காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” என்ற தலைப்பில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியரை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் மற்றும் நகரின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகள் 8 ஆண்டுகளாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013:
நடப்பு 8ஆம் ஆண்டின் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை - 2013” நிகழ்ச்சியின் ஓரம்சமான - மாநில சாதனை மாணவர்களுடன் காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியரைக் கலந்துரையாடச் செய்யுடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி – INTERACTIVE SESSION, கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமையன்று மதியமும், நகரளவில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி, அதே நாள் மாலையிலும் காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க மைதானத்தில் நடத்தப்பட்டது.
கலந்துரையாடல் மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகள் குறித்த விரிவான செய்தி அண்மையில் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியானது.
பரிசளிப்பு விழாவின்போது, 12ஆம் வகுப்பில் தனிப்பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவிக்கும் 10ஆம் - 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும், திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழ் மாணவர்களுள், 10ஆம் 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும், 12ஆம் வகுப்பில் 1100 அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும், 1000 அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியருக்கும், சிறந்த கட்-ஆஃப் (சிறப்புத் தேர்ச்சி) மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்ட விபரம் வருமாறு:-
மாநிலத்தில் மூன்றாமிடம்:
12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், குழந்தை வளர்ப்பு மற்றும் உணவு மேலாண்மை பாடத்தில், காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுயம்புலிங்கம் - மேரி தம்பதியின் மகள் எஸ்.ரத்னசூர்யா, 200க்கு 173 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.
அவருக்கு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அனுசரணையில், ரூபாய் 2 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழை, தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் ரத்தினம் வழங்கினார்.
ப்ளஸ் 2 நகரளவில் முதல் மூன்றிடங்கள்:
12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்,
காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த பி.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரது மகள் பி.எம்.சாமு ஸமீரா (சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி) - 1200க்கு 1149 மதிப்பெண்கள் பெற்று, நகரளவில் முதலிடமும்,
திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவைச் சேர்ந்த சேகரன் என்பவரது மகன் சுப்பையா என்ற கண்ணன் (எல்.கே.மேனிலைப்பள்ளி) - 1200க்கு 1148 மதிப்பெண்கள் பெற்று, நகரளவில் இரண்டாமிடமும்,
காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த முஹ்ஸின் என்பவரது மகள் எம்.ஸாரா மஹ்ஃபூஸா (சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி) - 1200க்கு 1147 மதிப்பெண்கள் பெற்று, நகரளவில் மூன்றாமிடமும் பெற்றனர்.
இவர்களுக்கு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அனுசரணையில், முறையே ரூபாய் 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகளை, அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் வழங்கினார்.
ப்ளஸ் 2 - ஹாஃபிழ்களுள் நகரளவில் முதல் மூன்றிடங்கள்:
12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த - ஹாஃபிழ் மாணவர்களுள்,
காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் கே.பஷீர் ஜஃப்ரான் (எல்.கே.மேனிலைப்பள்ளி) 1200க்கு 1094 மதிப்பெண்கள் பெற்று நகரளவில் முதலிடமும், ஹாஃபிழ் அபுல்ஹஸன் ஸிபகத்துல்லாஹ் (எல்.கே.மேனிலைப்பள்ளி) 1063 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் (எல்.கே.மேனிலைப்பள்ளி) 1037 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
இவர்களுக்கு, துபை காயல் நல மன்றத்தின் அனுசரணையில், முறையே ரூபாய் 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகளை, அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ் வழங்கினார்.
எஸ்.எஸ்.எல்.சி. நகரளவில் முதல் மூன்றிடங்கள்:
10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்,
எம்.ஒய்.தவ்லத் ரிஸ்வானா (எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி) 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று நகரளவில் முதலிடமும், எஸ்.லக்ஷ்மி நாராயணன் (எல்.கே.மேனிலைப்பள்ளி) 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ஹாஃபிழ் பி.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ் (சென்ட்ரல் மேனிலைப்பள்ளி) - கதீஜா ஃபாத்திமா (சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி) ஆகியோர் 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
500க்கு 491 என்பது நகர சாதனை மதிப்பெண் (Record Break) என்பதால், அதற்காக - காயல்பட்டினம் முன்னாள் பேரூராட்சி தலைவர் மர்ஹூம் எம்.கே.டி.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் நினைவாக, அன்னாரின் குடும்பத்தினர் சார்பில் ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசுக்கு அனுசரணை வழங்கப்பட்டது, பரிசு மற்றும் சான்றிதழை அவரது மகன் ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ வழங்கினார்.
