திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதா கிருஷ்ணனின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக-வைச் சேர்ந்த மனோகர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்ட சபைத் தேர்தலில், திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து, அதிமுக கட்சி சார்பில் நான் போட்டியிட்டேன். இந்தத் தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேர்தலின் போது, தேர்தல் விதிமுறைகளை மீறி அதிகமாக பணம் செலவழித்தார். மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது இரண்டு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. இதன் மூலம் தேர்தல் வெற்றியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.அதனால், தேர்தலில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்.
இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். அதில், என் வெற்றிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எந்த உண்மையும் இல்லை. அதனால் அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் தெரிவித்தார்.
இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் நீதிபதி அளித்த உத்தரவு: தேர்தல் மனுதாரர் தாக்கல் செய்த மனுவில் உள்ள அனைத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதிவாதி தேர்தல் விதிமுறைகளை மீறி அதிகமாக பணம் செலவழித்தார் என மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதிகமாக செலவழித்த தொகையின் மதிப்பு தொடர்பான எந்த ஆதாரமும் இல்லை. தொகையும் குறிப்பிடவில்லை.
மேலும், வாக்கு எண்ணிக்கையின் போது இரண்டு இயந்திரங்கள் செயல்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கான ஆதாரமும் இல்லை. இதை வைத்து பார்க்கும் போது பிரதிவாதியின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
இது தவிர, தபால் வாக்குப் பதிவில், தபாலின் நிறம் இளம் சிவப்பில் (பிங்க்) இருக்க வேண்டும். ஆனால், அதன் நிறம் மாறி இருந்தது எனக் கூறியிருக்கிறார். மேலும், வாக்கு பதிவின் போது 93-வது வாக்குச் சாவடியில் இருந்த இயந்திரத்தின் நிறுத்தும் பொத்தான் (closing button) செயல்படவில்லை. அதை தேர்தல் கண்காணிப்பாளரிடம் மனுதாரர் தெரிவித்த போது, தேர்தல் கண்காணிப்பாளர் அதை கண்டு கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார். இது போன்ற தகவல்கள் அடிப்படையில் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதற்கான முகாந்திரம் உள்ளது. அதனால், மனுவை தொடர்ந்து விசாரிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தினமணி |