தேதியன்று நடத்தப்படும் எனவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதுடன், அக்கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராக மன்றத்தின் துணைக்குழு உறுப்பினர் செய்யித் பெ்பை நியமிக்கப்பட்டார்.
கூட்ட நிறைவு:
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், இரவு 21.30 மணியளவில், ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் துவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இரவுணவு (சைவம்) விருந்துபசரிப்பு:
இக்கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு மற்றும் துணைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அனைத்துறுப்பினர்களுக்கும் இட்லி, சாம்பார், சட்னி, பஜ்ஜி பதார்த்தங்களுடன் சுவையான இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |