இலங்கை தலைநகர் கொழும்புவில் இயங்கி வரும் இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, காவாலங்கா சார்பில் அதன் செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
05/07/2013இல் காவாலங்கா சார்பில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு காவாலங்கா தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் தலைமை தாங்கினார். காரீ ஏ.டி.அப்துல் காதர் ஹாஜி திருமறை குர்ஆன் வசனங்களை கிராஅத்தாக ஓத, கூட்டம் துவங்கியது.
இக்கூட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
துவக்கமாக, காவாலங்கா தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் உரையாற்றினார்.
ஆடிட்டர் புகாரீ தலைமையில் இயங்கும் துபை காயல் நல மன்றத்தின் சேவைகளை வெகுவாகப் பாராட்டிப் பேசியதோடு, சென்ற வருடம் காவாலங்கா செய்த நற்பணிகளையும் அவர் தனதுரையில் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் ஆடிட்டர் புகாரீ உரையாற்றினார்.
துபை காயல் நல மன்றம் ஆற்றி வரும் நற்பணிகளை தனதுரையில் விளக்கிப் பேசிய அவர், காவாலங்கா இன்னும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். காவாலங்கா உறுப்பினர்களின் கருத்துக்களை அறிய விரும்புவதாக தனதுரையினூடே ஹாஜி புகாரீ கூறியதன் பேரில், மக்கீ நூஹுத்தம்பி ஹாஜி, மா.செ.முஹம்மத் அலீ ஹாஜி, சிறப்பு அழைப்பாளர் ஹாங்காங் முத்துவாப்பா ஹாஜி ஆகியோர் நல்ல பல கருத்துக்களைக் கூறினர்.
அடுத்து, செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் உரையாற்றினார்.
காயலர்களுக்கு மட்டுமின்றி, இலங்கை மக்களுக்கும் காவாலங்கா செய்த பணிகளைக் குறிப்பிட்டார். குறிப்பாக, மல்வானை முபாரக் மகா வித்தியாலயத்தில் Advance Level (+2)இல் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியருக்கு ஊக்கப் பரிசுப் பொருட்கள் மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
பின்னர், காவாலங்கா சார்பாக, சிறப்பு விருந்தினர் ஆடிட்டர் புகாரீ அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. காவாலங்கா தலைவர் அதை சிறப்பு விருந்தினரிடம் வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் ஆடிட்டர் புகாரீ அளித்த பல ஆலோசனைகள் காவாலங்கா உறுப்பினர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தன.
இறுதியாக காயல் பாரம்பரிய முறைப்படி இடியாப்பம், கறி, சவ்வரிசி என விருந்து நடைபெற்றது. பின்பு ஏ.டி.ஹாஜியாரின் துஆ உடன் காவாலங்காவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இனிதே முடிவுற்றது.
இவ்வாறு, காவாலங்கா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |