நடப்பாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, தமிழ்நாடு ஹஜ் குழுமம் மற்றும் தனியார் ஹஜ் குழுமங்களின் மூலமாக ஏராளமான பயணியர் புறப்படத் துவங்கியுள்ளனர்.
காயல்பட்டினத்தில் இம்மாதம் 12ஆம் தேதி வியாழக்கிழமையிலிருந்து ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு துவங்கியது. அன்று மாலையில், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆத் - தனியார் ஹஜ் குழுமத்தின் மூலமாக ஹஜ் பயணத்திற்காக புறப்பட்டுச் சென்றார். மாலை 05.30 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் அவரை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஹஜ் குறித்த விளக்கவுரையாற்ற, குருவித்துறைப் பள்ளியின் இமாம் மவ்லவீ எம்.எல்.முஹம்மத் அலீயின் துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியரும், சதுக்கைத் தெரு நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவின் முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ, இம்மாதம் 22ஆம் தேதியன்று, தமிழ்நாடு ஹஜ் குழுமத்தின் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவருக்கு, இம்மாதம் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 05.30 மணியளவில், நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவில் வழியனுப்பு நிகழ்ச்சி, அஹ்மத் நெய்னார் பள்ளியின் முத்தவல்லி ஹாஜி எஸ்.கே.இசட்.ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் நடைபெற்றது. ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிசளைத் துவக்கி வைத்தார். நஸூஹிய்யா மத்ரஸாவின் செயலாளர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை வரவேற்றுப் பேசினார்.
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ ஏற்புரையாற்றினார்.
எம்.ஏ.உமர் கத்தாப் நன்றி கூற, துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சியில், நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவின் நிர்வாகிகள், ஆசிரியையர், மாணவியர் திரை மறைவிலிருந்தவாறு கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிகளின் நிறைவில், ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள ஹாஜிகள், தாம் அறிந்தோ - அறியாமலோ செய்த குற்றங்குறைகளுக்காக பொது மன்னிப்பு கேட்டனர். அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோர், ஹஜ் பயணியரை கட்டித் தழுவி, கைலாகு செய்து - பிரார்த்தித்து வழியனுப்பி வைத்தனர். |