காயல்பட்டினம் நகராட்சியில் பல்வேறு பொருட்கள் - 29.05.2012 அன்று பொது ஏலம் விடப்படும் என நகராட்சி ஆணையரால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில், 29.05.2012 அன்று, காயல்பட்டினம் நகராட்சியில் பொது ஏலம் நடைபெற்றது. காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட ஆடு-மாடு அறுப்புத் தொட்டி - டிப்போ (Slaughter House)க்கான ஏலத்தை,
எம்.எச்.அப்துல் வாஹித் - ரூ. 1,26,999 தொகைக்கும்,
கே.எம்.காதர் முஹ்யித்தீன் - ரூ.1,45,000 தொகைக்கும்,
ஏ.செல்வம் - ரூ.1,50,000 தொகைக்கும்,
எஸ்.விஜயன் - ரூ.1,81,700 தொகைக்கும்
மூடி முத்திரையிடப்பட்ட ஏலம் கேட்டிருந்தனர்.
இந்நால்வரில், கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்டிருந்த எஸ்.விஜயனுக்கு - 01.06.2012 முதல் 31.03.2013 வரையிலான பருவத்திற்கு (10 மாத காலத்திற்கு) குத்தகை வழங்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் அவர் காயல்பட்டினம் நகராட்சியில் முழு தொகையையும் செலுத்தி முறைப்படி ஏல குத்தகையைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், 06.06.2012 அன்று குத்தகைக்காரர் டிப்போவில் வசூலுக்குச் சென்றபோது, அறுக்கப்பட்ட கிடாயின் மண்ணீரலை (சுவரொட்டி / பல்குத்தி) கேட்டதாகவும், இறைச்சி வணிகர்கள் அதனைத் தர மறுத்ததாகவும், இதனால் இரு தரப்பினருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு, ஆறுமுகநேரி காவல்துறையினர் தலையிட்டு பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்து வைத்தனர்.
பின்னர் - நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள், ஏலம் எடுத்தவர் மற்றும் கறிக்கடை உரிமையாளர்கள் இடையே சமாதானப் பேச்சு நடைபெற்றது. இதில் சுமுக முடிவு ஏதும் வராததால், மண்ணீரல் தரப்படாவிடில் தனக்கு நஷ்டமே ஏற்படும் என்றும், எனவே ஏலத்தை தொடர்ந்து எடுத்து நடத்த இயலாத நிலையில் உள்ளதாகவும் குத்தகைதாரர் தெரிவித்தார். இறுதியில், மறுஏலம் விடப்படும் பட்சத்தில், அதே குத்தகைத் தொகை அல்லது அதற்கு மேலுள்ள தொகைக்கு தாங்களே ஏலம் எடுக்க நகர இறைச்சி வணிகர்கள் சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில், எஸ்.விஜயன் என்பவருக்கு வழங்கப்பட்ட குத்தகை ரத்து செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 13 அன்று மீண்டும் ஏலம் விடப்பட்டது. அதில் யாரும் கலந்துக்கொள்ளவில்லை.
ஆடு - மாடு அறுப்புத் தொட்டி குத்தகையை யாரும் ஏலம் எடுக்காததால், நகராட்சியின் சார்பிலேயே அறுப்புத் தொட்டி பராமரிக்கப்பட்டு, ஆடு அறுக்க 5 ரூபாயும், மாடு அறுக்க 6 ரூபாயும் அறுப்புக் கட்டணமாக சில காலம் வசூலிக்கப்பட்டு வந்தது. இக்கட்டண வசூல் மூலம் ஒவ்வொரு நாளும் சுமார் 250 ரூபாய் மட்டுமே பெறப்படுவதாகவும், அறுப்புத் தொட்டியை ஆள் வைத்து பராமரிக்கும் செலவைக் கூட இதைக்கொண்டு ஈடு செய்ய இயலாது என்றும் நகராட்சி கருதியது.
அதனையடுத்து, பிப்ரவரி 01ஆம் தேதி முதல் ஆடு அறுக்க 40 ரூபாயும், மாடு அறுக்க 50 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு, இக்கட்டண நிர்ணயத்தில் ஆட்சேபணை இருப்பின், 30 நாட்களுக்குள் எழுத்து மூலம் தெரிவிக்குமாறு, 15.12.2012 அன்று நகராட்சி ஆணையர் மூலம் நாளிதழில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
முறைப்படியான ஆட்சேபணை எதுவும் பெறப்படாததையடுத்து, பிப்ரவரி 01ஆம் தேதி முதல் அறுப்புக் கூலி உயர்த்தப்பட்டது. அறுப்புக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிப்ரவரி 1 அன்று காயல்பட்டினத்தில் அனைத்து ஆடு, மாடு இறைச்சிக் கடைகளும் அடைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காயல்பட்டினம் நகராட்சியின் அவசர கூட்டம் பிப்ரவரி 5 அன்று காலை நடைபெற்றது. அக்கூட்டத்தில், நீண்ட விவாதங்களுக்குப் பின், ஆடு அறுக்க கட்டணம் ரூபாய் 20 என்றும், மாடு அறுக்க கட்டணம் ரூபாய் 30 என்றும் நிர்ணையம் செய்யப்பட்டது. மேலும் - இந்த விபரத்தை அரசு கெசட்டிலும் வெளியிட தீர்மானிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் விடப்பட்ட ஏலத்தில் தற்போது சுல்தான் ஜமாலுதீன் என்பவர் ஏப்ரல் 1, 2013 - மார்ச் 31, 2014 காலகட்டத்திற்கான ஏலத்தை 1,80,100 ரூபாய்க்கு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நகராட்சி அங்கீகரித்த கட்டண விபரமும் தற்போது தூத்துக்குடி மாவட்ட கெசட்டில் வெளிவந்துள்ளது.
இதுகாலம் வரை காயல்பட்டினம் நகராட்சியில் ஆடு, மாடு அறுப்பு ஏலம் - வாய்மொழியாக ஏற்றுக்கொள்ளபட்டிருந்த கூலி அடிப்படையிலேயே விடப்பட்டு வந்தது. இதனால் முந்தைய காலங்களில் குத்தகை எடுத்தவருக்கும், இறைச்சி கடை உரிமையாளர்களுக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. தற்போது - முதல் முறையாக அறுப்பு கட்டணம் கெசட்டில் வெளிவந்ததை தொடர்ந்து - எதிர்கால ஏலங்களில் இது போன்ற பிரச்சனைகள் நிகழ வாய்ப்புகள் குறைவு என்று எதிர்பார்க்கலாம்.
கெசட் தகவல்:
ஐ. ஆபிதா சேக்,
தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 19:46 / 17.07.2013] |