பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து சான்றிதழ்களுக்கும் நகராட்சியில் பணிபுரியும் சில அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய ஐந்தாவது தூண்
அமைப்பினர் நகராட்சி சான்றிதழ்களுக்கு லஞ்சப்பட்டியல் வெளியிட்டு பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் விநியோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி நகராட்சியில் பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான இடைப்பட்ட அனைத்து காரியங்களுக்கும் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே
வேலைகள் நடக்கின்றன.இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் பலமுறை ஆதாரப்பூர்வமாக புகார் தெரிவித்தும் கண்டுகொள்ள வில்லையென ஐந்தாவது தூண்
அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்ந்து ஏழை எளிய மக்களின் முறையான வரிவிதிப்பு, முறையான குடிநீர் இணைப்புகளை ஏதேனும் காரணங்கள் கூறி லஞ்சம் பெறுவதற்காக ரத்து செய்வதும்,
எல்லா காரியங்களுக்கும் கட்டாயப்படுத்தி கப்பம் வசூலிப்பதும், கொடுக்க மறுத்தால் அச்சுறுத்தலும், இடையூறு ஏற்படுத்துவதும் நகராட்சியில் நடைபெறுவதாக
கூறுகின்றனர். மொத்தத்தில் கோவில்பட்டியில் லஞ்ச பணத்திற்காக நகராட்சி சொத்துக்களை தாரைவார்த்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
நல்ல பணிகளை செய்து வரும் நகர்மன்ற தலைவருக்கு அதிகாரிகள் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிகாரிகள் தொடர்ந்து இவ்வாறு
செயல்பட்டு வருவதால் அதிருப்தியடைந்த கோவில்பட்டி அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் ஐந்தாவது தூண் அமைப்பினர்
கோவில்பட்டி நகராட்சியில் லஞ்சப்பட்டியல் வெளியிட்டு பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகம் செய்தனர்.
கோவில்பட்டி நகராட்சி வாயில் அருகே ஐந்தாவது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில், அமைப்பின் ராஜா, முருகன், ஆழ்வார் ஆகியோர்
விநியோகம் செய்தனர். இதில் கோவில்பட்டி நகராட்சியில் லஞ்ச விலைப்பட்டியல் (செவிவழி பட்டியல்) என்று தலைப்பிட்டுள்ளனர். மேலும் உழவு மாட்டின் கஷ்டம்
கோவில் மாட்டுக்கு தெரியாது என்றும், உழவுமாடு உழைத்து உண்ணும், கோவில் மாடு ஊர்சுற்றி உண்ணும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து நடப்பு, பழைய
பிறப்பு இறப்பு சான்று, சுகாதாரம், குடிநீர், கட்டட அனுமதி (இரண்டு வகை), வரிவிதிப்பு (மூன்று வகை), பணி நியமனம் என பிரிவுகளில் ஒவ்வொரு வகைகளையும்
குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவற்றிற்கு ரூ.25 முதல் 5 லட்சம் வரையில் விலைப்பட்டியல் கொடுத்துள்ளனர். தவிர துண்டுபிரசுரத்தின் கீழ்பகுதியில் அடுத்த வெளியீடு என்று குறிப்பிட்டு
மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி என அறிவித்துள்ளனர்.
தகவல்:
www.tutyonline.com
|