காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியை நிர்வகித்து வரும் துளிர் அறக்கட்டளை சார்பில், பெண்களுக்கான இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி, 29.07.2013 திங்கட்கிழமை மாலை 05.30 மணியளவில், துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்றது.
துளிர் பள்ளியின் சிறப்பாசிரியை ஹலீமா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் நிர்வாகி செய்யித் கதீஜா, சமூக ஆர்வலர் எஸ்.ஓ.பி.ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகிக்க, தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் கவுரவ செயலாளர் அ.வஹீதா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். துளிர் பள்ளியின் மேலாளர் சித்தி ரம்ஸான் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் பேராசிரியை ராபியா ரோஷன் சித்தீக்கிய்யா - “ரமழானின் சிறப்பு” என்ற தலைப்பிலும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி மற்றும் நஸூஹிய்யா பெண்கள் மத்ரஸா ஆகியவற்றின் பேராசிரியை ஹாஃபிழா நஹ்வீ எஸ்.எச்.கதீஜத் சுமய்யா முஅஸ்கரிய்யா - “ஸதக்கா, ஜகாத் ஆகியவற்றின் சிறப்புகளும், அவற்றை வழங்கும் முறைகளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
மஃரிப் நேரத்தை அடைந்ததும், இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், கறிகஞ்சி, வடை வகைகள், குளிர்பான வகைகள், கடற்பாசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பரிமாறப்பட்டன.
இஃப்தார் நிகழ்ச்சி நிறைவுற்ற பின், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. துளிர் பள்ளியின் சிறப்பாசிரியை ஜெயா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில்,
மஃபதுல் ஹஸனாத் பெண்கள் தைக்கா,
அரூஸுல் ஜன்னஹ் பெண்கள் தைக்கா,
நஹ்வி அப்பா தைக்கா,
மவ்லானா அப்பா சின்ன கல் தைக்கா,
ஸாஹிப் தைக்கா,
ஹிழ்ரு தைக்கா,
ஆனா கானா தைக்கா,
ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தைக்கா,
பாத்திமா நாயகி தைக்கா,
கவ்து முஹ்யித்தீன் தைக்கா,
வாவு தைக்கா,
நுஸ்கிய்யா தைக்கா
ஆகிய - நகரின் பல்வேறு ஜமாஅத்துகளைச் சேர்ந்த பெண்கள் தைக்காக்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்ட அங்கத்தினர் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் வழங்கும் ஜகாத் - ஸதக்கா தொகைகளை துளிர் பள்ளிக்கும் வழங்கி, அதன் பணிகள் தொய்வின்றித் தொடர உதவிடுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, துளிர் நிறுவனர் வழக்குறைஞர் எச்.எம்.அஹ்மத் அறிவுறுத்தலின் படி, துளிர் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
[செய்தியில் கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 17:11 / 06.08.2013] |