வேலைவாய்ப்பு தேடி பெங்களூரு நகருக்கு வரும் காயலர்கள் தங்குவதற்காக, கொடை வள்ளல் மர்ஹூம் ஆடிட்டர் பி.எஸ்.எம்.புகாரீ ஹாஜி அவர்களின் குடும்பத்தாரால் பிரத்தியேகமாக வாங்கப்பட்ட கட்டிடத்தில், எதிர்வரும் நோன்புப் பெருநாளுக்குப் பிறகு, காயலர் தங்கும் விடுதி செயல்படவுள்ளதாக, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்ற பெங்களூரு காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள் குறித்து, பெங்களூரு காயல் நல மன்றத்தின் செயலாளர் எம்.எம்.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையால், எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் 10ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம - இஃப்தார் நிகழ்ச்சி, 28/07/2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.
குடும்ப சகிதம் உறுப்பினர்கள் நிகழ்விடம் வருகை:
மன்ற அங்கத்தினர் தம் குடும்பத்தினருடன் மாலை 04.00 மணி முதல், தம் சொந்த வாகனங்களிலும், பொது வாகனங்களிலும் நிகழ்விடம் வந்து சேர்ந்தனர். துவக்கமாக கலந்துகொண்டோரிடம் பெயர்பதிவு செய்யப்பட்டது.
துவக்கமாக அஸ்ர் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம்:
மாலை 05.15 மணியளவில் பொதுக்குழுக் கூட்டம் முறைப்படி துவங்கியது. வணிகப் பெருந்தகை ஹாஜி டூட்டி முஹம்மத் முஹ்யித்தீன், மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜியின் மகனும், மன்ற உறுப்பினருமான அப்துர்ரஹ்மான் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
வரவேற்புரை:
மன்ற உறுப்பினர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, கூட்ட அறிமுகவுரையாற்ற, ஹாஃபிழ் மன்னர் பி.ஏ.செய்யித் அப்துர் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பழைப்பாளர்கள் உரை:
பின்னர், சிறப்பழைப்பாளர்களின் வாழ்த்துரை நிகழ்ச்சி துவங்கியது. துவக்கமாக, ஹாஜி டூட்டி முஹம்மத் முஹ்யித்தீன் உரையாற்றினார்.
தான் கலந்து கொள்ளும் இரண்டாவது கூட்டம் இது என்றும், சென்ற கூட்டம் போல் இந்த குடும்ப சங்கம இஃப்தார் நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறிய அவர், மன்றத்தின் அனைத்து முயற்சிகளும் சீரோடும் சிறப்போடும் வருங்காலங்களிலும் தொடர்வதற்கு உறுப்பினர்களின் முழுமையான வருகையும், மேலான ஆதரவும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், சந்தாவை நிலுவையின்றி சரியான நேரத்தில் செலுத்தி ஒத்துழைக்க வேண்டுமென்றும் கூறினார்.
அடுத்து, மற்றொரு சிறப்பழைப்பாளரான அப்துர்ரஹ்மான் புகாரீ உரையாற்றினார்.
வேலைவாய்ப்புக்காகவும், இதர காரணங்களுக்காகவும் பெங்களூரு நகருக்கு வருகை தரும் காயலர்கள் சிரமமின்றி தங்குவதற்காக, துவக்க காலத்தில் தனதில்லத்தை - தன் தந்தையவர்கள் தந்துதவியதாகவும், இவர்களுக்காக தங்கும் விடுதியொன்றை அமைக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கனவாகவே இருந்ததாகவும் கூறிய அவர், அந்த அடிப்படையில் வரும் நோன்புப் பெருநாளுக்குப் பிறகு விடுதி கட்டிடம் செயல்படத் துவங்கும் என்றும் தெரிவித்தார்.
அடுத்து, ‘மைக்ரோகாயல்’ மற்றும் ‘ஷிஃபா’ அமைப்புகள் குறித்து சாளை முஹம்மத் முஹ்யித்தீன் விளக்கிப் பேசினார்.
தலைமையுரை:
பின்னர், மன்றத் தலைவர். பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
கடந்த பிப்ரவரி மாதம் நம் மன்றத்தின் சார்பில் முதன்முறையாக குடும்ப ஒன்று கூடல் நிகழ்ச்சி இறையருளால் மிகச் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்...
அதுபோல இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த குடும்ப சங்கம இஃப்தார் நிகழ்ச்சியும் முதன்முறையாக மிகச் சிறப்பான முயற்சியில் அழகஹா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது..
இவ்வளவு பெரிய ஏற்பாட்டை, நம் மன்றத்தின் 4 அல்லது 5 உறுப்பினர்கள் மட்டும் களப்பணியாற்றி செய்திருக்கின்றனர்.
