பள்ளி மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு நிர்ணயித்துள்ள சீருடையைக் பகரமாக வேறு சீருடைகளை அணிந்து வர மாணவ-மாணவியரை வற்புறுத்தக் கூடாது என பள்ளிகளின் தலைமையாசிரியர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளில் தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் விலையில்லா சீருடைகளுக்கு பதிலாக, தங்களது நோக்கம் போல் அரசு பள்ளி சீருடைகளை மாற்றம் செய்து, அதை பள்ளிக் குழந்தைகள் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று ஒரு சில பள்ளிகள் நிர்ப்பந்தம் செய்வதாக புகார்கள் வருகின்றன.
மேலும் சில பள்ளிகளில், திங்கட்கிழமை ஒரு சீருடை; வெள்ளிக்கிழமை ஒரு சீருடை என முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை - எளிய மக்கள் சீருடை வாங்குவதற்கு சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மாணவ-மாணவியருக்கு விலையில்லா சீருடைகளை வழங்கி வருகிறது. மேலும், பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர் கல்வி பயில, அரசு கட்டாய கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு விலையில்லா திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டமாக, பள்ளி மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளுக்கு இடமளிக்காவண்ணம் அனைத்துக் குழந்தைகளும் ஒரே சீருடையில் வர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
எனவே, அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களும் இத்திட்டம் சிறப்பாக செயல்பட தாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |