சவுதி அரசாங்க விதிகள்படி பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆண் துணையுடன் (மஹ்ரம்) ஹஜ் பயணம் மேற்கொள்ளவேண்டும். இவ்வாண்டு மே மாதம் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் - மஹ்ரம் வகைக்காக 200 இடங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஹஜ் பயணியர் தேர்வு குலுக்கல் முறையில் நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் ஏதோ ஒரு காரணத்திற்காக பெண் பயணி தேர்வு செய்யப்படாமல், அவரின் மஹ்ரம் மட்டும் தேர்வு செய்யப்பட்டால் - பெண் பயணி ஹஜ் பயணம் மேற்கொள்ளமுடியாத சூழல் எழும்.
மேலும் - வரும் ஆண்டுகளில் பெண் பயணி மீண்டும் விண்ணப்பம் செய்ய முற்படும்போது, அவரின் மஹ்ரம் முன்னரே (இந்திய ஹஜ் குழு மூலம்) ஹஜ் செய்து விட்டதால், அவருக்கு மீண்டும் இடம் ஒதுக்கப்படாத சூழல் ஏற்படும்.
இதனை கருத்தில் கொண்டு, இந்திய ஹஜ் குழு - இவ்வாண்டு மேலே குறிப்பிட்ட முறையில் விடுபட்ட பெண் ஹஜ் பயணியர், இவ்வாண்டு தேர்வு செய்யப்பட்ட தங்கள் மஹ்ரம் உடன் பயணம் மேற்கொள்ள 200 இடங்களை ஒதுக்கியுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 31 வரை பெறப்படும் என இந்திய ஹஜ் குழு மேலும் அறிவித்துள்ளது. அவ்விண்ணப்பத்துடன் கீழ்க்காணும் விளக்கங்களையும் இணைத்து அனுப்பவேண்டும். 200க்கும் கூடுதலான தகுதியான விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில், குலுக்கல் முறையில் பயணியர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய விளக்கங்கள்:
(1) இவ்வாண்டு ஹஜ் விண்ணப்பம் பெறப்பட்ட போது, ஏன் மஹ்ரமுடன் விண்ணப்பம் செய்யவில்லை
(2) பெண் பயணியருக்கும், மஹ்ரமுக்கும் இடையே உள்ள உறவை நிருபிக்கும் ஆவணங்கள்
(3) இந்த மஹ்ரமுடன், இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள ஏன் விருப்பம்
(4) பெண் ஹஜ் பயணி, ஏன் வருங்காலங்களில் ஹஜ் பயணம் மேற்கொள்ள இயலாது
(5) பெண் ஹஜ் பயணியரின் வயது
(6) குடும்பத்தில் சாராய் மஹ்ரம் உள்ளது / இல்லாதது குறித்த விபரம்
(7) பெண் பயணியர் சமர்ப்பிக்க விரும்பும் வேறேனும் தகவல் |