| 
 காயல்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான - பொன்னன்குறிச்சி  குடிநீர் திட்டப்பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று 
வருகின்றன.
    சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படவுள்ள இந்த திட்டத்திற்கான - நிதி உதவியை மத்திய அரசும் (80%), மாநில அரசும் (10%) 
வழங்குகின்றன. எஞ்சிய 10 சதவீத தொகையை (சுமார் 3 கோடி ரூபாய்) காயல்பட்டினம் நகராட்சி வழங்குகிறது. 
  
 
  
காயல்பட்டினம் நகராட்சியின் பங்கான சுமார் 3 கோடி ரூபாயில் 1.5 கோடி ரூபாய் நகராட்சியின் பொது நிதியில் இருந்தும், 1 கோடி ரூபாய் இணைப்புகளுக்கான முன் 
தொகையாக (ADVANCE DEPOSITS) மக்களிடம் இருந்து பெற்றும், 50 லட்ச ரூபாயினை  முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் சொந்த நிதி 
மூலம் பெறவும் திட்டம் ஒன்று  2010 இல் வகுக்கப்பட்டது. இருப்பினும் - தமிழக அரசு, காயல்பட்டினம் நகராட்சியின் பங்கான 3 கோடி ரூபாயை, காயல்பட்டினம் நகராட்சிக்கு IUDM திட்டம் மூலம் வழங்கும் நிதியில் 
இருந்து செலுத்தி விட்டதாக தெரிகிறது. 
  
 
  
 
  
இத்திட்டத்திற்கு பொன்னன்குறிச்சி பகுதியில் தேவையான நிலத்தை - தான் தர முன் வந்திருந்த 50 லட்ச ரூபாய் நன்கொடையில், முன்னாள் நகர்மன்ற தலைவர் 
ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. முன்னாள் தலைவர் மூலம் நிலம் கிடைக்காத காரணத்தால் - நகர்மன்றத் தலைவர் 
ஐ. ஆபிதா சேக், மாவட்ட ஆட்சியரிடம் பொன்னன்குறிச்சியில் அரசு நிலம் பெற்றுத்தர கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் சுமார் 50 செண்ட் அரசு நிலம் 
பொன்னன்குறிச்சி பகுதியில் - மாவட்ட ஆட்சியரால் ஒதுக்கப்பட்டு, அங்கு பணிகள் நடைபெற்றுவருகின்றன. 
  
 
  
 
  
இந்த திட்டத்திற்கான அடிக்கல் நட்டும் விழா காயல்பட்டினத்தில் மார்ச் 10 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக 
தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா - மே 9 அன்று துவக்கியும் வைத்தார். 
  
 
  
 
  
இதற்கிடையில் இத்திட்டத்திற்கு பொன்னன்குறிச்சியில் அரசு வழங்கிய நிலத்தில் - பெண் ஒருவர் உரிமைக்கோரி பிரச்சனை செய்து வந்தார். இதனால் வேலைகள் பாதிக்கப்பட்டது. 
அதனை தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - இது குறித்து  மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமாரிடமும், சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதனிடமும் மனு வழங்கியிருந்தார்.  கடந்த வாரம் - காவல்துறையினர், பிரச்சனை செய்வோரை  வேலை நடக்கும் இடத்தில் 
இருந்து அப்புறப்படுத்தினர். அங்கு வேலைகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன.
  
 
  
பொன்னன்குறிச்சி பகுதியில் பணிகள் சிறிது காலம் தடையானது  குறித்து கடந்த ஜூன் மாத நகர்மன்ற கூட்டத்தில் 12வது 
வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வி எழுப்பினார். அப்போது பதில் கூறிய நகர்மன்றத் தலைவர் - பிரச்சனை செய்யும் பெண் - 4 லட்சம் ரூபாய் 
கேட்பதாகவும், மேலும் நகராட்சியில் பணி கேட்பதாகவும், திட்டம் நடைபெறவுள்ள 30 கிலோமீட்டர் நீளப்பகுதியில் இவ்வாறு ஒவ்வொருவரும் பிரச்சனைகளை 
கிளப்ப ஆரம்பம் செய்தால், ஒவ்வொருவருக்கும் பணம் கொடுக்க இயலாது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் - இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தான் தகவல் 
கூறியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
  
மீண்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ள நிலையில்  - மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார் IAS - பொன்னன்குறிச்சியில் நடக்கும் வேலை இடத்திற்கு - திங்களன்று 
(ஜூலை 8) -  திடீர் விஜயம் செய்தார். அங்கு தற்போது நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு சென்றார். 
  
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர்  - அன்று மதியம் பணிகள் நடக்கும் இடத்தை பார்வையிட்டு, பணி நிலவரங்களை அறிந்துக்கொண்டார். அப்போது - நகராட்சி 
ஆணையர் ஜி.அசோக் குமார், நகராட்சி பொறியாளர் சிவகுமார், ஓவர்சியர் செல்வமணி ஆகியோர் உடனிருந்தனர். 
  