இவ்விரு குடும்ப சங்கம நிகழ்ச்சியும் - இவ்வுறுப்பினர்களின் அயராத முயற்சி காரணமாக இறையருளால் முழு வெற்றி கண்டுள்ளது என்பதை இங்கே பெருமிதத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதே நேரத்தில், எல்லாக் காலங்களிலும் நாம் இவர்களுக்கு நிந்தனை கொடுக்கக் கூடாது.. மற்ற உறுப்பினர்களும் தங்களால் இயன்ற அளவுக்கு சிற்சிறு பொறுப்புகளையேனும் பகிர்ந்தெடுத்துக் கொண்டால், அவர்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க முடியும். அதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆர்வத்துடன் முன்வர வேண்டுமாய் இந்த நல்ல நேரத்தில் அன்போடு வேண்டுகிறேன்...
அடுத்ததாக இங்கு 58 ஆண் உறுப்பினர்கள், 20 பெண்கள் 10 குழந்தைகள் சங்கமித்து இருக்கிறார்கள்... அதில் 10க்கும் அதிகமாக, புதியவர்கள் நம் மன்றத்தின் உறுப்பினர்களாக புதிதாக இணைந்துள்ளனர் - அல்ஹம்துலில்லாஹ்! அதுபோல, நம் மன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த 7 பேர் - ஹாங்காங், சிங்கப்பூர், ஓமன், சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் பணியாற்றுவதற்காக மாறிச் சென்றுள்ளனர். நம் மன்றத்தின் துவக்க காலம் தொட்டு உறுப்பினர்களாக இருந்து, தற்போது பிரிந்து சென்றுள்ள இவர்களை இந்த நல்ல நேரத்தில் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன்.
நம் மன்றத்தின் உறுப்பினர் சந்தா தொகையை - உறுப்பினர்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு சேகரிக்க, பகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டள்ளனர். உங்களுங்கள் பகுதி பொறுப்பாளரிடம் தயவு செய்து உங்கள் சந்தா தொகைகளை நிலுவையின்றி உடனுக்குடன் செலுத்தி - மன்றப் பணிகள் நிறைவாக நடைபெற்றிட முழு ஒத்துழைப்பளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று போல் என்றும் நம் மன்றத்தின் எல்லாக் கூட்டங்களிலும் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் திரளாகக் கலந்துகொண்டு, நம் மன்றத்தின் வளர்ச்சிக்கும், நம் ஊரின் வளர்ச்சிக்கும் உங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிடுமாறும், உங்களது ஊக்கமிக்க செயல்பாடு மூலம் மன்ற நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை அளித்திடுமாறும் அன்புடன் கேட்டுக்கொண்டு எனதுரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு மன்றத் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் பேசினார்.
செயலர் உரை:
பின்னர், கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து, மன்றச் செயலாளர் எம்.என்.சுலைமான் விளக்கிப் பேசினார்.
அடுத்து, மன்றத்தில் புதிதாக இணைந்துகொண்ட 5 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவர் முன்னிலையில், சுய அறிமுகம் செய்துகொண்டனர்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
பின்னர், கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. நகர்நலன் குறித்த பல்வேறு அம்சங்கள் இந்நேரத்தில் விவாதிக்கப்பட்டது.
தீர்மானங்கள்:
அதனைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மறைந்தோருக்கு இரங்கல்:
அண்மையில் காலமான - காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாமும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் துணைத்தலைவருமான ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் அவர்களின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவர்களின் மறுமை நல்வாழ்விற்காக மனதார பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 2 – சாதனையாளர்களுக்கு வாழ்த்து:
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற அல்ஜாமிஉல் அஸ்ஹர் என்றழைக்கப்படும் அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில், ‘மவ்லவீ’ பட்டச் சான்றிதழ் பெற்றுள்ள - காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் ஹாஃபிழ் கே.எம்.செய்யித் இஸ்மாஈல், இவ்வாண்டு நமது ஊரில் ஆலிம் - ஆலிமா, ஹாஃபிழ் - ஹாஃபிழா பட்டம் பெற்றோர்,
THAILAND GEM AND JEWELRY TRADERS ASSOCIATION (TGJTA) துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - தாய்லாந்து காயல் நல மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்,
நமது நல மன்றத்தின் உறுபினர்கள் சுமார் 30 பேர், பெங்களூரில் ஆதார் அடையாள அட்டை பதிவு செய்வதற்கு, களப்பணியாற்றி சேவை செய்த
ஜனாப் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன்,
ஜனாப் முஹ்யித்தீன் தம்பி,
ஜனாப் முஹம்மத் முஹ்யித்தீன் பிக்தால்,
ஆகிய மன்ற உறுப்பினர்கள்,
காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013” நிகழ்ச்சியை சிறப்புற நடத்தி முடித்துள்ள - காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அங்கத்தினர்
ஆகிய அனைவருக்கும், பெங்களூரு காயல் நல மன்றம் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது.
