மேல ஆத்தூரில் இருந்து காயல்பட்டினத்திற்கு தினமும் குழாய்கள் வழியாக அனுப்பப்படும் தண்ணீர், நகரில் உள்ள உயர்நிலை தொட்டிகளில்
ஏற்றப்பட்டு, பிறகு அட்டவணைப்படி இல்லங்களில் உள்ள இணைப்புகளுக்கு அனுப்பப்படுகிறது. பகுதி வாரியாக குடிநீர் விநியோகம் மேற்கொள்ள,
நகர் முழுவதும், சுமார் 100 வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வால்வுகளை - திறந்து, மூடுவது மூலம் - எந்தப்பகுதிக்கு, எவ்வளவு நேரம், எவ்வளவு அளவு தண்ணீர் அனுப்புவது என்று கட்டுப்படுத்தலாம்.
தெரு ஓரங்களில் அமைந்துள்ள வால்வுகளை பாதுகாக்க, சில இடங்களில் கான்க்ரீட் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில், எந்த பாதுகாப்பு ஏற்பாடும் மேற்கொள்ளப்படாமல் திறந்தவெளியில் வால்வுகள் உள்ளது. தற்போதைய நகர்மன்ற அங்கத்தினர் அக்டோபர் 2011 இல் பதவி ஏற்ற காலத்தில் இருந்து - வால்வு தொட்டிகள் அமைப்பது ஒரு பெரிய
பிரச்சனையாகவே இருந்து வந்துள்ளது.
நகரில் உள்ள வால்வு தொட்டிகளை புதுப்பிக்க - கடந்த ஆண்டு (2012), ஏப்ரல் மாதம் 3ம் தேதியன்று, டெண்டர் அறிவிப்பு நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.
அந்த விளம்பரத்தில் - வால்வு சம்பந்தமாக இரு பொருட்கள் இடம்பெற்றிருந்தன. அதில் ஒன்றான, 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 62
எண்ணங்களுக்கு வால்வு சப்ளை செய்தல் பணிக்கு மட்டும் ஒப்பந்தப்புள்ளிகள் அவ்வேளையில் பெறப்பட்டது. இருப்பினும், அந்த ஒப்பந்ததாரும்,
பொருட்களை அனுப்பாததால், அந்த ஒப்பந்த்தப்புள்ளியும் காலாவதியாகிவிட்டதாக தெரிகிறது.
மேலே காணும் விளம்பரத்தில் - இடம்பெற்றுள்ள குடிநீர் வால்வு சம்பந்தமான மற்றொரு பொருளான - பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை சீர் செய்ய
7 லட்ச ரூபாய் மதிப்பிலான பணிக்கு எவரும் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கவில்லை. அதனால் - மே 9, 2012 தேதியை இறுதி நாளாக கொண்டு,
மீண்டும் அந்த பொருளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போதும் எவரும் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்கவில்லை.
நிலுவையிலேயே இருந்த குடிநீர் வால்வுகளுக்கு தொட்டிகள் அமைக்கும் பணி, மீண்டும் இவ்வாண்டு உயிர்பெற்றது. 8.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் -
பழுதடைந்த வால்வு தொட்டிகளை மேம்பாடு செய்தல் மற்றும் கட்டுதல் பணிகள் மேற்கொள்ள, புதிதாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரி பிப்ரவரி 4, 2013 தேதியிட்ட விளம்பரம் நாளிதழ்களில் வெளிவந்தது.
பிப்ரவரி 26, 2013 அன்று திறக்கப்பட்ட டெண்டரில் ஆர். தலவாணிமுத்து என்ற ஒப்பந்ததாரர், மதிப்பீட்டு தொகையை விட 0.07 சதவீதம் குறைந்த
விலைக்கு, இப்பணியினை வென்றார்.
நகர்மன்றத் தலைவர் மீது உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் சமர்ப்பித்து, அதற்குரிய கூட்டம் -
ஏப்ரல் 5, 2013 அன்று நடைபெற இருந்ததால், மார்ச் மாதம் நகர்மன்றக்கூட்டம் நடைபெறவில்லை.
ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் இப்பணிகளுக்கு குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளிகள்
வழங்கிய ஒப்பந்ததாரர் தலவாணிமுத்துவிற்கு - பணிகள் வழங்கப்பட்டது.
8.5 லட்ச ரூபாய் மதிப்பிலான அப்பணிகள் தற்போது துவங்கியுள்ளன.
அப்பணிகள் குறித்த ஆவணங்கள்:
ஒப்பந்தப்புள்ளிகள் தெரிவிக்கும் தகவல்படி, நகரில் உள்ள சுமார் 100 வால்வுகளில், தற்போது 40 வால்வுகளுக்கு புதிதாக இரு அளவுகளில்
தொட்டிகள் அமைக்கப்படும்.
நகரில் எந்தெந்த இடங்களில் உள்ள வால்வுகளுக்கு தொட்டிகள் அமைக்கப்படும் என்ற தகவல் விரைவில் வழங்கப்படும்.
பணி ஆவணங்கள் உதவி:
ஐ.ஆபிதா சேக்,
தலைவர், காயல்பட்டினம் நகர்மன்றம். |