காயல்பட்டினம் எல்லைக்குள் (வட மற்றும் தென் பாக கிராமங்களில்) உள்ள அரசு / பிற இடம் என குறியிடப்பட்டுள்ள சர்வே எண்களை
காயல்பட்டணம்.காம் அண்மையில் வெளியிட்டிருந்தது. அதில் பல சர்வே எண் நிலங்கள் - பல
காலகட்டங்களில், பல வழிகளில் (உதாரணமாக 1985ஆம் ஆண்டு UDR திட்டம்) பட்டா வழங்கப்பட்டு தனியார் நிலமாக மாறிவிட்டதாக
காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் சிலரால் தெரிவிக்கப்பட்டது.
கடந்த நூற்றாண்டின் துவக்கத்து ஆவணங்களின் படி - காயல்பட்டினம் தென்பாக கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களின் அளவு - சுமார் 4078
ஏக்கர். இதில் சுமார் 712 ஏக்கர் நிலம் - புறம்போக்கு நிலம் என குறியிடப்பட்டிருந்தது. சில காரணங்களுக்காக முறையாக சர்வே செய்யப்படாத நிலங்களும் இதில் அடங்கும்.
1909 ஆம் ஆண்டு அரசு ஆவணம் ...
குறிப்பாக சர்வே எண் 468 மட்டும் சுமார் 292 ஏக்கர் பரப்பளவு
கொண்டது. இது காயல்பட்டினத்தின் தென் பகுதியில் பல தெருக்களை உள்ளடக்கிய சர்வே எண் ஆகும். இதற்கு பிற்காலத்தில் பட்டா
வழங்கப்பட்டது.
தலையாரி, கிராம நிர்வாக அதிகாரி, வட்டாட்சியர், அரசியல்வாதிகள் போன்றோரின் துணை கொண்டு, பல அரசு நிலங்கள் - தனியார் வசம்
சென்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் - இந்தியா முழுவதும் அவ்வப்போது எழுவதுண்டு. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல.
பொதுவாக அரசு புறம்போக்கு நிலங்கள், நிலமில்லா ஏழைகளுக்கு - சில விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்படும். ஆனால் இன்று காயல்பட்டினத்தில்
பல அரசு புறம்போக்கு இடங்கள் - காலப்போக்கில் தனியாருக்கு மாற்றப்பட்டுவிட்டதாக வலுவான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. குறிப்பாக, அவை
தகுதியான ஏழைகளுக்கு செல்லாமல், சில செல்வந்தர்கள் பெயரில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
காயல்பட்டின தென்பாக கிராமப் பகுதியில் 712 ஏக்கர் புறம்போக்கு நிலம் என இருந்த நிலை - உண்மையில் தற்போது எந்த நிலையில் உள்ளது
என்பது - காயல்பட்டினத்து நிலங்களின் விலைகள் போல் - மிகப்பெரிய விலைமதிக்கவியலா கேள்வி.
காயல்பட்டினத்தின் புறம்போக்கு நிலங்களின் தற்போதைய நிலைகுறித்து அவ்வப்போது - காயல்பட்டணம்.காம் செய்திகள் வெளியிட திட்டமிட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்படும் செய்திகளை ஒரே இடத்தில, எளிதாக காண புறம்போக்கு நிலங்கள் கண்காணிப்பு (PORAMBOKE LAND WATCH) என்ற பக்கம், வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE) பக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. |