மலபார் காயல் நல மன்றம் (MKWA) சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் காயலர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் செய்யது ஐதுரூஸ் (SEENA) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கொட்டும் மழையிலும் குடும்ப சங்கமம்:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 28.07.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை, கேரள மாநிலம் - கோழிக்கோடு - கே.எம்.ஏ. அரங்கில், எமது அமைப்பின் தலைவர் ஜனாப் மஸ்ஊத் தலைமையில் நடைபெற்றது.
கொட்டும் கன மழையிலும் மக்வாவின் அழைப்பை ஏற்று கோழிக்கோடு மற்றும் மலபார் வட்டாரத்தில்லுள்ள மஞ்சேரி, படகர, தலிஷேரி, கண்ணனூர், பையனூர், இருட்டி போன்ற - கோழிக்கோடு நகர சுற்றுவட்டாரத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து, அன்று மாலை 05.45 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் அனைவரும் குடும்பத்துடன் சங்கமித்தனர்.
மேலும் கூட்டத்திற்கு வந்த சிலர் அல்லாஹ்வின் உதவியால் மிகச்சிறப்பான முறையில் மலபார்வாழ் அனைத்து காயலர்களையும் ஒரே இடத்தில ஒன்று கூட்டி தங்கள் நண்பர்களையும், உற்றார் - உறவினர்களையும் பார்த்து மகிழவைத்த மக்வாவுக்கு நன்றியும் பாராட்டும் கூறி மகிழ்ந்தனர்.
துவக்க நிகழ்வுகள்:
கூட்டரங்க நுழைவாயிலில், கலந்துகொள்வோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.
துவக்கமாக அரங்க நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் ஜனாப் மஸ்ஊத் தலைமை தாங்கினார். மன்றத்தின் துணைத் தலைவர் ஜனாப் யு.எல்.செய்யித் அஹ்மத், செயலாளர் ஜனாப் உதுமான் லிம்ரா, துணைச் செயலாளர் ஜனாப் முஹ்யித்தீன் அப்துல் காதர், ஜனாப் சாளை ஜலீல், ஜனாப் சாளை அபுல் ஹசன் மற்றும் ஜனாப் வாவு அலாவுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்றத்தின் துணை செயலாளர் ஜனாப் முஹ்யித்தீன் அப்துல் காதர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மன்றத்தின் கவுரவ ஆலோசகர் ஜனாப் ஆதில் ஹைதுரூஸ் மகன் அப்துல் ரகீப் இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
மன்றத்தின் செயலாளர் ஜனாப் உதுமான் லிம்ரா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழைக்கிடையிலும் - மன்றத்தின் அழைப்பை ஏற்று குடும்பத்துடன் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் இத்தனை பேர் கலந்துகொண்டுள்ளதைப் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார்.
“நன்மையான விஷயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்” என்ற இறை வசனத்தை மேற்கோள் காட்டிய அவர், திட்டமிட்டு செயல்படுத்தப்படும் மன்றத்தின் நலத்திட்டப் பணிகளால், பயனாளிகளுக்கு நிறைவான உதவிகள் கிடைக்கப் பெறுவதாகக் கூறினார். இவற்றுக்காக அவர்கள் மனதார கேட்கும் பிரார்த்தனைகளின் பலன்கள் நம் யாவருக்கும் நன்மையாக அமையும் என்பதைக் கருத்திற்கொண்டு, மன்ற உறுப்பினர்கள் தமது நன்கொடைகளை இன்னும் ஆர்வத்துடனும், தாராளமாகவும் வழங்கிட முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
‘ஷிஃபா’ செயல்திட்டத்தின் தற்போதைய நிலை நம் மன்றத்தின் உறுப்பினர்களுக்கு விரிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது என்றாலும், இந்த நிகழ்ச்சியில் பெண்களும் இருப்பதால் ‘ஷிஃபா’ தொடர்பாக இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இதுவரை இணைந்துள்ள மற்ற மன்றங்களுடன் ஆலோசிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து, செயலாளர் விளக்கமாக எடுத்து கூறினார்.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நோன்புப் பெருநாளையொட்டி ‘ஷிஃபா’ முறைப்படி துவக்கப்படவுள்ளது என்ற நற்செய்தியை மகிழ்ச்சியுடன் கூறினார்.
சிறப்புரை:
பின்னர், கூட்டத் தலைவரும் - மன்றத் தலைவருமான ஜனாப் மஸ்ஊத் சிறப்புரையாற்றினார்.
