காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாமும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் துணைத்தலைவருமான ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர், இம்மாதம் 11ஆம் தேதி வியாழக்கிழமையன்று இரவு 11.15 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா மறுநாள் - 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணியளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவை முன்னிட்டு, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா நிர்வாகத்தின் சார்பில், ஈஸால் தவாப் நிகழ்ச்சி, இம்மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணியளவில், மஜ்லிஸ் வளாகத்தில் நடைபெற்றது.
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமை தாங்கினார். மத்ரஸா ஹாமிதிய்யா மாணவர் அலீ ஃபஹத் கிராஅத் ஓதினார்.
மத்ரஸத்துல் ஹாமிதிய்யா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, மர்ஹூம் அவர்கள் தம் வாழ்வில் செய்த சேவைகளை நினைவுகூர்ந்து அறிமுகவுரையாற்றினார். ஹாமிதிய்யா பேராசிரியர் மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ இரங்கல் உரையாற்றினார். மவ்லவீ ஹாஃபிழ் எச்.பி.என்.ஷாஹ்ஸாத் புகாரீ இரங்கல் கவி பாடினார்.
இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றி கூற, ஹாமிதிய்யா பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்ச்சிகள் அனைத்தையும், ‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் நெறிப்படுத்தினார்.
முன்னதாக, ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மர்ஹூம் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில், காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மத்ரஸத்துல் ஹாமிதிய்யா நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். |