 
  
 
  
பொன்னன்குறிச்சியில் உள்ள இடத்தில தற்போது - 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பாதாள நீர் தேக்கம் அமைக்கும் பணி  (UNDERGROUND SUMP) [மதிப்பீடு: 
65 லட்ச ரூபாய்], ஆற்று படுகையில் 6 ஆழ் கிணறுகள் (INFILTRATION WELLS) அமைக்கும் பணி (ஒவ்வொன்றும் 4.5 மீட்டர் விட்டம், 9 மீட்டர் ஆழம்) [மதிப்பீடு: 185 
லட்ச ரூபாய்] ஆகியவை தற்போது துவக்கப்பட்டுள்ளன. 
  மேலும் குடிநீர் திட்டத்திற்கான மின் ஊழியர்கள் தங்குவதற்கான அறைகள் கட்டும் பணி [மதிப்பீடு: 8 லட்ச 
ரூபாய்],  பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி [மதிப்பீடு: 7 லட்ச ரூபாய்], பம்ப் இல்லம் அமைக்கும் பணி [மதிப்பீடு: 13 லட்ச ரூபாய்] ஆகியவையும் இங்கு விரைவில் 
தொடரும். இப்பணிகள் அனைத்தும் சுமார் 4 - 6 மாத காலத்தில் நிறைவுபெறும் என ஒப்பந்தாரார் ஸ்ரீராம் இ.பி.சி. நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  
 
  
 
  
பொன்னன்குறிச்சியில் இருந்து காயல்பட்டினம் வரை - சாலை ஓரமாக - குழாய்கள் தற்போது இறக்கப்பட்டு வருகிறது. 27 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த 
தூரத்தில் தற்போது சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் இறக்கப்பட்டுள்ளன. 1 கிலோமீட்டருக்கு 4 லாரி லோடு என்ற அளவில், சுமார் 45 தினங்களில் 
அனைத்து குழாய்களும் இறக்கப்ப்பட்டுவிடும் என ஒப்பந்தாரார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
  
 
  
 
  
 
  
இந்த குழாய்கள் மேற்கு வங்காளத்தில் உள்ள ராஷ்மி மெடாலிங்க்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. K9 Class- 
Ductile Iron ரக குழாய்களான இவை - 27 கிலோமீட்டர் தூரத்திற்கு 350 மி.மி. விட்டம் (diameter) அளவிலும், 0.88 கிலோமீட்டர் தூரத்திற்கு 300 மி.மி. விட்டம் (diameter) 
அளவிலும், 1.75 கிலோமீட்டர் தூரத்திற்கு 200 மி.மி. விட்டம் (diameter) அளவிலும், 1.33 கிலோமீட்டர் தூரத்திற்கு 150 மி.மி. விட்டம் (diameter) அளவிலும், 4.50 
கிலோமீட்டர் தூரத்திற்கு 100 மி.மி. விட்டம் (diameter) அளவிலும் இருக்கும். 
  
 
  
இந்த குழாய்கள்  - பொன்னன்குறிச்சியில் இருந்து காயல்பட்டினத்திற்கு தண்ணீர் கொண்டு வரவும், காயல்பட்டினத்தில் ஒவ்வொரு நீர் தொட்டிக்கும் (OVER HEAD 
TANKS) தண்ணீர் கொண்டுசெல்லவும் (PUMPING MAIN)  பயன்படுத்தப்படும்.  இப்பணிகளுக்கான குழாய்கள் மட்டும் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலானவை.
  
 
  
இவைகளை தவிர நகரில் சுமார் 51 கிலோமீட்டர் தூரத்திற்கு (LOCAL DISTRIBUTION - DISTRIBUTION MAIN) [நீர் தொட்டிகளில் இருந்து இல்லங்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல] - சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான - 100 மி.மி. விட்டம் 
(diameter), 150 மி.மி. விட்டம் (diameter),  200 மி.மி. விட்டம் (diameter),  250 மி.மி. விட்டம் (diameter) அளவு - K7 Class- Ductile Iron ரக குழாய்கள் - 
நிறுவப்படவுள்ளன. 
  
 
  
தலைக்கு 135 லிட்டர் தண்ணீர் (LPCD) என்ற அளவில் - காயல்பட்டினத்தின் 2040-ம் ஆண்டு மக்கள் தொகையை (சுமார் 57,000) அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2040-ம் ஆண்டு தேவையான் தினசரி 77 லட்ச லிட்டர் அளவிலான  தண்ணீர் - இத்திட்டம் மூலம் வழங்கமுடியும். 
  
புகைப்படங்கள் உதவி: 
எம்.எம். முஜாஹித் அலி  |