தூத்துக்குடியில் வேம்பாறு, வைப்பாறு கடற்கரை பகுதிகளில் சட்டத்துக்கு விரோதமாக கார்னெட் மணல் சுரண்டப்படுவதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து ஒரு விளக்கக் குறிப்பை தொழில் துறை முதன்மை செயலாளருக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பியிருந்தார். இந்த சோதனைகள் நடைபெற்ற அன்று மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார் திடீரென பணிமாற்றப்பட்டார். இதற்கு காரணம் - சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வி.வி. மினரல்ஸ் நிறுவனம் ஆளும் கட்சிக்கு நெருக்கமானது என ஊடகச்செய்திகள் தெரிவித்தன.
மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டாலும், அவரின் அறிக்கை அடிப்படையில், விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு குழு ஒன்றினை அமைத்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த இந்த குழு, தனது அறிக்கையை தற்போது தமிழக முதல்வரிடம் வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அறிவிக்கப்பட்டிருந்த தாது மணல் எடுப்பதற்கான தடை, தற்போது மேலும் நான்கு மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் குறித்து தகவல் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் - கூடுதலாக நான்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆய்வுகள் எத்தனை நாட்களில் முடிக்கப்படவேண்டும் என்ற தகவலும் இல்லை.
முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு:
ஒரு நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், அரசாங்கத்திற்கு வருவாயை ஈட்டித் தருவதிலும் கனிமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கனிமங்களை அரசின் முறையான அனுமதியின்றியோ அல்லது அரசு அனுமதித்த அளவுக்கு மேல் வரம்பு மீறியோ சுரங்க நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது. தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக ‘கடற்கரை கனிமங்கள்’, அதாவது ‘BEACH MINERALS’ எனப்படும் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்றவை எடுக்கப்படுவதாக பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகளுடன் இது குறித்து கலந்தாலோசித்த நான், தூத்துக்குடி மாவட்டத்தில் கார்னட், இல்மனைட் மற்றும்
ரூட்டைல் கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வருவாய்த் துறைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. அவர்கள் தலைமையின் கீழ், வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, இது குறித்து ஒரு மாத காலத்திற்குள் ஆய்வறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்குமாறு
உத்தரவிட்டேன்.
இது மட்டுமல்லாமல், இந்தச் சிறப்புக் குழுவின் ஆய்வு முடியும் வரை சுரங்க நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு தூத்துக்குடி மாவட்ட கனிமத் துறை உதவி இயக்குநருக்கும் உத்தரவிடும்படி நான் பணித்திருந்தேன்.
எனது உத்தரவின் பேரில், 1957 ஆம் ஆண்டு சுரங்கம் மற்றும் கனிமங்களின் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் பிரிவு 24-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி மேற்படி சிறப்புக் குழு விரிவான ஆய்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொண்டது. இந்தச் சிறப்புக் குழுவில் முதுநிலை மாவட்ட வருவாய் அலுவலர், நில அளவை இணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணை இயக்குநர் மற்றும் கூடுதல் தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் ஒருங்கிணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
இதைத் தவிர, முதுநிலை துணை ஆட்சியர், நில அளவை உதவி இயக்குநர், நில அளவை ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் அல்லது உதவி புவியியலாளர் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மண்டல சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் அடங்கிய ஆறு உப குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தக் குழுக்களும் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
மேற்படி குழுக்கள், முதற்கட்டமாக 12.8.2013, 13.8.2013 மற்றும் 14.8.2013 ஆகிய நாட்களிலும், இரண்டாவது கட்டமாக 19.8.2013 மற்றும் 20.8.2013 ஆகிய நாட்களிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டன. மூன்றாவது கட்டமாக, 29.8.2013 மற்றும் 30.8.2013 ஆகிய தேதிகளில் கனிம பகுப்புத் தொழிற்சாலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறப்புக் குழு மற்றும் உப குழுக்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், வருவாய்த் துறை செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. அவர்கள் இன்று (17.9.2013) தலைமைச் செயலகத்தில் என்னிடம் ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்தார். இதனைப் பெற்றுக் கொண்ட நான், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் கடற்கரை கனிமங்களான கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் ஆகியவற்றை எடுக்க அனுமதி
வழங்கப்பட்டுள்ள குத்தகைதாரர்களால் பெருங்கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பதைக் கண்டறியும் வகையில், தமிழ்நாட்டில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள எஞ்சிய 71 பெருங்கனிம குவாரிகளை இந்தச் சிறப்புக் குழு ஆய்வு செய்து உண்மை நிலையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன்.
வருவாய்த் துறைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. தலைமையில் இந்தச் சிறப்புக் குழு செயல்படும்.
மேலும், மேற்படி ஆய்வு முடியும் வரை, கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் பெருங்கனிம குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும், போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்கவும் உரிய உத்தரவினை பிறப்பிக்கும்படி நான் ஆணையிட்டுள்ளேன்.
இதர மாவட்டங்களில் உள்ள பெருங்கனிமக் குவாரிகள் குறித்த ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், அதன் அடிப்படையில் பெருங்கனிமக் குவாரிகள் குறித்து ஒரு கொள்கை முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9. |