தீர்மானம் 3 - புதுமண தம்பதியருக்கு வாழ்த்து:
விரைவில் புது மணவாழ்வு காணவுள்ள - மன்ற உறுப்பினர்கள் முஹம்மத் உமர் மற்றும் அவரது சகோதரர் காதர் மீராஸாஹிப் ஆகியோருக்கு மன்றம் தனது மனமார்ந்த முன் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறது. புது மணவாழ்வு காணும் இவர்களுக்கு வல்ல அல்லாஹ் குறைவில்லா நல்வாழ்வையும், இருலோகத்திற்கும் பயன்தரும் கண்குளிர்ச்சியான மக்கட்செல்வங்களையும் நிறைவாகத் தந்தருள இக்கூட்டம் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 4 – ஜக்காத் நிதி சேமிப்பு:
மன்ற உறுப்பினர்களிடமிருந்து சுமார் 20,000/- தொகை ஜகாத் நிதியாக சேகரிக்கப்பட்டது. இத்தொகையை,
1. துளிர் பள்ளிக்கும்,
2. மைக்ரோகாயல் அமைப்பிற்கும்
சரிசமமாகப் பிரித்தளிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - வெப்சைட் அட்மின்
நமது மன்றத்தின் வெப்சைட் அட்மின் ஆக செயல்பட ஜனாப் முஹம்மத் ஷிஹாபுத்தீன் மற்றும் ஜனாப் புகாரீ மவ்லானா ஆகியோரை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 6 - விடுதி செயல்திட்டங்களுக்காக தனிக்குழு:
பெங்களூருக்கு வேலைவாய்ப்பு தேடி வரும் காயலர்களுக்காக, வரும் ஆகஸ்ட் மாதம் புதிதாக இயங்கவுள்ள தங்கும் விடுதிக்கான செயல்திட்டங்களை வடிவமைத்திட,
ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர்
மூஸா ஸாஹிப்
ஷேக்னா லெப்பை
எம்.என்.முஹம்மத் சுலைமான்
முஹம்மத் இப்றாஹீம் நவ்ஷாத்
கே.ஏ.ஆர்.அஜ்மல் புகாரீ
அபூபக்கர் ஆலிம்
ஆகியோரடங்கிய குழுவை இக்கூட்டம் நியமிக்கிறது. இக்குழு முறையான அறிக்கையை ஆயத்தம் செய்து, எதிர்வரும் நோன்புப் பெருநாள் கழித்து சமர்ப்பிக்க இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 7 – அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள்:
மன்றத்தின் அடுத்த கூட்டத்தை ஒருங்கிணைக்க,
கே.எஸ்.எம்.எல்.முஹம்மத் உமர்
ஷேக்னா லெப்பை
வாவு முஹம்மத்
டூட்டி செய்யித் முஹம்மத்
ஆகியோரிடம் பொறுப்பளித்தும், அவர்களுக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் மன்ற நிர்வாகக் குழு முறைப்படி செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
பொறுப்பளிக்கப்பட்ட இக்குழுவினர் சிறப்புக் கூட்டம் நடத்தி, அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்த பின்னர், கூட்ட தேதி, நிகழ்விடம் குறித்து இறுதி முடிவு எடுக்க இக்கூட்டம் அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி:
மஃரிப் வேளையானதும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது.
இதில், பொதுக்குழுவில் பங்கேற்ற அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், குளிர்பானம், சிக்கன் சமூசா, பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
தொழுகை & இரவுணவு:
இஃப்தார் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நடைபெற்றது. பின்னர், இரவுணவாக மட்டன் பிரியாணி, சிக்கன் கபாப், இனிப்பு பலகாரம், டீ ஆகியன அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
கூட்ட நிறைவு:
நன்றியுரையைத் தொடர்ந்து, ஹாஃபிழ் என்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில், மன்ற உறுப்பினர்கள், அவர்கள்தம் குடும்பத்தினர் என சுமார் 85 பேர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை, https://plus.google.com/photos/107528015060439646064/albums/5907476323214679825 என்ற இணைப்பில் சொடுக்கி, தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு, பெங்களூரு காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.சுலைமான் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தியாக்கம்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்
(துணைத்தலைவர்)
ஹாஃபிழ் மன்னர் B.A.செய்யித் அப்துர்ரஹ்மான்
மற்றும்
இப்றாஹீம் நவ்ஷாத்
(ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள்)
படங்கள்:
மக்கீ இஸ்மாஈல் |