ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடந்தேறியுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நிறைவுடைய வாழ்வளித்து நெடுநிலத்தை காப்பதற்கு மறையளித்த இறையோனுக்கே மாபெரும் புகழனைத்தும் உரித்தாகுக!
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது துபை காயல் நல மன்றத்தின் ஜூலை 2013 மாதத்திற்கான செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை 05:30 மணியளவில், மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜெ.எஸ்.ஏ.புகாரீ அவர்களது வில்லா வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது.
எஸ்.ஓ.பி.ஷக்காஃப் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். முத்து முஹம்மத் இறை வசனங்களை ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
பின்னர், நகர்நலன் குறித்தும் - மன்ற நடவடிக்கைகள் குறித்தும் உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. நிறைவில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. ஒருங்கினைந்த மருத்துவ உதவிக் குழுமமான SHIFA உருவானதை அங்கீகரித்து, அதன் வேண்டுகோளின் படி நிர்வாகச் செலவிற்கு மன்றத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை விரைவில் SHIFA நியமித்துள்ள ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பித் தருவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
2. நலிவுற்றோர் நலனுக்காக பயன்படுத்திடும் பொருட்டு, மன்ற உறுப்பினர்கள் தமது ஜகாத் நிதியிலிருந்து ஒரு பகுதியை மன்றக் கருவூலத்திற்குத் தந்துதவுமாறு, மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
முன்னரே அழைப்பிதல் அனுப்பப்பட்டதன் அடிப்படையில், செயற்குழு உறுப்பினாகள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்டம் நிறைவுற்ற பின்னர், அவர்கள் அனைவரும், தம் குடும்பத்தார்களுடன் நோன்பு துறக்கும் வகையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சுவையும், மணமும் நிறைந்த - காயல்பட்டினத்தின் பலவகையான பண்டங்களும், உணவுப் பதார்த்தங்களும் அனைவருக்கும் திருப்திகரமாகப் பரிமாறப்பட்டது.
பின்னர், மஃரிப் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. தொழுகைக்குப் பின், அனைவருக்கும் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவரும் தம் வசிப்பிடம் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறு, துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்,
படங்கள்:
ஹுஸைன் ஈஸா
மற்றும்
பாஸுல் ஹமீத் |