International Indian School Riyadh (IISR) - சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள பள்ளிக்கூடமாகும். இந்தியாவின் Central Board of Secondary Education (CBSE) பாடத்திட்டப்படி நடத்தப்படும் இப்பள்ளிக்கூடம் 1982 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என இரு பிரிவுகளாக செயல்புரியும் இப்பள்ளிக்கூடத்தில் சுமார் 10,000 மாணவ மாணவியர் பயில்கின்றனர்.
மேலும் - சுமார் 500 ஆசிரியர்கள் - இப்பள்ளிக்கூடத்தில் பணிப்புரிகின்றனர்.
இப்பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகள் குழு (SCHOOL MANAGEMENT COMMITTEE) தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. மாணவர்களின் பெற்றோர்கள் - இத்தேர்தலில் பங்கேற்க தகுதி பெற்றவர்கள் ஆவர். கடந்த திங்கள் (செப்டம்பர் 9) அன்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் 16 பேர் பெயர் இடம்பெற்றிருந்தது.
தேர்தலில் வாக்களிக்க - ஆசிரியர்கள்/பணியாளர்களின் கணவன்/மனைவி, கல்விக்கட்டணம் கட்டாதாவர்கள் நீங்கலாக - 5123 பேர் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
சனிக்கிழமை (செப்டம்பர் 14) இரவில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில் காயல்பட்டினம் நெசவு தெருவை சார்ந்த எஸ்.ஹெச். ஹைதர் அலி (பெற்ற வாக்குகள் 1014) உட்பட 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
நடைபெற்ற தேர்தலை கண்காணிக்க 7 நபர் குழு அமைக்கப்பட்டிருந்தது. மேலும் - இந்திய தூதரகத்தில் இருந்து ஒருவரும், சவுதி அரசாங்கம் சார்பாக ஒருவரும் இத்தேர்தலை கண்காணித்தனர்.
சுமார் 33 சதவீத பெற்றோர்கள் தேர்தலில் வாக்களித்ததாக, இப்பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் எஸ்.எம். சௌகத் பெர்வேஸ் - அரப் நியூஸ் பத்திரிக்கைக்கு தெரிவித்தார்.
புதிதாக தேர்வாகியுள்ள குழுவிற்கு முன்னர் - பெண் ஆசிரியர்களின் நிலையை சீர்படுத்துதல், கல்வி தரத்தை உயர்த்துதல், பள்ளியின் வரவு செலவு கணக்கின் வெளிப்படைத்தன்மை, மாணவர் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவது, பெண்கள் பிரிவிற்கு - அதிக மாணவிகள் படிப்பதால் - புதிய இடம் தேர்வு செய்வது - போன்ற பிரச்சனைகள் உள்ளது என அரப் நியூஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. |