இரண்டாம் - மூன்றாமிடங்களுக்கு, கத்தர் காயல் நல மன்றத்தின் அனுசரணையில் முறையே ரூபாய் 2 ஆயிரம், 1 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அவற்றை, சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் பணி நிறைவுபெற்ற தலைமையாசிரியர் காஜா முகைதீன், எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோர் வழங்கினர்.
எஸ்.எஸ்.எல்.சி. - ஹாஃபிழ் மாணவர்களுள் நகரளவில் முதல் மூன்றிடங்கள்:
அடுத்து, திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழ் மாணவர்களுள், 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில்,
ஹாஃபிழ் பி.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ் (சென்ட்ரல் மேனிலைப்பள்ளி) 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று நகளரவில் முதலிடமும், ஹாஃபிழ் கத்தீபு கே.எஸ்.ஏ.முஹம்மத் மீரா ஸாஹிப் (எல்.கே.மேனிலைப்பள்ளி) 481 மதிப்பெண்கள் பெற்று நகரளவில் இரண்டாமிடமும், ஹாஃபிழ் பி.முஹம்மத் அபுல் காஸிம் 471 மதிப்பெண்கள் பெற்று நகரளவில் மூன்றாமிடமும் பெற்றனர்.
அவர்களுக்கு, துபை காயல் நல மன்ற அனுசரணையில், முறையே ரூபாய் 3 ஆயிரம், 2 ஆயிரம், 1 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அப்பரிசுகளை, துபை காயல் நல மன்றத்தின் முன்னாள் மூத்த உறுப்பினர் ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, அதன் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ் ஆகியோர் வழங்கினர்.
தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்றோர்:
அடுத்து, தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் (Subject Centum) பெற்ற 78 மாணவ-மாணவியருக்கு தலா ரூபாய் 500 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. தனிப்பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் வருமாறு:-
இவ்வகைக்கு, ஹாஜி எம்.ஏ.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்ற மம்னாகார், ஜெ.மஹ்மூதுல் ஹஸன், சீனா மொகுதூம் முஹம்மத் (ஜித்தா), ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் (பாங்காக்), ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஹாஜி எம்.எம்.ஷாஹுல் ஹமீத், ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், எம்.ஏ.கே.காதிர் சுலைமான் ஆகிய கல்வி ஆர்வலர்களும், கத்தர் காயல் நல மன்றம், சிங்கப்பூர் காயல் நல மன்றம் ஆகிய அமைப்புகளும் அனுசரணையளித்திருந்தன.
இம்மாணவர்களுக்கு நகரப் பிரமுகர்கள் மற்றும் கல்வியாளர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
ப்ளஸ் 2 தேர்வில் 1000க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றோர்:
அடுத்து, 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 1200க்கு 1100 அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்ற 18 மாணவ-மாணவியருக்கு, ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் அனுசரணையில் தலா ரூபாய் 300 பணப்பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 1200க்கு 1000 அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 53 மாணவ-மாணவியருக்கு தலா ரூபாய் 200 பணப்பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவ்வகைக்காக, ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், கே.எம்.டி.சுலைமான், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் (ஹாங்காங்), ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் நூஹ் (ஹாங்காங்), ஹாஜி டாக்டர் ஏ.முஹம்மத் இத்ரீஸ் (தம்மாம்) ஆகியோர் அனுசரணையளித்திருந்தனர்.
1200க்கு 1100 அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியரின் பெயர் பட்டியல் வருமாறு:-
1200க்கு 1000 அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியரின் பெயர் பட்டியல் வருமாறு:-
இப்பரிசுகளை, நகரப் பிரமுகர்களும், கல்வி ஆர்வலர்களும் வழங்கினர்.
கட் ஆஃப் - சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண்கள் பெற்றோருக்கு ரியாத் கா.ந.மன்றத்தின் பரிசுகள்:
12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு பெற்றாலும், சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண்களை (கட் ஆஃப்) அதிகளவில் பெற்றிருந்தால்தான், பொறியியல் - மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை இருப்பதால், அதுகுறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஊட்டுவதற்காக, ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில், நடப்பாண்டிலும், கீழ்க்காணும் மதிப்பெண் வரையறை படி பணப்பரிசுகள் வழங்கப்பட்டன:-
இந்த வரையறையின் படி கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்று, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் பணப்பரிசைப் பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் வருமாறு:-
இப்பரிசுகளை, நகரப் பிரமுகர்களும், கல்வி ஆர்வலர்களும் வழங்கினர்.
வழங்கப்பட்ட பரிசுகள் அனைத்தையும், பரிசுக்குரிய மாணவர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
மற்றும்
வீனஸ் ஸ்டூடியோ
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது. விடுபட்ட சில விவரங்களும் இணைக்கப்பட்டன @ 14:34 / 21.07.2013] |