தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி, தூத்துக்குடி வ.உ.சி. மைதானத்தில் இன்று மாலை 05.00 மணிக்கு துவக்கப்படுகிறது.
இப்பொருட்காட்சியின் 26க்கும் மேற்பட்ட அரங்குகளில், அரசுத் துறையின் வளர்ச்சித் திட்டப்பணிகள், 10க்கும் மேற்பட்ட அரங்குகளில் அரசு சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி நலப்பணிகள், 15க்கும் மேற்பட்ட கடைகளில் வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
பெரியோர், சிறியோருக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், ராட்டினம் போன்ற விளையாட்டு அம்சங்கள் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
இன்று மாலை 05.00 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் வரவேற்புரையாற்றுகிறார். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையுரையாற்றுகிறார்.
செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அரசு பொருட்காட்சியைத் துவக்கி வைத்து விழாப் பேரூரையாற்றுகிறார். செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெ.குமர குருபரன் விளக்கவரையாற்றுகிறார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் எல்..சசிகலா புஷ்பா, தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை, சட்டமன்ற உறுப்பினர்களான சி.த.செல்லப்பாண்டியன், கடம்பூர் செ.ராஜு, ஜி,வி. மார்க்கண்டேயன், டாக்டர் கே. கிருஷ்ணசாமி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் பி.சேவியர், என். சின்னத்துரை, மாவட்ட ஊராட்சித் தலைவர் பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.வெள்ளைப்பாண்டி, மண்டலத் தலைவர் வி.எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
துவக்க விழாவையொட்டி அமைச்சர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளனர். பொருட்காட்சி துணை இயக்குநர் கு.தாணப்பா அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்.
இவ்விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் கேட்டுக்கொண்டுள்ளார். |