ஆறுமுகநேரி - பேயன்விளை பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ளது காயல்பட்டினம் - ஆறுமுகநேரி மேனிலைப்பள்ளி என்ற கே.ஏ.மேனிலைப்பள்ளி. இப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 210 மாணவ-மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று காலை 10.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் இரா. பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், ஆறுமுகநேரி பேரூராட்சி மன்றத் தலைவர் அ.கல்யாண சுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, இப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 115 மாணவர்கள், 95 மாணவியர் என மொத்தம் 210 மாணவ-மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை இணைந்து வழங்கினர்.
முன்னதாக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவருக்கும், ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கும் சால்வை அளித்து சங்கை செய்தனர்.
காயல்பட்டினம் - ஆறுமுகநேரி ஆகிய இரு நகரங்களின் உறவுக்கும் இப்பள்ளி பல்லாண்டு காலமாக பாலமாகத் திகழ்ந்து வருவதாக தனது வாழ்த்துரையில் கூறிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், இப்பகுதியிலிருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் பலர் உருவாக வேண்டுமென்ற தனது ஆவலையும் வெளிப்படுத்தினார்.
இவ்விழாவில், பள்ளி மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
[செய்தி திருத்தப்பட்டது @ 15:06 / 23.09.2013] |