“நல்ல அமல்களுக்கு அல்லாஹ்விடத்தில் நற்கூலி” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், மறுமையில் அல்லாஹ்விடத்தில் நம் அமல்களுக்கான கூலி கிடைக்கவேண்டும் என்றால், நாம் நம் அமல்களை எவ்வாறு பேணிக்கொள்வது என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
நடைபெற்று முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ் 2 தேர்வுகளில் நன்மதிப்பெண்கள் பெற்றுள்ள - மன்ற உறுப்பினர்களின் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில், மன்றத்தின் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டப்படவுள்ளதாக அவர் தெரிவித்து, பரிசு பெறவுள்ள மாணவ-மாணவியரை தான் மனதாரப் பாராட்டுவதாகக் கூறினார்.
மன்றத்திற்கான சந்தா தொகை நிலுவையிலுள்ள உறுப்பினர்கள் தாமதமின்றி வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், மன்றத்தின் நிதியாதாரம் பெரும்பாலும் உறுப்பினர் சந்தா தொகையை நாடியே அமைந்துள்ளதெனக் கூறினார்.
பரிசளிப்பு:
அடுத்து, ப்ளஸ் 2 - எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் நன்மதிப்பெண்கள் பெற்ற – மன்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது.
பரிசுபெற்ற மாணவ-மாணவியர் விபரப்பட்டியல்:
ப்ளஸ் 2
1, கோழிக்கோடு பிரஸ்டீஜ் மேனிலைப்பள்ளியில் பயின்று, நடந்து முடிந்த CBSE ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் A+ தரத்தைப் பெற்று சாதனை புரிந்த – மன்றத்தின் கவுரவ ஆலோசகர் ஜனாப் ஆதில் ஹைதுரூஸ் அவர்களுடைய மகள் எஸ்.எச்.அமானா.
(இவர் முன்னதாக CBSC - S.S.L.C. தேர்விலும் அனைத்து பாடங்களிலும் A+ [10 - FULL MARK] தரத்தைப் பெற்று சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.)
2, கோழிக்கோடு ரஹ்மானியா மேனிலைப்பள்ளியில் பயின்று, நடந்து முடிந்த கேரளா ப்ளஸ் 2 தேர்வில் 1106/1200 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த - மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஜனாப் நூருல் அமீன் அவர்களுடைய மகன் என்.ஏ.ஷாஹின் அஹ்மத்.
எஸ்.எஸ்.எல்.சி
தமிழ்நாடு மற்றும் கேரளா எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நன்மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவியர் விபரம்:
1, எம்.யு.பிஃதா
த.பெ. எம்.ஏ.கே.உதுமான் லிம்ரா (செயலாளர் MKWA)
2, எம்.எஸ்.செய்யித் இப்றாஹீம்
த.பெ. ஏ.எஸ்.ஐ.முஹம்மத் ஸிராஜ் (செயற்குழு உறுப்பினர் MKWA)
3, ஆர்.அனஸ் அஹ்மத்
த.பெ. எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ் (செயற்குழு உறுப்பினர் MKWA)
4, ஹாஃபிழ் கே.எம்.இம்தியாஸ் அஹ்மத்
கே.எம்.முஹம்மத் அஷ்ஃபக் (பொதுக்குழு உறுப்பினர் MKWA) அவர்களது தங்கை
5, பாத்திமா நிஹாரா
எம்.முஹம்மத் சுலைமான் (பொதுக்குழு உறுப்பினர் MKWA) அவர்களது தங்கை
பரிசுகளை, மன்ற நிர்வாகிகள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் தம் கைகளால் வழங்கினர்.
வாழ்த்துரை:
அடுத்து, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ரஃபீக் கே.ஆர்.எஸ். வாழ்த்துரை வழங்கினார்.
நமது மன்றத்தின் சார்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மன்றத்தின் உறுப்பினர்களின் சொந்தங்களுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் வருடா வருடம் வழங்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், நடப்பு கூட்டத்தில் பரிசு பெற்றுள்ள மாணவ-மாணவியரை மனதார வாழ்த்திப் பிரார்த்திப்பதாகக் கூறினார்.
சிறப்புமிக்க இந்த ரமலான் மாதத்தில், இஃப்தார் நிகழ்ச்சியில் காயலர்களை ஒரு சேர கண்டுகளிக்கும் வாய்ப்பைத் தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிய அவர், நமதூர் வறிய மக்களின் துயர் துடைக்கும் சீரிய பணியை ஆற்றி வரும் மக்வா அமைப்புக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
பொதுக்குழு உறுப்பினர் அஷ்ரஃப் (ராஜா) வாழ்த்துரை:
காவல் உள்ளவனுக்கும் காவல் இல்லாதவனுக்கும்
ஏக இறைவனாம் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே
எல்லா புகழும் புகழ்ச்சியும் அல்ஹம்துலில்லாஹ்!
ஏட்டு கல்வி அதில் ஏற்றம் மிக பெற்ற இளவல்களே வாழ்க!
பெற்றோர் ஈட்டும் செல்வமதில் ஈடு இணையற்ற செல்வங்களே வளர்க!
