தூத்துக்குடி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயகண்ணு தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தூத்துக்குடி மாவட்டத்தில் 2012–13–ம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைமை ஆசிரியர்கள் 20 ஆண்டுகளும், ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் 15 ஆண்டுகளும் பணியாற்றி இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர்கள் எந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும். அரசியல் கட்சி தொடர்பு இல்லாதவராக இருக்க வேண்டும். சிறந்த முறையில் பணியாற்றி வரும் சிறப்பு ஆசிரியர்கள் உள்பட அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒரு வாரத்துக்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள குழுவினர் ஆய்வு செய்து, தகுதியான ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயகண்ணு தெரிவித்தார்.
தகவல்:
தினத்தந்தி |