சிறுபான்மையினருக்கான கடன் திட்டங்கள் குறித்து விளக்குவதற்காக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட - தூத்துக்குடி மாவட்டத்தின் சிறுபான்மையின பிரமுகர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
சிறுபான்மையினருக்காக, தமிழக அரசின் டாம்கோ நிறுவத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவித் திட்டங்கள் குறித்து விளக்குவதற்கான கருத்தரங்கம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள முத்து அரங்கில் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல மாவட்ட அலுவலர் ஆ.சிவகாமி வரவேற்புரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தலைமையுரையாற்றினார்.
டாம்கோ கடனுதவித் திட்டங்கள் குறித்த விபரங்களடங்கிய விரிவான கையேட்டை, அதன் மேலாண்மை இயக்குநர் அ.முஹம்மத் அஸ்லம் முதல் பிரதியை வெளியிட, மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, டாம்கோ கடனுதவித் திட்டங்கள் குறித்து மேலாண்மை இயக்குநர் விளக்கிப் பேசினார்.
இக்கருத்தரங்கில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பாண்டியன், டாம்கோ நிறுவன மேலாளர் ஆர்.மனோகரன் ஆகியோர் மேடையில் இருந்தனர்.
மாவட்ட தொண்டு நிறுவனங்களின் அங்கத்தினர், வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினத்திலிருந்து, ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகி ஹாஜி ஏ.ஆர்.இக்பால், ஐக்கிய விளையாட்டு சங்க செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ், மக்கள் சேவா கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலீ, இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) பொறுப்பாளர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், கடையக்குடி தேவாலய பங்குத்தந்தை விக்டர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷம்சுத்தீன், காயல்பட்டினம் நகர்மன்ற 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, முஸ்லிம் மகளிர் உதவும் சங்க நிர்வாகி அ.வஹீதா, அவரது கணவர் சின்னத்தம்பி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், அதன் அலுவலர் செல்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் காயல்பட்டினத்திலிருந்து கலந்துகொண்டனர்.
இக்கருத்தரங்கில் பங்கேற்றோர், சிறுபான்மையினருக்கான - அரசின் கடனுதவித் திட்டங்கள் குறித்து பல கேள்விகளைக் கேட்க, டாம்கோ மேலாண்மை இயக்குநர் அ.முஹம்மத் அஸ்லம் அவற்றுக்கு விளக்கமளித்தார்.
கல்விக் கடனுதவி பெறுவதற்காக, மாணவருக்குத் தேவைப்படும் பயில்வுச் சான்றிதழ் (bonofide certificate) குறித்து ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை கேள்வியெழுப்பி விளக்கம் பெற்றார்.
விபரமறியாத சிறு மாணவ-மாணவியருக்கும் தனித்தனி வங்கிக் கணக்குகள் துவக்கப்பட வேண்டும் என்ற நியதி குறித்தும், வட்டி அடிப்படையிலான எந்த திட்டமும் இஸ்லாம் மார்க்கத்தில் ஏற்றுக்கொள்ளப்படாததால் வட்டியில்லா கடன் திட்டத்தை முஸ்லிம்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும், இக்கருத்தை தமிழக அரசிடம் பரிந்துரையாக முன்வைக்க வேண்டுமென்றும், இளைஞர் ஐக்கிய முன்னணி பொறுப்பாளர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் கூறினார்.
அதற்கு விளக்கமளித்த டாம்கோ மேலாண்மை இயக்குநர், அரசால் வழங்கப்படும் நிதி, விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாகவும், பாதுகாப்புடனும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திலேயே அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம் என்ற நியதி உள்ளதாகக் கூறினார்.
வட்டியில்லா கடனுதவித் திட்டம் குறித்த கேள்விக்கு விடையளித்த அவர், அரசின் சார்பில் என்ன திட்டம் உள்ளதோ அதைப் பற்றி விளக்கவே தாங்கள் வருகை தந்துள்ளதாகக் கூறினார். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு அவர் பதில் எதுவும் அளிக்கவில்லை. |