இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் காயலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, காவாலங்கா செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
எமது காவாலங்கா அமைப்பின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்ச்சி மற்றும் பொதுக்குழுக் கூட்டம், 22.07.2013 அன்று மாலையில், மன்றத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் தலைமையில், இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள புகாரீ அன் கோ இல்லத்தில் நடைபெற்றது.
ஹாஃபிழ் எச்.ஏ.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அடுத்து, மன்றத் தலைவரும் - நிகழ்ச்சி தலைவருமான ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் தலைமையுரையாற்றினார்.
காவாலங்காவின் ஆண்டறிக்கையை, மன்றச் செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் வாசித்தார்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை:
கடந்த ஆண்டைப் போல, நடப்பாண்டிலும் - இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் 5 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - மருத்துவக் கல்லூரி மாணவிக்கு உதவித்தொகை:
இலங்கை மல்வானையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிக்கு உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மஃரிப் வேளையை அடைந்ததும், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அதில் அனைவருக்கும் பேரீத்தம்பழம், கறிகஞ்சி, குளிர்பான வகைகள், வடை வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பரிமாறப்பட்டன.
பின்னர், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. மவ்லவீ கல்ஜீ ஃபாஸீ தொழுகையை வழிநடத்தினார்.
மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, பொதுக்குழுக் கூட்டத்தில் இரண்டாம் அமர்வு நடைபெற்றது. அதில் நகர்நலன் குறித்த உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. குறிப்பாக, ஒருங்கிணைந்த மருத்துவ உதவி செயல்திட்டமான ‘ஷிஃபா’வில் காவாலங்கா இணைவது தொடர்பாக நீண்ட கலந்தாலோசனை நடைபெற்றது.
‘ஷிஃபா’ தொடர்பாகவும், அதில் இணைவது குறித்தும் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ விளக்கமாக உறுப்பினர்களிடையே எடுத்துரைத்தார்.
இது தொடர்பான இறுதி முடிவை அடுத்த கூட்டத்தில் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு, இலங்கை காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
ஹாஜி S.A.ஜவாஹிர்
காவாலங்கா சார்பில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தியில் கூடுதல் தகவல் மற்றும் படங்கள் இணைக்கப்பட்டன @ 19:50 / 04.08.2013] |