அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி வளாகத்தில், கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கிய இம்முகாமில், 01 முதல் 07ஆவது வார்டு வரை முழுமையாகவும், 18ஆவது வார்டின் பெரும்பாலான பொதுமக்களிடமும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் தீவுத்தெருவில் ஈக்கியப்பா தைக்கா அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடத்தில், 08ஆவது வார்டு பொதுமக்களிடமும், ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் 09ஆவது வார்டு பொதுமக்களிடமும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது.
08ஆவது வார்டு விபரங்கள் சேகரிப்புப் பணி இம்மாதம் 11ஆம் தேதியுடன் நிறைவுற்றதைத் தொடர்ந்து, 11ஆவது வார்டின் ஒரு பகுதியினரிடம் அதே இடத்தில் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.
பின்னர், 10ஆவது வார்டு பொதுமக்களிடமும், 11ஆவது வார்டு பொதுமக்களிடமும் - தாயிம்பள்ளிக்குட்பட்ட மஜ்லிஸுல் கவ்து சங்க வளாகத்தில் விபரங்கள் சேகரிக்கப்பட்டு்ளளது.
அதன் தொடர்ச்சியாக, 11ஆவது வார்டின் எஞ்சிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கும், 12ஆவது வார்டு பொதுமக்களுக்கும், ஓடக்கரை துவக்கப்பள்ளி வளாகத்தில் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.
தற்போது 11ஆவது வார்டு விபரங்கள் சேகரிப்புப் பணி முடிவுற்றதையடுத்து, அங்கு 12ஆவது வார்டுக்கான பணி நடைபெற்று வருகிறது. இன்று மாலையில் அது நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, 12ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆர்.ரெங்கநாதன் என்ற சுகு, அவரது பிரதிநிதியாக சந்தானம் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 13ஆவது வார்டுக்கான விபரங்கள் சேகரிப்பு முகாம், ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில் இம்மாதம் 20ஆம் தேதி சனிக்கிழமையன்று (நேற்று) துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அங்கு, 13ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தினர் ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
|