காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” என்ற தலைப்பில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியரை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் மற்றும் நகரின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகள் 8 ஆண்டுகளாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013:
நடப்பு 8ஆம் ஆண்டின் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013” நிகழ்ச்சியின் ஓரம்சமான - மாநில சாதனை மாணவர்களுடன் காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியரைக் கலந்துரையாடச் செய்யுடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி – INTERACTIVE SESSION, கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமையன்று மதியமும், நகரளவில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி, அதே நாள் மாலையிலும் காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் நடத்தப்பட்டது.
கலந்துரையாடல் மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகள் குறித்த விரிவான செய்தியும், நகரளவில் சிறப்பிடங்களைப் பெற்று, இவ்விழாவில் பரிசுகளைப் பெற்ற மாணவ-மாணவியர் குறித்த முழு விபரங்களும், அண்மையில் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியானது.
இவ்விழாவில், நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும், நகரளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கும் பணப்பரிசுகள் மற்றும் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த விரிவான விபரம் வருமாறு:-
100 சதவிகித தேர்ச்சி:
நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், காயல்பட்டினம்
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து தேர்வெழுதிய 96 மாணவியரும்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து தேர்வெழுதிய 88 மாணவர்களும்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து தேர்வெழுதிய 32 மாணவ-மாணவியரும்
100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனைப் பாராட்டி, கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதியன்று, காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் நடைபெற்ற “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013” பரிசளிப்பு விழா நிகழ்ச்சியின்போது, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் - இப்பள்ளிகளுக்கு தலா ரூபாய் 2 ஆயிரத்து 500 பணப்பரிசும், விருதும் வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தமிழக அரசின் முக்கிய துறைகளின் முன்னாள் மூத்த செயலாளர் அலாவுத்தீன் ஐ.ஏ.எஸ். வழங்க, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் சார்பில் அதன் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா,
எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில் அதன் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, புதிய தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் சார்பில் அதன் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், தலைமையாசிரியர் ஸ்டீஃபன் ஆகியோரும் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
சிறந்த பள்ளிகளுக்கு பணப்பரிசு மற்றும் விருதுகள்:
கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய - காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்களுள்,
பள்ளியின் மொத்த தேர்ச்சி சதவிகிதம்,
முதல் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்,
1000க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியரின் எண்ணிக்கை
உள்ளிட்ட - நிர்ணயிக்கப்பட்ட கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டு, பரிசுக்குரிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி 441 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றது. அதற்கான விருதை, விழாவிற்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வழங்க, அப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா பெற்றுக்கொண்டார்.
எல்.கே.மேனிலைப்பள்ளி 414 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடம் பெற்றது. அதற்கான விருதை, மாவட்ட கல்வித்துறை துணை ஆய்வாளர் சங்கரய்யா வழங்க, அப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, புதிய தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி 399 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடம் பெற்றது. அதற்கான விருதை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வழங்க, அப்பள்ளியின் தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா பெற்றுக்கொண்டார்.
பின்னர், 75க்கும் மேல் மாணவ-மாணவியரைக் கொண்ட பள்ளிகள் ஒரு பிரிவாகவும், 75க்கும் கீழ் மாணவ-மாணவியரைக் கொண்ட பள்ளிகள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு, அவற்றுள், முதலிடம் பெற்ற பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
75க்கும் கீழ் மாணவியரைக் கொண்ட சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி 245.83 புள்ளிகள் பெற்று, அப்பிரிவில் முதலிடம் பெற்றது. இதற்காக, அப்பள்ளிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசும், விருதும் வழங்கப்பட்டது.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார் அவற்றை வழங்க, அப்பள்ளியின் ஆசிரியை பெற்றுக்கொண்டார்.
75க்கும் மேல் மாணவியரைக் கொண்ட சுபைதா மகளிர் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி 238.54 புள்ளிகள் பெற்று, அப்பிரிவில் முதலிடம் பெற்றது. இதற்காக, அப்பள்ளிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசும், விருதும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.செயக்கண்ணு அவற்றை வழங்க, அப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா பெற்றுக்கொண்டார்.
இவ்வாறாக, சிறந்த பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
மற்றும்
வீனஸ் ஸ்டூடியோ |