தூத்துக்குடி அனல் மின் நிலையம் 33 ஆண்டுகள் கடந்து உற்பத்தியில் புதிய சாதனை படைத்து வருவதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக்குறிப்பு வருமாறு:-
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.153 கோடி அளவில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று மின் உற்பத்தியால் புதிய சாதனை படைத்து வருகின்றது.
தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை பெற தமிழக முதலமைச்சர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதோடு, புதிய அனல் மின் நிலையங்கள் தொடங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அத்துடன், ஏற்கனவே செயல்படும் மின் நிலையங்கள் மூலம் கூடுதல் மின்சாரம் பெறவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தின் தென் கோடி கடற்கரையில் இடமான தூத்துக்குடி அனல் மின் நிலையம் நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதல் அலகு மூலம் 09.07.1979 அன்றும், இரண்டாவது அலகு மூலம் 07.12.1980 அன்றும் மின்சார உற்பத்தி துவங்கியது. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.89 கோடி மதிப்பீட்டில் 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாவது அலகு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அலகு 16.04.1982 அன்று தனது உற்பத்தியைத் தொடங்கியது.
ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.804 கோடி திட்ட மதிப்பீட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு, ஐந்தாவது அலகுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 31.03.1991 மற்றும் 11.02.1992 ஆகிய இரு நாட்களில் இவ்விரு அலகுகளும் உற்பத்தியைத் துவக்கின.
210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2002-2003ஆம் ஆண்டு தூத்துக்குடி அனல் மின் நிலையம் 8,193.01 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்தது. 2012-2013ஆம் ஆண்டு இதே நிலையம் 8284.14 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்து 2002-2003ஆம் ஆண்டின் சாதனையை முறியடித்துள்ளது.
2005ஆம் ஆண்டு தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு துறைமுகம் வழியாக 61 லட்சத்து 05.526 மெட்ரிக் டன் நிலக்கரி கையாளப்பட்டது.
2012ஆம் ஆண்டில் தூத்துக்குடி அனல் மின்நிலையம் துறைமுகம் வழியாக 65 லட்சத்து 17,662 மெட்ரிக் டன் நிலக்கரி கையாளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் கடந்தாண்டு அதிகபட்சமாக பிப்ரவரி மாதத்தில் 99.39 சதவிகிதமும், மார்ச் மாதத்தில் 99.23 சதவிகிதமும் மின் உற்பத்தியை செய்துள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையம் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளதோடு, தமிழகத்தின் 9 சதவிகிதம் தன்னிறைவைப் பூர்த்தி செய்து வருகிறது.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தெரிவித்துள்ளதாக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. |