THE HINDU, THE BUSINESS LINE, FRONTLINE, SPORTSTAR போன்ற ஆங்கில பத்திரிக்கைகளை வெளியிடும் கஸ்தூரி & சன்ஸ் குழுமத்தில் இருந்து தி இந்து என்ற பெயரில் தமிழ் நாளிதழ் - செப்டம்பர் 16, 2013 முதல் வெளிவர துவங்கியுள்ளது. ஆரம்பமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து இப்பத்திரிகை நாள்தோறும் அச்சிடப்படும். இப்பத்திரிக்கையின் ஆசிரியராக - ஆனந்த விகடனின் முன்னாள் ஆசிரியர் கே. அசோகன், கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டார்.
உலகின் பல நாடுகளில் - தொலைக்காட்சி, இணையதளங்களின் வளர்ச்சியால், பத்திரிகைகளின் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் - ஆண்டொன்றுக்கு 15% - 18% வளர்ச்சியினை பத்திரிக்கைகள் காண்கின்றன. குறிப்பாக - தமிழ் பத்திரிக்கை உலகம்
ஆண்டொன்றுக்கு சுமார் 38 சதவீதம் அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது.
தென் இந்திய ஊடகங்கள் - 2011-12ஆம் ஆண்டில், விளம்பரம் மூலம் ரூபாய் 21,190 கோடி வருவாய் ஈட்டினர். இதில் தொலைக்காட்சிகளின் பங்கு
58 சதவீதம் ஆகும். பத்திரிக்கைகளின் பங்கு 29 சதவீதம் ஆகும். இத்துறை ஆண்டொன்றுக்கு 14 சதவீத வளர்ச்சி அடைந்து வருவதாகக்
கூறப்படுகிறது.
தமிழக ஆங்கில பத்திரிக்கை சந்தையில் வெகு நாட்களாக முன்னணியில் இருந்த தி இந்து - கடந்த சில ஆண்டுகளாக THE TIMES OF INDIA, DECCAN
CHRONICLE போன்ற பத்திரிக்கைகளின் வரவால் - கடுமையான போட்டியைச் சந்தித்து வருகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் - NDTV தொலைகாட்சி நிறுவனத்தோடு, தி ஹிந்து நாளிதழ் துவக்கிய ஆங்கில சேனலை, சில மாதங்களுக்கு முன் - 15 கோடி ரூபாய்க்கு தினத்தந்தி குழுமத்திற்கு தி ஹிந்து குழுமம் விற்றது.
இந்தச் சூழலில்தான், பல பத்திரிக்கைகள் ஆக்கிரமித்திருக்கும் தமிழ் பத்திரிக்கை உலகிற்குள் - தி இந்து - நுழைகிறது.
தி இந்து தமிழ் நாளிதழ் வார நாட்களில் ரூபாய் 3க்கும், வார இறுதியில் ரூபாய் 4க்கும் விற்பனை செய்யப்படும்.
புதிய தி இந்து நாளிதழுக்கு போட்டியாக சந்தையில் சிவந்தி ஆதித்தன் குழுமத்தைச் சார்ந்த தினத்தந்தி, 2005 ஆம் ஆண்டு சன் குழுமத்தால் வாங்கப்பட்ட தினகரன், டி.வி.ராமசுப்பையர் குழுமத்தைச் சார்ந்த தினமலர் ஆகியவை உள்ளன. இம்மூன்று பத்திரிக்கைகளும் இணைந்து நாளொன்றுக்கு 37 லட்சம் பிரதிகள் விற்பனை செய்கின்றன. இதர சிறு பத்திரிக்கைகள் சுமார் 3 லட்ச பிரதிகளை விற்பனை செய்கின்றன.
பத்திரிகைகளை இல்லங்களுக்குக் கொண்டு செல்ல செய்தித் தாள்கள் விற்கும் கடைகளையே தமிழ் நாளிதழ்கள் நம்பியுள்ளன. சுமார் 40 சதவீதம் தமிழ் நாளிதழ்கள் விற்பனை, கடைகள் மூலமாகவே அன்றாடம் நடைபெறுகிறது. ஆங்கில நாளிதழ்களைப் பொருத்த வரை 15 சதவீத விற்பனை மட்டுமே கடைகள் மூலம் நடைபெறுகிறது. மீதி விற்பனை சந்தாதாரர்கள் மூலமாகவே நடைபெறுகிறது. கடைகள் மூலம் விற்கப்படும் ஒவ்வொரு பிரதிக்கும், 80 பைசா லாபம் - முன்னணி தமிழ் நாளிதழ்களால் - கடைகளுக்கு வழங்கப்படுகிறது. இது ஐந்தாண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகும். பத்திரிக்கைகளின் பிரதி விலையில் இது 20 சதவீதம் ஆகும்.
தி இந்து நாளிதழ் துவக்கமாக 5 லட்ச பிரதிகளுக்கு மேல் அச்சிட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு பிரதிக்கும் பத்திரிக்கையின் விலையில் 40 சதவீதம் லாபமாக கோரி பல பகுதிகளில் - புதிதாக சந்தைக்கு வந்துள்ள தி இந்து நாளிதழை கடைகள் விற்பனைக்கு வைக்கவில்லை.
கடுமையான போட்டிகள் நிறைந்தது தமிழ் பத்திரிக்கை உலகம். பிற மாநிலங்களில் இந்திய மொழிகளில் பத்திரிக்கைகள் நடத்தும் THE TIMES OF INDIA நாளிதழும் தமிழ் சந்தையில் நுழையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில் தி இந்து நாளிதழின் தமிழ் வடிவம், காலூன்றுவது எளிதாக இருக்காது. இருப்பினும், இப்போட்டிகளை எதிர்கொள்ள - அதன் 135 ஆண்டு பாரம்பரியம், சொந்த மாநில அனுபவம் ஆகியன அதற்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
தி இந்து தமிழ் நாளிதழை இணையத்தில் காண முகவரி - tamil.thehindu.com
|