வாட்டும் துன்பமதில் விரட்டும் இன்பங்களே வல்லவரே வாழ்க!
உம்மை ஆட்டும் சைத்தானின் பாவ வலையை விட்டும் பக்குவமாய் வளர்க!
சூட்டும் பாசப்பூமழையாம் தாய் தந்தை போற்றி தாய் ஊட்டும் அறிவுடன்!
தந்தை வழியிலே தலை நிமிர்ந்து வாழ்க!
கூட்டும் அறிவுடன் கூட ஒழுக்கமும் கூட்டி ச்சேர்த்து வாழ்க!
இஸ்லாம் காட்டும் வழியிலே கடமை பேணியே கவலை நீங்கி வாழ்க!
ஆமீன்!
என அவர் கவிதை நடையில் வாழ்த்துரை வழங்கினார்.
இஃப்தார் - நோன்பு துறப்பு:
கூட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, அரங்கின் மேல் தளத்தில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு அனைவரும் சென்றனர். அங்கு காயல் கஞ்சி, சாலா வடை, பழ வகைகள் என பலவிதமான உணவுப் பதார்த்தங்கள் உணவு ஏற்பாட்டுக் குழுவினரால் விமரிசையாகவும், சுவைபடவும் ஆயத்தம் செய்யப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மஃரிப் தொழுகை:
இஃப்தார் நிறைவுக்குப் பின் மஃரிப் தொழுகை அங்கேயே ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. ஹாஃபிழ் எஸ்.எம்.பி.முஹம்மத் முஹ்யித்தீன் தொழுகையை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இரண்டாம் அமர்வு அரங்கின் கீழ் தளத்தில் நடைபெற்றது. துவக்கமாக அனைவருக்கும் சுவையான தேனீர் வழங்கப்பட்டது.
மழலையரின் மனமகிழ் நிகழ்ச்சி:
‘நான்’ ‘நீ’ என போட்டி போட்டுக் கொண்டு அசத்திய, சுமார் இருபத்தி ஐந்து குழந்தைகள் பங்குபெற்ற அந்த நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
நன்கொடையை அதிகரிக்க வேண்டுகோள்:
அடுத்து, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் ஸிராஜ் உரையாற்றினார்.
மன்ற உறுப்பினர்கள் சுய ஆர்வத்துடன் இதுகாலம் வரை தாராளமாக வழங்கிய நன்கொடை நிதியைக் கொண்டு, நகர்நலப் பணிகள் நிறைவாக ஆற்றப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், வழமைக்கு மாற்றமாக - மருத்துவ உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு, கூடுதலாக உறுப்பினர்கள் தமது பங்களிப்புகளை வழங்கியுதவி, இறை நற்கூலியை நிறைவாகப் பெற்றிட முன்வருமாறு கேட்டுக்கொண்டார்.
நகர்நலப் பணிகளுக்கு நன்கொடை சேகரிப்பு:
மக்வாவின் நகர்நலப் பணிகளுக்காக, இக்கூட்டத்தில் நன்கொடை சேகரிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற ஆண்களும், பெண்களுமாக ஆர்வத்துடன் வழங்கிய நன்கொடைகளின் நிறைவில், ரூபாய் 31 ஆயிரம் நகர்நல நிதியாகப் பெறப்பட்டு, மன்றத்தின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
நன்றியுரை:
நிறைவாக மன்றத்தின் துணை செயலாளர் ஜனாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
விருந்தோம்பல்:
பின்னர், இரவு உணவுக்காக அனைவரும் மீண்டும் மேல் தளத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு, இடியாப்பம் பிரியாணி தக்காளி ஜாம் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
சுவைமிக்க சமையலுக்கு பாராட்டு:
காலை 08.00 மணிக்குத் துவங்கி, அயராமல் பணி செய்து, ருசியாக சமைத்து அனைவருக்கும் விநியோகம் செய்த உணவு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜனாப் ஆப்தீன் பாய் அவர்களை கூட்டத்திற்கு வந்த அனைவரும் பாராட்டி, அவருக்காக துஆவும் செய்தனர்.
பங்கேற்றோர்:
கூட்டம் நடைபெறும் நேரத்தில் பெருமளவில் மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், அனைத்து நிகழ்வுகளிலும், ஆண்கள் - பெண்கள் - குழந்தைகள் என மொத்தம் சுமார் 280 பேர் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர் ஆப்தீன் பாய் மற்றும் உமர் அப்துல் காதர் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
கூட்டத்தின் அனைத்து படப்பதிவுகளையும், https://plus.google.com/photos/107093273045987051953/albums/5907926714126845121?banner=pwa என்ற இணையதள பக்கத்தில் சொடுக்கி, தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு, மலபார் காயல் நல மன்றத்தின் (MKWA) சார்பில், அதன் செய்தி தொடர்பாளர் செய்யது ஐதுரூஸ் சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |