தமிழக அரசு 2003 ம் ஆண்டு தூய்மை கிராம இயக்க விருதினை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் பிரதான நோக்கம் - கிராம சுற்றுப்புறச் சூழல் முற்றிலும் பாதுக்காக்கப்படவேண்டும் என்பதும், திறந்தவெளியில் மலம் கழிப்பது போன்றவை முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும் என்பதும் ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம் - மாவட்டம் ஒன்றிற்கு - ஒரு கிராம ஊராட்சி (VILLAGE PANCHAYAT) தேர்வு செய்யப்பட்டு, அக்கிராம ஊராட்சிக்கு ரொக்க பரிசும். விருதும் வழங்கப்படும். 2006-2007 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட இந்த திட்டம், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
2011-2012 ஆம் ஆண்டுக்கான விருதினை - தமிழக முதல்வர் ஜூன் 25 அன்று - 31 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கினார். ஒவ்வொரு கிராமமும் தலா ரூபாய் 5 லட்சம் ரொக்கமும் பெற்றது.
தமிழக அரசின் இந்த விருதினை பெற இவ்வாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் சார்ந்த நட்டாத்தி கிராமம் தேர்வு செய்யப்பட்டது.
அக்கிராம ஊராட்சி சார்பாக அதன் தலைவர் எஸ்.வி.பி.எஸ்.பண்டாரம் இந்த விருதினை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்றார். இக்கிராமம் - காயல்பட்டினத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில், ஏரலுக்கு அருகே உள்ளது.
குமாரபுரம், முள்ளன்விளை, பட்டாண்டிவிளை, கொம்புக்காரன்பொட்டல், நட்டாத்தி, வைகுந்தபுரம், கண்ணாண்டிவிளை, சின்ன நட்டாத்தி ஆகிய எட்டு குக்கிராமங்கள் ஒருங்கிணைந்தது நட்டாத்தி ஊராட்சி கிராமமாகும் (VILLAGE PANCHAYAT).
விருது பெற்ற இக்கிராமத்தை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் அண்மையில் நேரில் சென்று, பார்வையிட்டு, கிராம தலைவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அவ்வேளையில் நட்டாத்தி கிராம ஊராட்சி தலைவர் இவ்விருதினை பெற தான் எடுத்த முயற்சிகளை விளக்கி கூறினார்.
இதே விருதினை முந்தைய ஆண்டு ஒன்றில் பெற்ற ஒரு ஊராட்சி தலைவரின் பெருமிதம் தமக்கு தூண்டுகோலாக இருந்ததாக கூறிய அவர், விருதுகள் பெற்ற / பெற விண்ணப்பம் செய்திருந்த கிராமங்களை தான் நேரடியாக சென்று பார்வையிட்டதாகவும், அந்த கிராமங்கள் செய்த முயற்சியினை முழுமையாக தான் முதலில் கண்டறிந்ததாகவும் கூறினார்.
பின்னர் - ஊரில் கொண்டு வந்த மாற்றங்களை காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு - நட்டாத்தி கிராம ஊராட்சி தலைவர் காண்பித்தார். இதில் மகளிர் சுகாதார வளாகம், கழிவு நீர்களை பயன்படுத்தும் முறைகள், அவசியமான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க அறிவிப்பு பலகைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
மக்களுக்கான அறிவிப்புகள் ...
மகளிர் சுகாதார வளாகம் ...
மக்களுக்கு எளிதாக இருக்கும் என்பதற்காக - இக்கிராமத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஒரே வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
மேலும் - தெரு பெயர்களே இல்லாமல் இருந்து இவ்வூருக்கு, எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து தலைவர்கள் பெயரும் இடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திருமதி பெல்லாவின் ஆலோசனைகளை நினைவுக்கூர்ந்த நாட்டாட்சி கிராம ஊராட்சி தலைவர் - இந்த விருது பெற முக்கிய காரணம், சுய உதவிக்குழுக்களின் செயல்பாடு, ஊராட்சி உறுப்பினர்களின் ஆர்வம், பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு ஆகியவை ஆகும் என்றார்.
எஸ்.வி.பி.எஸ். செல்லத்துரை நாடாரின் மகன்களான எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் மற்றும் எஸ்.வி.பி.எஸ். செந்தில் ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக நட்டாத்தி ஊராட்சிக்கு தலைவர்களாக இருந்து வருகின்றனர். மேலும் இவர்களின் குடும்பத்தினர் - இப்பகுதி விவசாய சங்கத்தின் தலைவர்களாகவும் பல சமூக பணிகளை செய்து வருகின்றனர்.
புகைப்படங்கள் உதவி:
எம்.எம். முஜாஹித் அலி |