வரும் அக்டோபர் மாதம் 05ஆம் தேதியன்று சென்னையில் நடைபெறும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவரணி மாநில மாநாட்டில், தூத்துக்குடி - கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து மாணவர்களைப் பங்கேற்கச் செய்வது குறித்து, அதன் மாநில அமைப்பாளர் தலைமையில் காயல்பட்டினத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
>> சிறுபான்மையினருக்கென மத்திய அரசு அமைக்கும் 5 மத்திய பல்கலைக் கழகங்களில் ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும்...
>> மாணவ சமுதாயத்திற்கு வங்கியில் கல்விக் கடன் துரிதமாகக் கிடைத்திடச் செய்ய வேண்டும்... அதற்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும்...
>> கல்லூரிகளில் பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் விடுதிகள் அமைக்க வேண்டும்...
>> சமச்சீர் கல்வியில் சிறுபான்மை மொழிக்கான அங்கீகாரத்தை உறுதி செய்திட வேண்டும்...
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவரணியான முஸ்லிம் மாணவர் பேரவையின் (Muslim Students Forum - MSF) மாநில மாநாடு வரும் அக்டோபர் மாதம் 05ஆம் தேதி சனிக்கிழமை மாலை 03.00 மணியளவில், சென்னை - வெப்பேரியில், எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள பெரியார் திடலில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில், தூத்துக்குடி - கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை அதிகளவில் பங்கேற்கச் செய்வது குறித்த மாணவரணியின் கலந்தாலோசனைக் கூட்டம், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில், இம்மாதம் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணியளவில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் தலைமை தாங்கினார். அதன் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் எம்.ஷாஹுல் ஹமீத், காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவரணி தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். அதன் காயல்பட்டினம் நகர துணை அமைப்பாளர் எச்.எல்.அப்துல் பாஸித் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். மாணவரணி காயல்பட்டினம் நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத் தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து, முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், கன்னியாகுமரி மாவட்ட துணைத்தலைவர் ஆர்.பி.எம்.ஷாஹுல் ஹமீத், தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் உவைஸ், காயிதேமில்லத் பேரவை காயல்பட்டினம் நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – கட்சியின் மாணவரணி (எம்.எஸ்.எஃப்.) மாநில அமைப்பாளர் செய்யது பட்டாணி சிறப்புரையாற்றினார்.
முன்பு மாணவரணியில் சிறப்புற செயல்பட்டவர்கள்தான் இன்று கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் முக்கிய பொறுப்புகளை வகித்து வருவதாகவும், கட்சியின் வளர்ச்சிக்கு மாணவரணியின் முனைப்புடன் கூடிய செயல்பாடுகள் முக்கிய காரணமாக அமைந்திட வேண்டுமென்றும் அவர் பேசினார்.
சிறுபான்மை சமுதாய மாணவர்களின் முக்கியத் தேவைகளை வலியுறுத்தி நடத்தப்படும் மாணவரணி மாநில மாநாட்டில், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, ஆளும் அரசுகளின் கவனத்தை ஈர்த்திட வேண்டுமென அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினர் மற்றும் முன்னிலை வகித்த கன்னியாகுமரி மாவட்ட செயலாளருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
பின்னர், கீழ்க்காணும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது:-
05.10.2013 சனிக்கிழமையன்று சென்னை - வெப்பேரி பெரியார் திடலில் நடைபெறும் முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில மாநாட்டில், தூத்துக்குடி - காயல்பட்டினம் நகரங்களிலிருந்தும், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும் குறைந்தபட்சம் தலா ஒரு பேருந்து என மொத்தம் 3 பேருந்துகளில் சென்று கலந்துகொள்வதெனவும், அதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்வதெனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் நன்றி கூற, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுக்குப் பின், ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கன்னியாகுமரி மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.ஷாஜஹான், மாவட்ட துணைச் செயலாளர் எம்.நஸீம், குளச்சல் நகர பொருளாளர் ஜெய்னுல் ஆபிதீன், குமரி மாவட்ட மாணவரணி முன்னாள் அமைப்பாளர் என்.முஹம்மத் இஸ்மாஈல், மாணவரணி தூத்துக்குடி மாநகர அமைப்பாளர் இம்ரான், முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மீராசா, காயல்பட்டினம் நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் ஆகியோரும், முஸ்லிம் லீக் மாவட்ட - நகர நிர்வாகிகள் மற்றும் மாணவரணி தூத்துக்குடி - கன்னியாகுமரி மாவட்ட - நகர நிர்வாகிகளும், அங்கத்தினரும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |